புதுதில்லி, நவ.30-பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர்களும் அதிகாரிகளும் வரும் டிசம்பர் 3இலிருந்து தொடங்கும் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு சிஐடியு-வும் ஏஐடியுசி-யும் ஆதரவு அளித்துள்ளன.இதுதொடர்பாக சிஐடியு சார்பில் அதன் பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:ஊதியத் திருத்தம், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைவரிசையை ஒதுக்கீடு செய்தல், 2017 ஜனவரி 1 முதல் ஓய்வூதியத் திருத்தத்தை மேற்கொள்ளுதல் முதலான கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இக்கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவைகளாகும். அவர்களின் ஊதியம் ஏற்கனவே திருத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்படாமல் அரசாங்கம் காலம் கடத்தி வருகிறது. இதனை ஏற்கமுடியாது.ஊழியர்களின் கோரிக்கைகளை முன்பு ஏற்றுக்கொண்ட மத்திய அரசு இப்போது அவர்களுக்கு அளித்த உறுதிமொழிகளுக்கு துரோகம் இழைத்துள்ளதை அடுத்து அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஊழியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய வேலையின் காரணமாகத்தான் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளாக இலாபத்தில் இயங்கி வருகிறது.அவர்களுக்கு 2017ஜனவரி 1 முதல் ஊதியத் திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்.அதேபோன்று பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைவரிசையை ஒதுக்கீடுசெய்யாமல் மத்திய மோடி அரசாங்கம் வேண்டுமென்றே காலம் கடத்திக் கொண்டிருக்கிறது.போராடும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் – அதிகாரிகளின் வேலைநிறுத்தத்திற்கு சிஐடியு தன் ஆதரவினை விரிவாக்கிக்கொள்கிறது. நாட்டிலுள்ள தொழிற்சங்க இயக்கமும், தொழிலாளர்களும் முழுமையாக அவர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று சிஐடியு கேட்டுக் கொள்கிறது.மத்திய அரசாங்கம் போராடும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்-அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்என்றும் சிஐடியு கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு தபன்சென் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏஐடியுசி ஆதரவு

ஏஐடியுசி சார்பாக அதன் செயலாளர் சுகுமார் தாம்லே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டுள்ள போதிலும், பிஎஸ்என்எல் நிறுவனம் இலாபத்தை ஈட்டிக்கொண்டிருக்கிறது. கேரள வெள்ளத்தின்போது பிஎஸ்என்எல் ஊழியர்கள் அளித்திட்ட சேவையை அனைத்துத்தரப்பு மக்களுமே வெகுவாகப் பாராட்டினர்.பிஎஸ்என்எல் ஊழியர்கள்-அதிகாரிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தந்திட வேண்டும்என்று மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து கடிதம் அனுப்பியுள்ளன. அர்ப்பணிப்புடன் செயல்படும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு சுகுமார் தாம்லே தன் கடிதத்தில் கோரியுள்ளார்.

BSNL Employees Union Nagercoil