திருவனந்தபுரம்: பேரிடர் காலங்களில் வெளிநாடுகளின் நிதியை ஏற்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் நாடு ரூ.700 கோடி நிவாரண நிதி வழங்க தயார் என்று அறிவித்துள்ளது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட வெளிநாடுகளின் நிதி உதவியை இந்தியா ஏற்காது என்று தெரிய வந்துள்ளது. வெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்பது இல்லை என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா கொள்கை முடிவு எடுத்து இருப்பதால் அதை பின்பற்ற மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், “2016 பேரிடர் மேலாண்மை கொள்கையின் படி, பேரிடர் காலங்களில் வெளிநாடுகள் அளிக்கும் உதவியை மத்திய அரசு ஏற்கலாம். ஐக்கிய அரபு அமீரக நிதியுதவி விவகாரத்தில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். கேரளாவில் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களுக்கு வரும் 26-ம் தேதி நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறும்” என்று கூறியுள்ளார்