நவீன மனிதகுல அசைவிற்கு விசையாக இருப்பது மின்சாரம் என்றால் மிகையல்ல. அத்தகைய மின்சாரம் அனல், புனல், அணு, சூரிய ஒளி, காற் றாலை, கழிவுகள், கடல் அலை போன்ற காரணிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்திய நாட்டில் பல்வேறு உற்பத்தி காரணிகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், அனல் (நிலக்கரி) மூலம் மின்உற்பத்தி என்பதே மொத்த உற்பத்தியில் உயர்ந்த நிலையில் உள்ளது. இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி திறனான 3,29,186 மெகாவாட்டில் 1,93,427 மெகாவாட் (58 விழுக் காடு) நிலக்கரி மூலமும் புனல் மூலம் 44,563 மெகாவாட் அதாவது 13.55 விழுக் காடு, அணு சக்தி மூலம் 6,780 மெகாவாட் அதாவது 12 விழுக்காடு, இதரவைகள் மூலம் 58303 மெகாவாட், அதாவது 18 விழுக் காடு, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்ற புள்ளி விவரங்களை உற்று நோக்கும்போது, மொத்த உற்பத்தியில் அதாவது நிலக்கரி மூலம் மின்உற்பத்தி என்பது கூடுதலான பங்கு வகிப்பதை புறந்தள்ள இயலாது.தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் அதாவது நிலக்கரி மூலம் 4320 மெகாவாட் என்பது 60.47 விழுக்காடும், புனல் மூலம் 2307 மெகாவாட் என்பது 32.29 விழுக் காடும், எரிவாயு மூலம் 516 மெகாவாட் என்பது 7.22 விழுக்காடும் மின்உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை கண்ணுறும் போது தமிழகத்திலேயும் மொத்த மின் உற்பத்தியில் நிலக்கரி மூலம் மின்உற்பத்தி என்பதுதான் முதலிடத்தை வகிக்கின்றது.மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் 6037 மெகாவாட்டில் 4328 மெகாவாட் நிலக்கரி மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்துதான் கிடைக்கின்றது. இவைகளை பார்க்கும்போது இந்திய, தமிழக மின் உற்பத்தி திறனில் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தான் கூடுதலான பங்கு வகிக்கின்றது என்பது தெரிகிறது.தமிழக மின் உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கும் நிலக்கரி மூலம் மின்உற் பத்தி செய்யப்படும் மின் நிலையங்கள் வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி போன்ற இடங்களில் அமைந்துள்ளன. இவைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 4320 மெகாவாட், மூன்று அனல்மின் நிலையங்களிலும் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 4500 என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட மனித சக்தி அதாவது தேசிய அனல் மின் உற்பத்தி கழகம் ஒரு மெகா வாட்டிற்கு 0.91 தொழிலாளர்கள் என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தேசிய அனல்மின் கழகத்தை பொறுத்தவரையில் நவீன தொழில்நுட் பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்ட மின் நிலையங்களாகும். அதனால் அம்மின் நிலையங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மனித சக்தியை தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு பொருத்தி பார்ப்பது என்பது பொருத்தமற்ற ஒன்றாகும்.தமிழக அனல்மின் நிலையங்களை பொறுத்தவரையில் ஒரு மெகாவாட் மின் உற்பத்தி 1.5 தொழிலாளிகள் என்று நிர்ணயிக்கப்பட்டாலும் 6480 தொழிலாளிகள் பணியாற்ற வேண்டும். ஆனால் அங்கு பணியாற்றுவதோ, 4500 சுமார் 2000 தொழிலாளிகள் குறைவாகவே பணியாற்றும் நிலை உள்ளது. இந்த குறைவை மின்வாரிய நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளிகள், தினக் கூலி, அவுட் சோர்சிங் தொழிலாளிகள், இவைகளுக்கெல்லாம் மேலாக தொழிலாளிகளை பணிக்கு அமர்த்தி வேலை வாங்குவதற்கு மாறாக “ஒர்க்ஸ் காண்ட்ராக்ட்” மூலம் பணிகளை செய்து முடித்துக் கொள்கிறோம் என்ற வாதங் களை முன்வைத்து மோசமான உழைப்புச் சுரண்டலை அரங்கேற்றி வருகிறது.

