இந்த கட்டத்தில் ஏகபோக மூலதனம், சிறு தொழிற் சாலைகளை நொறுக்கி வெளியேற்றும்; சிறு தொழில்களுக்கு பதிலாக பெரும் நிறுவனங்கள் உருவாகும்;

துயரத்தின் பிடியில் சிக்கியிருக்கும் தேசத்தின் ஏழைகள் ஊரெங்கும் அலையலையாய் போராட்டங்களில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் பல நாளேடுகளின் முகப்பு பக்கங்களில்வோடாபோன் – ஐடியா நிறுவனங்கள் இணையப்போவதே பிரதான செய்தியாக இடம் பெற்றிருக்கிறது. இது வெறுமனே இரண்டு பெரிய கார்ப்பரேட் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தனிப்பட்ட இணைப்பு என்பதாக செய்திகள் எழுதப்படுகின்றன. ஆனால் உண்மையில் இது, உலக அளவில் முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்தை நோக்கி நகர்வதன் முதல் கட்டத்தில்நடக்கிற நிகழ்வுகளில் ஒன்றே என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.உலகம் முழுவதும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைவதும், பெரியகார்ப்பரேட் நிறுவனங்கள் அளவில் சிறிய கார்ப்பரேட் கம்பெனிகளை பேரம் பேசி கையகப் படுத்துவதும் சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, 2008 அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு பிறகு, இந்த இணைப்புகளும், கையகப்படுத்தல்களும் தீவிரமடைந்துள்ளன. இன்னும் குறிப்பாக, இந்தியாவில் இந்த நடவடிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக வேகம் பிடித்திருக்கிறது. இந்தியப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது லாபத்தை மேலும் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் நோக்கத்துடன் ஏற்கெனவே லாபத்தில் இருக்கும் பெரும் நிறுவனங்களை விலைபேசி வாங்குகின்றன; இந்த லாப எல்லையை இன்னும் வலுவான கட்டமைப்போடு விரிவுபடுத்துவதற்காக வெளிநாட்டு பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுடன் இணைகின்றன.இந்திய தொலைத் தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் நிறுவனம், ஏர்செல்லை கையகப்படுத்தியது. அது தனது லாப எல்லையைவிரிவுபடுத்தத் துவங்கியுள்ள நிலையில், இப்போதுபிரிட்டனின் வோடாபோன் குழுமமும், இந்தியாவின் குமார்மங்கலம் பிர்லாவின் ஐடியாவும் இணைகின்றன. இந்த இணைப்புகளுக்குப் பின்னால் உள்ள நோக்கம், இந்தியாவில் மிகப் பெரும் அளவில் சந்தையையும், வணிகத்தையும் அதன் மூலம் லாபக் கொள்ளையையும் விரிவுபடுத்துவதே.இதை நூறு ஆண்டுகளுக்கு முன்பே மாமேதைலெனின் சுட்டிக்காட்டினார்.

முதலாளித்துவம் தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கிநகரும்போது, மிகப் பெருமளவில் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பில் மாற்றத்தை கொண்டு வரும்; தாராள சந்தைப் போட்டி நிலவும் முதலாளித்துவம் என்பது ஏகபோக மூலதனத்தின் கொள்ளை லாபத்திற்கு வழிவிடும் அமைப்பாக மாறும் என்றுலெனின் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த கட்டத்தில் ஏகபோக மூலதனம், சிறு தொழிற் சாலைகளை நொறுக்கி வெளியேற்றும்; சிறு தொழில்களுக்கு பதிலாக பெரும் நிறுவனங்கள் உருவாகும்; அது இன்னும் தீவிரமடைந்து பெரும்நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தோ அல்லது ஒன்றையொன்று அழித்தோ மிகப் பெரும்நிறுவனங்களாக மாறும்; அது இன்னும் தீவிரமடைந்து சம்பந்தப்பட்ட துறையின் அல்லது தொழிலின் ஒட்டுமொத்த உற்பத்தியும் ஒரே ஏகபோக ஆளும் வர்க்கத்தின் கைகளில் சென்று சேரும்; ஏகபோக கார்ப்பரேட்குழுமங்களே அனைத்திலும் கோலோச்சும்; படிப்படியாக முதலாளித்துவம் அதன் உச்சக்கட்டமான ஏகாதிபத்தியத்தை நோக்கி நகரும் என லெனின் கூறுகிறார். இப்போது அது நடந்து கொண்டிருக்கிறது.