ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை விற்பதற்கு முடிவெடுத்து, இதற்கான விண்ணப்பங்களை வரவேற்றிருக்கிறது. தவிர ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை முழுவதுமாக விற்கவும், இதர துணை நிறுவனங்களில் பகுதி அளவு விற்கவும் திட்டமிட்டிருக்கிறது.

வரும் மே மாதம் 14-ம் தேதிக்குள் விருப்பம் இருக்கும் நிறுவனங்கள் பங்கு பெறலாம். மே மாதம் 28-ம் தேதி ஏலத்தில் பங்கேற்றவர்கள் குறித்த இறுதி பட்டியல் வெளியாகும் என அரசு அறிவித்திருக்கிறது.

விதிமுறைகள் என்ன?

76 % பங்குகளை விற்பதாக அறிவித்தாலும், பல விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன. இதில் முக்கியமானது ஏர் இந்தியா என்னும் பெயரை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்பது. அடுத்ததாக குறைந்தபட்சம் ரூ.5,000 கோடி மதிப்பு (நெட்வொர்த்) இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும். இந்த மதிப்பு இல்லாத நிறுவனம் வேறு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பங்கேற்கலாம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிறுவனத்தில் இருந்து வெளியேற முடியாது.

மீதமுள்ள 24 சதவீத பங்குகள் அரசு வசம் இருந்தாலும், இந்த பங்குகளை பணியாளர்களுக்கு வழங்கும் வாய்ப்பு இருக்கிறது. தவிர குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியாவை பட்டியலிட வேண்டும். அப்போது அரசு முழுமையாக வெளியேறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 2017 நிலவரப்படி 11,214 நிரந்தர பணியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கான திட்டம் குறித்தும் ஏலம் கேட்கும் நிறுவனம் அறிவிக்க வேண்டும். தவிர பென்ஷன் தாரர்களின் மருத்துவம் மற்றும் பயண செலவுகளை அரசு ஏற்கும். நிலுவையில் உள்ள ரூ.1,300 கோடியை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.

கடன்?

ஏர் இந்தியா விற்பனைக்கு முக்கியமான காரணமே இந்த நிறுவனத்துக்கு இருக்கும் கடன்தான். ஆனால் நிறுவனம் விற்கும்போது இந்த கடன் யாருக்கு செல்லும் என்பதில் இருந்த குழப்பம் தீர்க்கப்பட்டிருக்கிறது. நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.47,000 கோடி கடன் இருக்கிறது. இதில் 48 சதவீத கடனை புதிதாக வாங்குபவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். மீதமுள்ள கடன் தொகை ஏர் இந்தியா அசெட் ஹோல்டிங் நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்படும். இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளும் அரசு வசம் இருக்கிறது.

யார் வாங்குவார்கள்?

வாங்குபவர்கள் 48 % கடனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் யாருக்கு ஆர்வம் இருக்கும்? என தோன்றலாம். ஆனால் அதற்கான காரணங்கள் இருக்கின்றன. உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் 13 சதவீதம் ஏர் இந்தியா வசம் இருக்கிறது. தவிர ஏர் இந்தியாவுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 6200-க்கு மேற்பட்ட ஸ்லாட்கள் (விமான வழித்தடங்கள்) உள்ளன. கிட்டத்தட்ட 2,543 ஸ்லாட்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு இருக்கிறது. விமான நிறுவனங்களை பொறுத்தவரை இது பெரிய பொக்கிஷமாகும். மேலும் 115 விமானங்களும் கிடைக்கும். மொத்தமாக சர்வதேச வழித்தடங்கள் கிடைப்பதால் நிறுவனங்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றன. கடினமான முடிவை அரசு எடுத்திருக்கிறது. புதிய உரிமையாளர் யார் என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

BSNL Employees Union Nagercoil