ஒர்க்ஸ் காண்ட்ராக்ட் மூலம் செய்யும் பணிகள்

நிலக்கரியை ஏற்றி இறக்குவது, யார்டில் இருந்து நிலக்கரியை எரிக்கும் இடத்திற்கு கொண்டு செல்வது, சிவில் பராமரிப்பு, குளிரூட்டும் கூலிங் டவர், பாய்லர் பராமரிப்பு, எலக்ட்ரிக்கல் பணிகள் போன்ற நிரந்தர தன்மை வாய்ந்த தினந் தோறும் ஆண்டு முழுவதும் பணி நடைபெறுகின்ற இடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்திவிட்டு, இதற்கு பெயர்தான் ‘ஒர்க்ஸ் காண்ட்ராக்ட்’ என்றும், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்ற அவர்களை மேற்பார்வை இடுவது என்ற பெயரால் அவர்களை பார்த்து பணி செய்ய வைத்துவிட்டு, சட்டத்தின் அடிப்படையில் உரிமைக் கேட்கும்போது மின்நிலையங்களில் ஒப்பந்த தொழிலாளர்களே இல்லை என்று நாகூசாமல் வாரிய கீழ்மட்ட அதிகாரிகளிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியான வாரிய தலைவர் வரை உண்மைக்கு மாறான வாதத்தை முன்வைத்து தொழிலாளிகளை ஏமாற்றுவதை இனியும் ஏற்றுக் கொள்ள, பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றாகும்.அனல் மின் நிலையத்தில் பணியாற் றும் ஒப்பந்த தொழிலாளியோ, வெயில் என்றும், மழை என்றும், இரவு என்றும், பகல் என்றும் பாராமல் சிறுகச்சிறுக உயிர்க் கொல்லியாக உள்ள மாசு, புகை மண்டலத்திற்கிடையே தனது வாழ்நாளை சுறுக்கிக்கொண்டு, மின்உற்பத்தியில் ஈடுபட்டு ஆலைச்சக்கரங்களை சுழலச்செய் தல், விவசாய வளர்ச்சிக்கு ஊற்றுக்கண் ணாக சிறுகுறு தொழிலுக்கு உறுதுணையாக சமுதாய மக்களுக்கு வெளிச்சத்தை தந்து, சமுதாயத்தையே அசையச் செய் யும் ஒப்பந்த தொழிலாளியின் உரிமைகளைப் பறிப்பதை இனியும் அனுமதிக்க முடியாத நிலையில் உள்ளோம்.அனல்மின் நிலையங்களில் தனது உயிரை பணயம் வைத்து உற்பத்தியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளிகள் கேட்பதோ என்ன? மாடமாளிகையா; கூட கோபுரமா; சொகுசாகச் செல்ல ஏ.சி.காரா; இல்லையே!

* மின்நிலையத்தில் மாதங்களாக, ஆண்டுகளாக பணியாற்றும் எனக்கு மின்

நிலையம் வந்து செல்ல; அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தால் சொல்லப்பட்ட, அடையாள அட்டையை வழங்கிவிடு.

* தொடர்ந்து பணியாற்றும் என்னை அடையாளங்கண்டு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.600/-ஐ குறைந்த பட்ச கூலியாக வழங்கிவிடு.

* அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் ரூ.12,000/-, ரூ.14,000/-, ரூ.16,000/- மாத ஊதியமாக பெறும்போது தமிழக அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளிக்கு ரூ.6,000/- மட்டும் மாத ஊதியமாக அளிப்போம். அதையும் கூட மாதங்களில் குறிப்பிட்ட நாளில் வழங்காமல், பல மாதங்கள் வழங்காமல் ஒப்பந்ததாரர்கள் இழுத்தடிப்பார்களாம். அதை மின்வாரிய நிர்வாகம் பார்த்து பார்வையாளர்களாக இருப்பார்களாம். மனித சமுதாயம் இனியும் இதையும் பொறுத்துக் கொள்ளலாமா?

* மின் நிலையத்தில் நிரந்தர தொழிலாளிகள் செய்யும் அதே பணியை ஒப்பந்த தொழிலாளிகள் செய்யும் போது அவர்களுக்கோ பல ஆயிரம் ரூபாய் ஊதியம். ஒப்பந்த தொழிலாளிக்கோ சில நூறு ரூபாய்; இந்த கடைந்தெடுத்த பாகுபாட்டை இனியும் அனுமதிக்கலாமா?

* பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளியின் ஊதியத்தில் ஈ.பி.எப்., ஈ.எஸ்.ஐ.க்காக ஊழியர்களிடம் பிடித்தம் செய்துவிடுவோம். அதற்கீடான தொகையை ஒப்பந்ததாரர் அளித்து அதை மாதாமாதம் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சேர்க்கமாட்டேன். ஊழியர்களிடம் இருந்து பிடித்த தொகையை தனது உல்லாச வாழ்க் கைக்கு பயன்படுத்துவோம் என்பதை நிர்வாகம் பார்த்துக் கொண்டிருப்பதை அனுமதிக்கலாமா?

* அடையாள அட்டை, குறைந்தபட்ச ஊதியம் அளித்தல், ஈ.பி.எப்., ஈ.எஸ்.ஐ.பங்குத் தொகையை பிடித்தம் செய்வது. அதை உரிய இடத்தில் சேர்ப்பது போன்றவற்றை கண்காணித்து உத்தரவாதப்படுத்தப்பட வேண்டிய லேபர் ஆபிசர், மின்நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியே இல்லை என்று புலம்புவதை அனுமதிக்க முடியாத நிலையில் உள்ளோம்.

* ஆயிரக்கணக்கான நிரந்தர, ஒப் பந்த தொழிலாளிகள் பணியாற்றும் மின் நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம், வாகனம் இருப்பதைக்கூட உத்தரவாதப்படுத்தமாட்டேன் என்று சொல்லும் நிர்வாகத்தின் இரக்கமற்ற தன்மையை அனுமதிக்கலாமா? சமீபத்தில் கன்வேயர் பெல்ட் பகுதியில் பணியாற்றும் சோமசுந்தரம் என்ற தொழிலாளி பணி நேரத்தில் அடிப்பட்டு சுயநினைவு இன்றி விழுந்துகிடக்கும் போது அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு ஸ்டெச்சரோ; அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்களோ இல்லாத நிலையில் மண் அள்ளும் பக்கெட்டில் மண்ணோடு மனிதரையும் அள்ளிச் செல்லும் அவலநிலை உள்ளதை இனியும் அனுமதிக்கலாமா?

* அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளிகளின் நியாயமான கோரிக்கையை கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் பணியாற்றும் ஒப்பந்ததாரர்களிடத்திலும், முதன்மை நிர்வாகியாக உள்ள மின்சார வாரியத்திடம் பலமுறை கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் அவைகளை தீர்த்துவைக்க எந்தவித முனைப்பும், நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தமிழகத்தின் உயர்வுக்கு உழைத்துவிட்டு உயிர்வாழ வழியின்றி தத்தளிக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தையும் இணைத்து போராட்டத்தை தொடர்வது என்ற நிலையில் மே 22 அன்று நான்கு அனல்மின் நிலையங்கள் முன்னாலும் குடும்பத்துடன் உண்ணாமல் கிடப்பது என்ற போராட்டத்தை நடத்த உள்ளனர்.

வாரியமும், தமிழக அரசும், இதற்கு மேலும் கேளாகாதினராக, பார்வையற்ற குருடர்களாகத்தான் இருப்போம் என்றால் 2018 ஜூன் 26 முதல் அனல்மின் நிலையத்திற்கு உள்ளே சென்று பணியாற்றாமல் காத்துக்கிடப்பது என்றும், அதே நேரத் தில் உள்ளே சென்றவர்கள் உயிரோடு திரும்பி வருவார்களா என்று அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வெளியே காத்துகிடப்பது என்ற போராட்டமும் நடைபெற உள்ளது.கோடை வெயில் நேரத்தில் மின்பற்றாக் குறை தமிழகத்தை பார்த்து உறுமிக் கொண்டிருக்கிற இக்காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட போராட்டம் தேவையா! இல்லையா என்பதை தமிழக அரசும், மின்வாரியமுமே முடிவு செய்யட்டும். இதனால் தமிழக மக்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டால் அதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் தமிழக அரசும், மின்வாரியமும்!

BSNL Employees Union Nagercoil