மத்திய அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை (மார்ச் 16) ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.இதுகுறித்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் எம்.துரைப்பாண்டியன் செவ்வாயன்று (மார்ச் 14) செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஓய்வுபெற்ற நீதிபதி மாத்தூர் தலைமையில் 7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் வெறும் 18 ஆயிரம் ரூபாயை அந்தக் குழு பரிந்துரை செய்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப் பட்டது. உடனடியாக நிதி அமைச் சர் அருண்ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ரயில்வே அமைச்சர் பிரபு ஆகியோர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் 18 ஆயிரம் ஊதியம் குறைவுதான் என ஒப்புக்கொண்டார்கள். பிரதமரிடம் பேசி, அடிப்படை ஊதியம் மாற்றப்படும் என உறுதியளித்தார்கள். அதற்கென தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டன. வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் 8 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி உள்ளிட்டவற்றிலும் எந்த மாற்றமும் செய்யவில்லை. மத்திய அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, பழைய திட்டத்தையே தொடர வலியுறுத்தியும், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு சட்டப்படியான ஊதியம் வழங்க வேண்டும், அவர்களை சிவில் ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பனஉள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் வியாழனன்று (மார்ச் 16) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்த உள்ளோம். இதில் தபால் துறையின் அனைத்து சங்கங்கள், வருமான வரித்துறை சங்கங்கள், சாஸ்திரி பவன் ஊழியர்கள், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட 105 சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். நாடு முழுவதும் 12 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்களும், தமிழகத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஊழியர்களும் பங்கேற்கிறார்கள்.இதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் ஏப்ரல் 12ம் தேதியன்று கூடவுள்ள மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன செயற்குழு கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இச்சந்திப்பின்போது தலைவர் ஜெ.ராமமூர்த்தி, பொருளாளர் எம்.எஸ்.வெங்கடேசன், அமைப்பு செயலாளர் ஏ.பாலசுந்தரம், தபால் கணக்கு மாநிலச் செயலாளர் ஆர்.பி.சுரேஷ், சாஸ்திரி பவன் செயலாளர் சாம்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.