ஒட்டு மொத்த பிஎஸ்என்எல் ஊழியர்களும் அதிகாரிகளும், 2018, டிசம்பர் 3ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்ஈடுபட இருக்கின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களும் பிஎஸ்என்எல் அனைத்து யூனியன் மற்றும் சங்கங்கள் (ஏயுஏபி) என்ற பதாகையின் கீழ் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தை நடத்த உள்ளனர். பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை வழங்குவதற்கு தேவையான 4ஜி ஸ்பெக்ட்ரத்தை உடனடியாக வழங்க வேண்டும்; பிஎஸ்என்எல் வழங்கும் ஓய்வூதிய பங்களிப்பில் அரசு விதிகளை அமலாக்க வேண்டும்; 01.01.2017 முதல் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம்; ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் ஆகியவை இந்த வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள்.

நெருக்கடிகளின் பிடியில் தொலைத் தொடர்புத் தொழில்

தற்போது ஒட்டு மொத்த தொலைத் தொடர்பு தொழிலும் ஒரு நெருக்கடியில் சிக்கியுள்ளது. பெரிய தனியார் நிறுவனங்களான ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா ஆகியவை பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் மிகப்பெரிய கடனில் சிக்கியுள்ளன. இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மொத்த கடன் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்கள். இந்த நெருக்கடியின் விளைவாக வோடோபோன் நிறுவனம் ஐடியா நிறுவனத்துடன் கரைந்துவிட்டது. சிறிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்செல், டாடா டெலிசர்விசஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃபோகாம், டெலினார் உள்ளிட்டவை தங்களின்சேவைகளை மூடிவிட்டன.

காரணம் என்ன?

செப்டம்பர் 2016ல் தனது சேவைகளை துவங்கிய முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனத்தின் கழுத்தறுப்பு விலை குறைப்பு காரணமாகவே இவை அனைத்தும் நிகழ்ந்துள்ளன. தன்னுடைய வலுவான பொருளாதார பலத்தை பயன்படுத்தி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடக்க விலைக்கு குறைவாக தனது சேவைகளை வழங்குகிறது. இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் உள்ளிட்ட அனைத்து போட்டியாளர்களையும் அழிப்பதே ரிலையன்ஸ் ஜியோவின் திட்டம். தனது இந்த இலக்கை ரிலையன்ஸ் ஜியோ அடைந்தவுடன் தனது உண்மை சொரூபத்தை அது காட்டும். குரல் அழைப்புகள் மற்றும்இணையதள கட்டணங்களை கடுமையாக உயர்த்துவதன் மூலம் அது மக்களை கொள்ளையடிக்கும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு நரேந்திர மோடி அரசாங்கம் வெளிப்படையாக ஆதரவளிப்பது என்பதுதான் மிகவும் கவலைக்குள்ளாக்கும் விஷயம்.

‘ரிலையன்ஸ் வழியில் குறுக்கிடாதே’

ரிலையன்ஸ் ஜியோ தனது சேவைகளை துவக்கிய2016 செப்டம்பர் அன்று நாட்டின் அனைத்துமுக்கிய தினசரிகளின் முதல் பக்க விளம்பரங்களில், ரிலையன்ஸ் ஜியோவின் சேவை பயன்படுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி, கூப்பிய கரங்களோடுவேண்டுகோள் கொடுத்தார். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரதமர் மோடிக்கு நெருக்கமான நிறுவனம், எனவே அதன் இலக்கை அடைவதற்கான வழியில்யாரும் குறுக்கீடு செய்யக்கூடாது என்ற ‘தெளிவான’செய்தியை இந்த விளம்பரம் ஒட்டு மொத்த நாட்டுமக்களுக்கும் கொண்டு சென்றது. ரிலையன்ஸ் ஜியோவின் பாதையில் குறுக்கிட்டஒரு நபர் அதற்கான விலையை கொடுக்க வேண்டியதாயிற்று.அன்றைக்கு தொலைத்தொடர்பு துறையின் செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிஜே.எஸ்.தீபக் அவர்கள்தான் அது. ரிலையன்ஸ் ஜியோவின் கழுத்தறுப்பு விலைக் குறைப்பின் காரணமாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருவாய் குறைந்த காரணத்தால், அரசிற்கு வரவேண்டிய வருமானம் குறைந்துள்ளதை அவர் தைரியமாக சுட்டிக்காட்டினார். (தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தங்களின் வருவாயின் அடிப்படையிலேயே தான் அரசிற்கு லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரத்திற்கான கட்டணங்களை செலுத்தி வருகின்றன). ரிலையன்ஸ் ஜியோநிறுவனம் இத்தகைய கழுத்தறுப்பு விலையினை அமலாக்கி வருவதால் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வெண்டுமென இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (டிராய்) தீபக் கடிதம் எழுதினார். இதன் விளைவாக தீபக் அவர்கள் தொலைத் தொடர்பு துறையிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டு வணிகத் துறையில் சேர்க்கப்பட்டார். இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிராகபேசுபவர்களுக்கு இதுதான் கதி என்பதை நரேந்திரமோடி அரசாங்கம் தெளிவான சமிக்ஞையை கொடுத்தது.

