மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்கத்துக்கான நோக்கம் நிறைவேறவில்லை என்பது, ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் மூலமாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும், மக்களிடம் பணப்புழக்கத்தை (ரொக்கப் பரிமாற்றம்) குறைப்பதற்காகவே, பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக, 2016 நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.ஆனால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இரண்டாண்டுகள் முழுமையாக முடிந்து விட்ட நிலையில், மோடி கூறிய எதுவும் நடக்கவில்லை; மாறாக, பிரதமர் கூறியதற்கு எதிராகவே நடந்துள்ளது என்பதை ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தற்போது உணர்த்தி இருக்கின்றன.“கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதே ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி நாட்டில் இருந்த பணப்புழக்கத்தின் மதிப்பானது, 17 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய்களாக இருந்தது. ஆனால், 2018 அக்டோபர் 26-ஆம் தேதி நிலவரப்படி பணப்புழக்கத்தின் மதிப்பானது 19 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் பணப்புழக்கமானது, பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு 9.5 சதவிகிதம் உயர்வைத்தான் அடைந்து இருக்கிறது.அதேபோல பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏ.டி.எம். மூலம் பணம் எடுப்பது குறைந்து, டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதிலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 2 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாயை ஏ.டி.எம்.கள் மூலமாக மக்கள் எடுத்துள்ளனர். ஆனால் கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் 2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஏ.டி.எம். மூலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் 8 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.செல்போன் மூலமான பணப்பரிமாற்றம் மட்டும் அரசின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபரில் 1 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த செல்போன் பணப்பரிமாற்றம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடியாக அதிகரித்து இருக்கிறது” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது