இந்தியாவிலிருந்து, கடந்த 3 வாரங்களில்மட்டும் 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானஅந்நிய முதலீடு வெளியேறி இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.அதுமட்டுமன்றி, தற்போது வெளியேறி இருக்கும் தொகையையும் சேர்த்து, நடப்பு நிதியாண்டில் நாட்டிலிருந்து வெளியேறிய பணம் 1 லட்சம் கோடி ரூபாயை எட்டியிருக்கிறது.புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் அந்நிய முதலீடுகளுக்கு கடந்த1992-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது முதல்கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, பங்குச்சந்தைகள் மற்றும் கடன் சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் பெருமளவிலான தொகையை முதலீடு செய்து வருகின்றனர்.இந்த அந்நிய முதலீட்டை ஒருங்கிணைக்கும் வகையில், அந்நிய நிதி நிறுவனங்கள்மற்றும் தகுதி வாய்ந்த அந்நிய முதலீட்டாளர்களைக் கொண்ட, ‘வெளிநாட்டுச் சேவைமுதலீட்டாளர்கள்’ (Foreign Portfolio Investment) எனும் புதிய வகைப்படுத்தலையும், பங்குச்சந்தைகள் கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ (The Securitids and Exchange Board of India) உருவாக்கியது.ஏற்றுமதியைக் காட்டிலும் அதிக இறக்குமதியைக் கொண்ட இந்தியா, நீண்டகாலமாகநடப்புக் கணக்கு பற்றாக்குறை பிரச்சனையில் உள்ளது. அந்நிய முதலீடுகள் மூலமேஇந்த பிரச்சனையை ஓரளவு சமாளித்து வருகிறது. ஒரு வளரும் நாடு என்ற அடிப்படையில் அந்நிய முதலீடுகள் அவசியம் என்பதால், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது, ஆட்சியாளர்களின் முக்கியப் பணியாகவும் இருந்து வருகிறது. ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின் அதற்கும் ஆபத்து வந்துள்ளது. 2016-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம், 2017-இல் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டிபோன்றவற்றால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்து வருகின்றனர். இது தற்காலிக பாதிப்புதான்; விரைவில் சரியாகி விடும் என்று மத்தியஆட்சியாளர்கள் சமாளித்தாலும் சரிவைத் தடுக்க முடியவில்லை. குறிப்பாக, 2018-ஆம்ஆண்டில் அந்நிய முதலீடுகள் வெளியேறுவது பல மடங்கு அதிகரித்து விட்டது.நடப்பு நிதியாண்டில், கடந்த ஜூன் வரையிலான 3 மாதத்திற்குள் மட்டும் 61 ஆயிரம்கோடி ரூபாய் அளவிற்கான அந்நிய முதலீடு வெளியேறியுள்ளது. ஜூலை மாதத்தில்5 ஆயிரத்து 200 கோடி ரூபாயும், ஆகஸ்ட் மாதத்தில் 2 ஆயிரத்து 300 கோடி ரூபாயும், செப்டம்பர் மாதத்தில் ரூ. 10 ஆயிரத்து 825கோடியும் வெளியேறியுள்ளது.தற்போதோ, அக்டோபர் மாதத்தின் முதல் 3 வாரங்களில் மட்டும் ரூ. 32 ஆயிரம்கோடி அளவிற்கு அந்நிய முதலீடு வெளியேறி இந்திய ஆட்சியாளர்களை கலக்கத் தில் ஆழ்த்தியுள்ளது.பங்குச் சந்தைகளிலிருந்து ரூ. 19 ஆயிரத்து 810 கோடி, கடன் சந்தைகளிலிருந்து ரூ. 12 ஆயிரத்து 167 கோடி என இந்தியாவிலிருந்து அந்நிய முதலீடு வெளியேறியுள்ளது.அதாவது இந்திய மூலதனச் சந்தையிலிருந்து மொத்தம் ரூ. 31 ஆயிரத்து 977 கோடியை எடுத்துக் கொண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்.நடப்பு நிதியாண்டில் பங்குச் சந்தையில்இருந்து, ரூ. 33 ஆயிரம் கோடி, கடன் சந்தையிலிருந்து ரூ. 60 ஆயிரம் கோடி என ஒட்டுமொத்தமாக சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் வெளியேறி இருக்கின்றன.நாளும் அதிகரித்து வரும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, இறக்குமதி அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவையே, அந்நிய முதலீடுகள் வெளியேறுவதற்கு காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்தநிலை இன்னும் மோசமாகலாம் என்ற எச்சரிக்கையையும் அவர்கள் விடுத்துள்ளனர்.

BSNL Employees Union Nagercoil