இந்திய பெரு முதலாளிகளுக்கு ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விட்டு நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குத்தகை பெயரில் மதிப்புமிக்க சென்னை நகர ரயில்வே நிலங்களை தாரைவார்ப்பதற்கு தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் கண்டனம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து டிஆர்இயு-வின் துணை பொதுச்செயலாளர் டி.மனோகரன் கூறியதாவது:- இந்திய ரயில்வேயிடம் 472155 ஹெக்டேர் நிலம் உள்ளது. இதில், 51165 ஹெக்டேர் காலி நிலம். வர்த்தகத்திற்கு ஏற்ற 54 காலி மனைகளை தேர்வு செய்து 45 முதல் 90 ஆண்டுகள் தனியாரிடம் குத்தகைக்கு விட்டு நிதி திரட்ட ரயில் நில வளர்ச்சி ஆணையம் முடிவு செய்தது. இந்த நிலங்களின் மொத்த அளவு-189 ஹெக்டேர். (2 கோடி 3 லட்சத்து 43790 ச.அடி). இதன் மதிப்பு சுமார் ரூ.14,000 கோடி.

இதில், 15 இடங்கள் தமிழக பகுதியில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. 12 இடங்கள் சென்னையில் உள்ளன. வர்த்தக தேவைக்காக நிலங்களை குத்தகைக்கு எடுக்க சென்னையில் தனியார்களிடம் போட்டி நிலவுவது இதற்கு கூடுதல் காரணம்.

தேர்வு செய்யப்பட்ட தமிழக இடங்கள்:- நாகப்பட்டினம் 43,055 ச.அடி, விழுப்புரம் 76,423 ச.அடி, சேலம் மார்க்கெட் 1,13,021 ச.அடி, சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையின் காக்காப்பாலம், பாடி இடம் 2,26,000 ச.அடி, சென்னை சேத்துப்பட்டு 81,805 ச.அடி, விக்டோரிய கிரஷண்ட் 46,284 ச.அடி, போயஸ் கார்டன் 57048 ச.அடி, பூந்தமல்லி ரோடு 215278 ச.அடி, பார்க் ஸ்டேஷன் 35520 ச.அடி, பெரம்பூர் பணந்தோப்பு காலனி 215278 ச.அடி, அயனாவரம் காலனி 376736 ச.அடி, தாம்பரம் 177604 ச.அடி, (இதில், 57,000 ச.அடி வழக்கில் உள்ளது.) திருவெற்றியூர் 2091427 ச.அடி, வால்ட்டாக்ஸ் ரோடு 12916 ச.அடி, புளியந்தோப்பு 79652 ச.அடி. இந்த நிலங்களின் மொத்த பரப்பளவு 38 லட்சத்து 48 ஆயிரம் ச.அடி ஆகும்.

இதில், சென்னை அம்பத்தூர் தாலுகா, காக்காப்பாலம் – பாடி பகுதியில் உள்ள 2,43,239 ச.அடி ரயில்வே இடம் உள்ளது. இதன் இன்றைய மார்க்கெட் மதிப்பு ரூ.270 கோடிக்கு மேல். இந்த இடத்தை ரூ.43 கோடிக்கு 45 ஆண்டு கால குத்தகைக்கு போத்தீஸ் தனியார் நிறுவனத்திடம் வழங்க ரயில் நில வளர்ச்சி ஆணையம் 22.02.2018 அன்று ஒப்பந்தம் போட்டு ஒப்படைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. ரயில்வேக்கு சொந்தமான மற்ற சென்னை இடங்கள் படிப்படியாக நீண்ட கால குத்தகைக்கு விடப்பட இருக்கிறது.

காலி நிலங்களில் நேரடி முதலீட்டு திட்டங்கள் மூலம் வருவாய் காண ரயில்வே இதுவரை முறையாக திட்டமிடவில்லை. மாறாக பெரு முதலாளிகளுக்கு குத்தகைக்கு விட்டு நிதி திரட்டவே விரும்புகிறது. குத்தகை என்ற பெயரில் மதிப்பு மிக்க சென்னை நகர ரயில்வே நிலங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் கண்டனம் தெரிவிக்கிறது. இவ்வாறு டி.மனோகரன் தெரிவித்துள்ளார்.

BSNL Employees Union Nagercoil