வரலாறு காணாத எழுச்சிகளின்பிடியில் சிக்கியிருக்கிறது அமெரிக்கா. கடந்த வாரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பேரெழுச்சியை சந்தித்த அமெரிக்காவில் இந்த வாரம் முழுவதும் ஆசிரியர்கள் மிகப்பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் ஆக்லஹாமா மாகாணத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ச்சியாக 5ஆவது நாளாக ஏப்ரல் 6 அன்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த மாகாணத்தில் ஆசிரியர்களின் ஊதியம் கடந்த 10ஆண்டுகளாக சற்றும் உயர்த்தப்படவில்லை என்பது உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒபாமா ஆட்சியிலும் சரி, அதற்கு முன்பு புஷ் ஆட்சியிலும் சரி, ஆக்லஹாமா உள்பட அமெரிக்கா முழுவதும் பள்ளிக்கல்விக்கான பட்ஜெட்டில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டநிதியில் படிப்படியாக 28 சதவீதஅளவிற்கு வெட்டிக் குறைத்திருக்கிறார்கள். டிரம்ப் நிர்வாகம் இன்னும் கடுமையாக பள்ளிக்கல்வி பட்ஜெட் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது. ஆசிரியர்களின் ஊதிய உயர்வு மற்றும் ஒவ்வொரு மாணவருக்குமான கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு ஆகியவற்றை முற்றாக முடக்குவதற்கான முயற்சியில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகள் அமெரிக்காவின் ஆசிரியர் சமூகத்தை கடந்த 10 ஆண்டு காலமாகவே கொந்தளிப்புக்குள்ளாக்கி வந்தன. குறிப்பாக 2008 ல் ஏற்பட்டபொருளாதார நெருக்கடிக்கு பிறகு,அமெரிக்க ஆளும் வர்க்கம் மூன்றுமுக்கிய அம்சங்கள் மீது கை வைத்தது. அதில் முதலில் பலியானது அமெரிக்க கல்வித்துறையாகும்.

இதைத் தொடர்ந்து சுகாதாரமும் சமூக நலத்திட்டங்களும் குறி வைக்கப்பட்டு அவற்றுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் கடுமையாக வெட்டி சுருக்கப்பட்டன. இத்தகைய பின்னணியில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக, ஆசிரியர் சமூகத்தின் கொந்தளிப்பு, ஆசிரியர் – மாணவர் போராட்ட அலையாக எழுந்திருக்கிறது.ஆக்லஹாமா மட்டுமின்றி அரிசோனா, வாஷிங்டன், சிகாகோ, நியூயார்க், நியூஜெர்சி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். அனைத்துப் பகுதிகளிலுமே ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் களத்தில் இறங்குகிறார்கள்.

அமெரிக்க ஆசிரியர்கள் சம்மேளனம் மற்றும் தேசிய கல்வி சங்கம் உள்ளிட்ட பெரிய இயக்கங்கள் தீவிரமாக போராட்டக் களத்தில் இறங்கியுள்ளன. அமெரிக்காவில் இரண்டாம் உலகப்போர் காலத்திற்கு பிறகு இப்படிப்பட்ட பெரிய போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டதில்லை என சங்கத்தலைவர்கள் கூறுகின்றனர். ‘‘நாடு தழுவிய தேசிய வேலைநிறுத்த போராட்டத்தை நோக்கி அமெரிக்க ஆசிரியர்கள் அணிதிரள துவங்கியிருக்கிறார்கள்;

இதைத் துவக்கிவைத்த ஆக்லஹாமா ஆசிரியர்களின் ஈடு இணையற்ற துணிச்சலை நான் பாராட்டுகிறேன். எதுவுமே இல்லாத இடத்தில் இது ஒரு மிகப்பெரிய வர்க்க போராட்டம் என கருதுகிறேன். அமெரிக்க பள்ளிகளை பாதுகாப்போம், அமெரிக்க மாணவர்களை கல்வி தனியார்மயம் எனும் கொடூரத்திலிருந்து பாதுகாப்போம்’’ என்று முழங்குகிறார் அரிசோனா தலைநகரான பீனிக்ஸ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மூத்த ஆசிரியர் ஒருவர். புளோரிடாவிலும் அயோவாவிலும் கென்டகியிலும் என ஆசிரியர்களின் போராட்டத் தீ பற்றிப் பரவுகிறது. டிரம்ப் நிர்வாகம் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது.