தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைப்பு: வேலை இழப்புகள் அதிகரிக்கும் அபாயம் – துறை வல்லுநர்கள் கணிப்பு

தொலைத் தொடர்பு துறையில் நிறுவனங்கள் இணைந்து வருவதை அடுத்து, அதிக எண்ணிக்கையிலான வேலை இழப்புகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 6 முதல் 12 மாதங்களில் வேலை இழப்புகள் அதிகரிக்கும் என இந்த துறை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். முன்பு இந்த துறையில் 9 நிறுவனங்கள் இருந்தன. ஆனால் இப்போது 4 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன.

எக்ஸெலிடி குளோபல் (Excelity Global), நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுமித் சபர்வால் கூறும்போது, டெலிகாம் நிறுவனங்களின் செலவுகளில் 40 சதவீதம் முதல் 43 சதவீதம் வரை, சம்பளம், ஊக்கத்தொகை மற்றும் இதர செலவுகளுக்கே போய்விடுகிறது. இப்போது நிறுவனங்கள் இணைவதால், பணியாளர்களின் எண்ணிக் கையைக் குறைக்கவேண்டிய சூழல் ஏற்படும். இல்லையெனில் உயர்பதவிகளில் இருப்பவர் களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டி இருக்கும். இருந்தாலும் நடுத்தர மற்றும் கீழ்நிலை பணியாளர்கள், குறிப்பாக கால் சென்டர், பிபிஓ, இதர சேவை வழங்கும் பணியாளர்கள் சுமார் 1.5 லட்சம் நபர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 30 சதவீதம் பேர் வரை வேலையிழப்பை சந்திக்கக்கூடும்.

சேவைகள் மற்றும் விற்பனை பிரதிநிதிகளை பொறுத்தவரையில் கூடுதலான பணியாளர்கள் இருப்பார்கள். அங்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று சபர்வால் தெரிவித்துள்ளார்.

டெலிகாம் நிறுவனங்கள் நேரடி யாக பணியாளர்களை நியமனம் செய்வதில்லை. நாட்டின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம் 19,000 பணியாளர்களை மட்டுமே நேரடியாக நியமித்துள்ளது. ஆனால் இந்த துறையில் மறைமுக மாக பல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அன்டல் இன்டர்நேஷனல் நிறு வனத்தின் மனேந்திர சிங் கூறும் போது, நிறுவனங்கள் இணைவ தால் கீழ்நிலை பணியாளர்களில் 15 சதவீதம் அளவுக்கு வேலை இழப்பு ஏற்படக்கூடும் என தெரிவித்தார்.

கடந்த 2008-ம் ஆண்டு 2ஜி உரிமையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தபோது, இந்த துறையில் அதிக வேலை இழப்புகள் நடந் தன. இப்போது நிறுவனங்கள் இணைவதால், செயல்பாடுகள், பணியாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் மாறுதல்கள் ஏற்படும்.

ஆனால் டீம்லீஸ் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் சுதிப் சென் கூறும்போது, இந்தியாவில் இன்னும் அனைத்து மக்களுக் கும் டெலிகாம் சேவை சென்றடை யவில்லை. அடுத்த கட்ட வளர்ச் சிக்கு பணியாளர்கள் தேவைப்படு வர். அதனால் நிறுவனங்கள் இணைப்பினால் நீண்ட கால அடிப்படையில் பெரிய அளவில் வேலையிழப்புகள் ஏற்படும் என கருதவில்லை. ஆனால் புதிதாக பணிக்கு வருபவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் வரை குறைவாக இருக்கும். அடுத்த 24 மாதங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என கூறியுள்ளார்.