பிஎஸ்என்எல்லின் சிறகுகளை வெட்டும் மோடி அரசு

இதர தொலைத் தொடர்பு நிறுவனங்களை அழித்தொழிக்க வேண்டும் என்கிற ரிலையன்ஸ் ஜியோவின் இலக்கை அடைவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிறகுகளை வெட்டும் திருப்பணிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம்100 சதவிகிதம் அரசுக்கு சொந்தமானது. தனியார்நிறுவனங்கள் 4ஜி சேவையை கொடுக்க ஆரம்பித்து4 ஆண்டுகள் கழிந்துவிட்டன.அரசாங்கம் 4ஜி அலைக்கற்றையை பிஎஸ்என்எல்-க்கு வழங்காத காரணத்தால், பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னமும் தனது 4ஜிசேவையை துவங்கவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்க வேண்டுமென அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் (ஏயுஏபி) கடந்த ஒருவருட காலமாக பல போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால், ரிலையன்ஸ் ஜியோவிற்கு ஒரு பொதுத்துறை நிறுவனம் தரும் கடுமையான போட்டியை தடுப்பதற்காகவே மத்திய ஆட்சியாளர்கள் இந்தக் கோரிக்கையின் மீது கேளாக்காதினராய் உள்ளனர்.

ஊழியர்களே பாதுகாக்கின்றனர்

இந்த இடத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்தை பலப்படுத்துவதில் அதன் ஊழியர்கள் ஒருமுக்கியமான பாத்திரத்தை வகித்துள்ளனர் என்பதைசுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும். பிஎஸ்என்எல் சேவையின் தரத்தை மேம்படுத்தவும், நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளில் ஊழியர்களை பெருந்திரளாக பங்கேற்க செய்வதற்கும் தேவையான உந்துதல்களை அவர்களுக்கு வழங்க, பலஇயக்கங்களை அவர்கள் துவங்கினர். “வாடிக்கையாளர் மகிழ்விப்பு வருடம்”, ‘‘புன்னகையுடன் கூடிய சேவை” “பிஎஸ்என்எல் உங்கள் வாயிற்படியில்” ஆகியவை பிஎஸ்என்எல்லில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களினால் சமீப காலங்களில் உருவாக்கப்பட்ட திட்டங்கள். இவற்றின் விளைவாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரம் உயர்ந்தது; அது அதன் வருவாய் உயர்விலும் வாடிக்கையாளர் உயர்விலும் தெரிய வந்துள்ளது.2011-12ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் ஒட்டு மொத்தமாக 8,800 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. எனினும், ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தின் கூட்டு முயற்சிகளின் காரணமாக 2014-15 ஆம் ஆண்டிலிருந்து செயல்பாட்டு லாபத்தை அடையத் துவங்கியது. இந்நிறுவனம் 2014-15ஆம் ஆண்டில் ரூ.672.57 கோடி 2014-15ல் செயல்பாட்டு லாபத்தை அடைந்தது. அது 2015-16ல் 3854.48 ரூபாயாக உயர்ந்தது. செப்டம்பர் 2016ல் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும், 2016-17ல் 1684 கோடி ரூபாய் செயல்பாட்டு லாபத்தை அடைந்தது.பிஎஸ்என்எல்லின் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்தது, அதன் செயல்பாடு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதைப் பறைசாற்றியது. உதாரணமாக 2017ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல்வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 11.5 சதவீதம்உயர்ந்தது. அதே ஆண்டில் ஏர்டெல்லின் வாடிக்கையாளர்களின் உயர்வு என்பது 9.13 சதவீதம், வோடோபோன் நிறுவனத்தின் உயர்வு 3.83 சதவீதம் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்கள் 3.14சதவீதம் மட்டுமே உயர்ந்தனர். இதர நிறுவனங்கள் எல்லாம் 4ஜி தொழில் நுட்பத்தோடு களம்இறங்கிய போது, பிஎஸ்என்எல் 2ஜி மற்றும் 3ஜி தொழில் நுட்பங்களை மட்டுமே வைத்துக் கொண்டுஇந்த சாதனையை செய்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. 4ஜி ஒதுக்கீடு வேண்டுமென்பதோடு, ஓய்வூதிய பங்களிப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் செலுத்தும் போது அரசு விதிகள் அமலாக்கப்பட வேண்டும் என ஏயுஏபி கோரிக்கை வைத்துள்ளது. ஓய்வூதிய பங்களிப்பு என்பதில் நரேந்திர மோடி அரசாங்கம், தான் விதித்த விதிகளையும் மீறி பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து ஆண்டு தோறும் ஒரு பெருத்ததொகையை கொள்ளையடிப்பது என்பது கொடூரமானது. இது இந்நிறுவனத்தின் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதிக்கிறது.

