தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிலாளர் சட்டங்களையும், விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், நாட்டிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக போட வேண்டும்என்றும், விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவினத்து டன் சி2+50 சதவீதம் விலை உயர்த்தி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்றும் தனியார்மயக் கொள்கைகளைக் கைவிடவேண்டும் என்றும் மோடி அரசாங்கத்தை வலியுறுத்தி மேதின சபதம்ஏற்க வேண்டும் என்று மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு இணைந்து அறைகூவல் விடுத்துள்ளன.

சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைவாரி சம்மேளனங்கள் இணைந்துள்ள கூட்டுமேடையும், அனைத்து விவசாயிகளின் அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் ஏப்ரல் 28 அன்று இணையம் வழி நடத்திய கூட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளர்கள் விரோத, நாசகரக் கொள்கைகளுக்கு எதிராகத் தொழிலாளர்கள்-விவசாயிகள் ஒன்றுபட்ட போராட்டத்தை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது என்று ஒருமனதாகத் தீர்மானிக்கப் பட்டது.சமீப காலங்களில் மத்திய அரசின்வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும்பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்களின்போது, தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே அதிகரித்துவரும் ஒருமைப்பாடு குறித்து திருப்தி தெரிவித்தது. மத்திய அரசு புதிய தொழிலாளர் சட்டங்கள் மூலமாக தொழிலாளர்களை அடிமை நிலைக்குத் தள்ள முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. ஜனநாயகஉரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின் றன, பேச்சுரிமை, அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக் கூறும் உரிமை முதலானவை மறுக்கப்பட்டு அரசாங்கம் எதேச்சதிகார, பாசிச நோக்கத்துடன் சென்றுகொண்டிருக்கிறது.

இத்தகைய அரசாங்கத்தின் நாசகர, காட்டுமிராண்டித்தனமான கொள்கைகள் இப்போது அரசாங்கம்கோவிட்-19 கொரோனா வைரசின் இரண்டாவது தொற்றை எதிர்கொள்வதிலும் பிரதிபலிக்கிறது. போதுமான அளவிற்கு பொது சுகாதார அமைப்புகள் இல்லாததன் காரணமாக தடுத்திருக்க வேண்டிய சாவுகளைத் தடுக்க முடியாது,திண்டாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இத்துடன் இப்போது மிகவும்பிற்போக்கான தடுப்பூசிக் கொள்கையை அறிவித்திருக்கிறது. மக்களின் உயிரிலும் கொள்ளைலாபம் ஈட்டக்கூடிய விதத்தில் தடுப்பூசிக் கொள்கையை உருவாக்கி, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி அளித்திருக் கிறது.மத்திய அரசின் காட்டுமிராண்டித் தனமான இக்கொள்கையை இக்கூட்டம் கண்டிக்கிறது.

அறிவிக்கப்பட்டுள்ள தடுப்பூசி கொள்கையைக் தகர்த்தெறிய வேண்டும் என்றும், அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கிட வேண்டும் என்றும் கோருகிறது.வரும் மே தினத்தன்று தொழிலாளர்கள்-விவசாயிகளின் உரிமைகளை உயர்த்திப்பிடிக்கக்கூடிய விதத்திலும்,  தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிலாளர் சட்டங்களையும், விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், நாட்டிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக போட வேண்டும் என்றும், விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவினத்துடன் சி2+50 சதவீதம் விலை உயர்த்தி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்றும் தனியார்மயக் கொள்கைகளைக் கைவிட வேண்டும் என்றும் கோரி மேதின சபதம் ஏற்க வேண்டும் என்றும் தொழிலாளர்களையும்-விவசாயிகளையும் கூட்டம் அறைகூவி அழைக்கிறது.