பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைக்கான இயக்கங்கள் மற்றும் ஓய்வூதியர்களின் இயக்கங்களுக்கு முழுமையாக ஆதரவை தெரிவிப்பது என கோவையில் நடைபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவையில் ஏப்ரல் 28,29 ஆம் தேதிகளில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில செயற்குழு நடைபெற்றது. மாநிலத் தலைவர் செல்லப்பா கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இச்செயற்குழுவில் பொதுச்செயலாளர் அபிமன்யூ, மத்திய சங்க அமைப்புச் செயலாளர் விஜயகுமார் மற்றும் மாநில செயலாளர் பாபுராதாகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் சி.ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணை டவர் நிறுவனம் அமைப்பதை திரும்பப்பெறக்கோரி அனைத்து சங்கங்கள் சார்பில் மே 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்களை வலுவாக மேற்கொள்வது. ஊதிய மாற்றத்திற்கான அடுத்த கட்ட போராட்டங்களை வலுவாக நடத்துவது, ஒப்பந்த ஊழியர்கள் ஓய்வூதியர்கள் இயக்கங்களுக்கு முழுமையாக ஆதரவளிப்பது உள்ளிட்ட துறை சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும், தமிழகத்தின் வாழ்வாதார கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வரும் சூழலில் அதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

BSNL Employees Union Nagercoil