எதையும் ஏற்க மறுக்கும் மத்திய அரசு

01.01.2017 முதல் ஊழியர்களுக்கு, ஊதிய மாற்றத்தையும், ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தையும் அமலாக்க வேண்டும் என ஏயுஏபி கோரிக்கை வைத்துள்ளது. ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள், இதர பல போராட்டங்களை நடத்தியதோடு, 2017ஆம் ஆண்டில் இரண்டு முறை வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளது. அவற்றின் விளைவாக 2018, பிப்ரவரி 24ஆம் தேதி, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஏயுஏபி தலைவர்களை அழைத்து, அனைத்து கோரிக்கைகளையும் தீர்த்துவைப்பதாக உறுதிமொழி அளித்தார். எனினும் அந்த உறுதி மொழிகளின் மீது எட்டு மாத காலமாகதூங்கிக் கிடந்த தொலைத் தொடர்புத் துறை 2018,நவம்பர் 6 அன்று ஏயுஏபி யின் முக்கியமான கோரிக்கைகளை நிராகரித்து பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. இதுதான் பிஎஸ்என்எல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு செல்வதற்கு அடிப்படையான காரணம்.

மோடி அரசின் தாராளம்

நவீன தாராளமயக் கொள்கைகள் நம் நாட்டில் அமலாக்க துவங்கிய 1991 முதல் இதுநாள் வரை மத்தியில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கும் நோக்கத்தோடு அவற்றின் பங்குகளை தொடர்ச்சியாக தனியாருக்கு விற்று வருகின்றனர். 1991 முதல் 2018 வரையிலான இந்த 28 ஆண்டுகளில் இந்திய நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை 3,62,686.60 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளனர். அதில் மோடி தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்த இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 2,09,896.11 கோடி ரூபாய்களுக்கு விற்றுள்ளனர்.

பிஎஸ்என்எல்லில் தடுத்து நிறுத்திய ஊழியர்கள்

01.10.2000ல் வாஜ்பாய் அரசாங்கம் இருந்தபோது அரசுத்துறை நிறுவனமாக இருந்த தொலைத் தொடர்புத் துறை, பிஎஸ்என்எல் எனும் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது. அன்று முதல் இதன் பங்குகளை விற்பதற்கு தொடர்ச்சியாக அரசாங்கங்கள் எடுத்த முயற்சிகளை பிஎஸ்என்எல் ஊழியர்களும் அதிகாரிகளும் ஒன்றிணைந்து போராடி இன்று வரை ஒரு சதவிகித பங்குகளைக் கூட விற்க விடாமல் தடுத்து வந்துள்ளனர். மத்திய அமைச்சர் ஒருவர் ஒவ்வொரு ஊழியருக்கும் சலுகை விலையில் பங்குகளைத் தருவதாக ஆசை வார்த்தை கூறியதையும் நிராகரித்து உறுதியுடன் போராடி வருகின்றனர்.

கடன் வழங்குவதிலும் வஞ்சகம்

பிஎஸ்என்எல் பொதுத்துறையாக உருவாக்கும் போது அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சர் இந்நிறுவனத்திற்கு இலவசமாக அலைக்கற்றை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் அந்த உறுதி மொழி அமலாக்கப்படவேயில்லை. தற்போது 4ஜி அலைக்கற்றைக்காக அரசுக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்காக பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கவும் தொலைத் தொடர்புத்துறை தடை போடுகிறது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல், வங்கிகளில் மக்கள் சேமித்துள்ள பணத்தில் ரூ.1,13,000 கோடி கடனாக பெற்றுள்ளது. ஐடியா-வோடோபோன் நிறுவனம் ரூ.1,20,000 கோடி கடனாக பெற்றுள்ளது. ஆனால் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு மட்டும் கடன் வாங்க அரசு தடை விதிக்கின்றது.

எங்கே போனது பிஎஸ்என்எல் பணம்?

பிஎஸ்என்எல் வசம் சுமார் 40,000 கோடி ரூபாய்க்கு மேல் கையிருப்பு பணம் இருந்தது. ஆனால் அரசாங்கம் பிஎஸ்என்எல் உருவாக்கத்தின் போது அரசின் பணம் இருந்ததாக கூறி 7,500 கோடி ரூபாய்க்கு வட்டியாக சில ஆண்டுகள் கழித்து 12,500 கோடி ரூபாயை எடுத்துக் கொண்டது. அலைக்கற்றை ஏலத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பங்கு பெறவிடாமல் தடுத்து, தரம் வாய்ந்த அலைக்கற்றைகளை தனியாருக்கு வெறும் 5,000 கோடி மற்றும் 10,000 கோடி ரூபாய்க்கு கொடுத்து விட்டு, தரம் குறைந்த அலைக்கற்றைகளை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கொடுத்து, அதற்காக 18,500 கோடி ரூபாயை அபகரித்துக் கொண்டது. அது மட்டுமல்லாமல் வெளிப்புற பணிக்கு செல்லும் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதிய பங்கீட்டை வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்பது தான் அரசின் விதி. ஆனால் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டும் ஊதிய விகிதத்தின் உயர்ந்த பட்ச அளவில் வழங்க வேண்டும் என்று சுமார் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து அரசு கூடுதலாக எடுத்துக் கொண்டது. இந்நிறுவனத்தில் இருந்த பணம் அனைத்தையும் அரசாங்கமே எடுத்துக் கொண்டு தற்போது பிஎஸ்என்எல்லில் பணம் இல்லை என்று பிரச்சாரமும் செய்கிறது.

காசு இருந்தும் கை சேரவில்லை

பொதுத்துறை நிறுவன அதிகாரிகளின் ஊதிய மாற்றத்திற்காக மத்திய அரசு நியமித்த சதீஷ் சந்திரா கமிட்டி தனது பரிந்துரைகளை ஏற்கனவே கொடுத்துள்ளது. பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் 15 சதவீதம் ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய ஊதிய மாற்றத்தை கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒட்டு மொத்த இயக்குனர் குழுவே அரசிற்கு தெரிவித்துள்ளது. அத்துடன் அதற்காக ஆகும் கூடுதல் செலவிற்கு அரசாங்கம் நிதி ஏதும் தரவேண்டிய அவசியம் இல்லை. எங்களின் சொந்த ஆதாரத்தில் இருந்தே நாங்கள் செலவு செய்கிறோம் என்றும் அந்த இயக்குநர் குழு தெரிவித்திருந்தது. பிப்ரவரி 24ஆம் தேதி, பிஎஸ்என்எல்-ல் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் தலைவர்களை சந்தித்த மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா, அவர்கள் அதற்கான அமைச்சரவை ஒப்புதலை உடனே பெற்றுத் தருவதாகவும், அதற்கான அமைச்சரவைக் குறிப்பை தொலைத் தொடர்புத்துறை தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கழிந்த பின்னரும் அதற்கான குறிப்பை தொலைத் தொடர்புத்துறை தயாரிக்காமல் உள்ளது. இது இந்நிறுவனத்தை புத்தாக்கம் செய்ய கடுமையாக உழைக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மனோநிலையை பாதிக்க செய்கிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சரும் ஏதும் பேச மறுத்து வருகிறார். இந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவும் மத்திய அமைச்சரும் ஏற்றுக் கொண்ட பிரச்சனையை தீர்வு காண அரசாங்கம் மறுத்து வருவது நியாயமில்லை.

பி.அபிமன்யு

பொதுச் செயலாளர்,

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், (பிஎஸ்என்எல்இயு)

புதுதில்லி

ஏ.பாபு ராதாகிருஷ்ணன்

தமிழ் மாநிலச் செயலாளர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், சென்னை