ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி எடுப்பில் வரி விதிப்பது பற்றி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்போம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

எனினும், இன்று (புதன்கிழமை) அளித்த புதிய மழுப்பலான விளக்கத்தால், இந்த விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது.

தொழிற்துறை அமைப்புகளான சிஐஐ, எப்.ஐ.சி.சி.ஐ. மற்றும் அசோசேம் ஆகியவற்றுடன் உரையாடியபோது அவர் விளக்கம் ஒன்றை அளித்தார்.

பெரிய சர்ச்சைகளையும், எதிர்ப்பையும் கிளப்பைய பி.எஃப். மீதான வரி விதிப்பு குறித்து விளக்கம் அளித்த நிதியமைச்சகம், ஓய்வு பெறும் போது இ.பி.எஃப் சேமிப்புகள் மீது வரி விதிப்பு கிடையாது, அதாவது, ஓய்வு பெறும் ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி சேமிப்புத் தொகையில் 60% தொகையை, தங்களுக்கு மாதாந்திர பென்ஷன் வழங்கும் ஆண்டு வைப்பு சேமிப்புத் திட்டத்தை தேர்வு செய்யும் பட்சத்தில் வரி விதிப்பு கிடையாது என்றும் 60% தொகைகான வட்டியின் மீது மட்டுமே வரி விதிப்பு என்றும் பூசி மெழுகி விளக்கம் அளித்தது.

பட்ஜெட் அறிவிப்பில், ஓய்வு பெறும்போது எடுக்கப்படும் 40% தொகைக்கு வரி விதிப்பு கிடையாது என்று வெளியானது.

இந்நிலையில், ஜேட்லி விளக்கம் அளிக்கும் போது, வருவாய் பெருக்கத்துக்காக இந்த வரிவிதிப்பு இல்லை, அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்க உதவுவதற்காகவே இந்த வரிவிதிப்புத் திட்டம் என்று விளக்கம் அளித்தார்.

“இ.பி.எஃப். சேமிப்பில் 60% தொகை ரெகுலர் பென்ஷனுக்கான ஆண்டு வைப்பாக மாற்றப்படும் பட்சத்தில் வரிவிதிப்பு இல்லை. இதன் குறிக்கோள் என்னவெனில் பென்ஷன் பெறுவதற்கு மக்களை ஊக்குவிப்பதாகும், சேமிப்பு முழுதும் செலவு செய்யப்படுவதை தடுக்கும் நோக்கமாகும்” என்றார்.

மேலும், மாதாந்திர வருவாய் ரூ.15,000-க்கும் அதிகமாக ஈட்டும் தனியார் துறை ஊழியர்களின் மீதே இதன் தாக்கம் இருக்கும். மாத வருவாய் ரூ.15,000-க்கும் குறைவாக ஈட்டும் இ.பி.எஃப். உறுப்பினர்கள் சுமார் 3 கோடி பேர் உள்ளனர், இவர்கள் இந்த வரிவிதிப்பினால் பாதிப்படைய மாட்டார்கள் என்றார்.

ஏப்ரல் 1, 2016-க்குப் பிறகான ஊழியர் வருங்கால வைப்பு நிதி பிடித்தத்திற்கு மட்டுமே இந்த வரிவிதிப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.