ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் ’பேமெண்ட் பேங்க்’ வங்கிச் சேவையை இந்தியாவில் தொடங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.‘பேமெண்ட் பேங்க்’ என்பது சிறிய வங்கி ஆகும். இங்கு, ஒரு நபர் அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையில் சேமித்து வைக்க இயலும். அவர்களுக்கு டெபிட் கார்டுகள் வழங்கப்படுவதோடு, இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் சேவைகளும் வழங்கப்படும். ஆனால் இந்த வங்கியில் பிற வங்கிகளைப்போலக் கடன் வழங்கப்பட மாட்டாது. மேலும் கிரெடிட் கார்டுகளும் கொடுக்கப்படுவதில்லை.ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன் இருந்தபோது, இந்திய வங்கித்துறையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்கிறோம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக்கட்டும் முடிவுகள் எடுக்கப்பட்டன. அதாவது, சிறிய வங்கிகள் மற்றும் பேமெண்ட்ஸ் வங்கிகளை அறிமுகம் செய்ய முடிவு செய்தார். அதனடிப்படையில், ரிசர்வ் வங்கியானது 2015 ஆகஸ்ட் மாதத்தில், பேமெண்ட்ஸ் வங்கி துவங்குவதற்கான உரிமங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கியது. அப்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆதித்யா பிர்லா நுவோ, ஏர்டெல் எம்.காமர்ஸ் சர்வைஸ், சோழ மண்டலம் டிஸ்ட்ரிபியூஷன் சர்வைசஸ், டிபார்ட்மெண்ட் ஆப் போஸ்ட்ஸ், பினோ பேடெக், நேஷனல் செக்யூட்டிரீஸ் டெபாசிடரி, சன் பார்மா, பேடிஎம், டெக் ம`ஹிந்திரா, வோடபோன் எம்.பேசா மொத்தம் 11 நிறுவனங்கள் பேமெண்ட்ஸ் வங்கி அமைக்க உரிமம் பெற்றன. ஆனால், இந்தியாவில் முதல் முறையாகப் பேமெண்ட்ஸ் வங்கியைத் துவங்கியது ஏர்டெல் நிறுவனம்தான். இந்நிறுவனம் 2016 நவம்பர் மாதத்திலேயே தனது சேவையைத் துவங்கியது. இதைத் தொடர்ந்து பேடிஎம் நிறுவனத்தின் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிச் சேவை 2017 மே மாதத்தில் துவங்கியது. 2017 ஜூன் மாதத்தில் பினோ பேமெண்ட்ஸ் வங்கி தனது சேவையைத் துவங்கியது. ஆனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடனடியாக இறங்கவில்லை. ஆதித்யா பிர்லாவும் தனது வங்கிச் சேவையைத் தொடங்கிவிட்டன. இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் சேவை தொடங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பேமெண்ட் வங்கிச் சேவையை ஏப்ரல் 3-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முகேஷ் அம்பானியின் இந்த ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிற பேமெண்ட்ஸ் வங்கிகளைக் காட்டிலும் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கியின் மீது கூடுதல் நம்பிக்கையை உருவாக்கும் ஏற்பாடுகளும் உள்ளன.ஜியோ பேமெண்ட்ஸ் வங்கியின் 70 சதவிகித பங்குகளை முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், 30 சதவிகிதப் பங்குகளை எஸ்பிஐ வங்கியும் வைத்துள்ளன.

BSNL Employees Union Nagercoil