இந்தியாவில் முத்திரைப் பதித்த ராயல் என்பீல்டு நிறுவனத்தில் தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக ‘புல்லட்’ பைக்குகள் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர், அக்டோபரில் மட்டும் 25 ஆயிரம் யூனிட்கள் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டெல்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் ஈச்சர்ஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ஈச்சர்ஸ் மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலை சென்னையை அடுத்த ஒரகடத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த இரண்டு மாதங்களாக தொழிலாளர் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. இதில் ஒருபகுதியினர் வேலைக்கு வந்துகொண்டிருந்த நிலையிலும்கூட உற்பத்தி முழுவதுமாக பாதிக்கப்பட்டுளளது.

இதனால் இரண்டு மாதங்களில் தயாரிக்கப்பட இருந்த 25 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களின் உற்பத்தி முடங்கியுள்ளது. இருப்பினும், நிறுவனம் வேலைக்கு வரும் பிற பணியாளர்களைக்கொண்டே பணியை தொடர்வதற்கான முயற்சி எடுத்து வருகிறது.

வல்லம் வடகால் பகுதியில் எங்கள் இன்னொரு தயாரிப்புப் பிரிவின் தொழிற்சாலை அமைந்துள்ளது. அது முழுத் திறனுடன் இயங்கிவருகிறது என்பதால் இப்பணிகளை அங்கே தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்.

இவ்வாறு ஈச்சர்ஸ் மோட்டார் நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

BSNL Employees Union Nagercoil