2 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பு


சென்னை, டிச. 23-

ஜனவரி 8, 9 தேதிகளில் நடைபெற உள்ளஅகில இந்திய வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 2 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் மு,சுப்பிரமணியன். பொதுச் செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த நான்கரை ஆண்டுகாலமாக மத்திய அரசு கடைப்பிடித்து வரும் மக்கள் விரோத பொருளாதார கொள்கையின் விளைவாக நாடு முழுவதும் தொழிலாளர்களும், ஏழை, எளிய, நடுத்தரமக்களும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் நலச்சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளதுடன் அவற்றைபெரு முதலாளிகளுக்கு சாதகமாக்கியிருப்பதும், தொழிற்சங்கங்களை புறக்கணிப்பது என்றபோக்கும், தொழிலாளர்கள் மீதான தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி,தொழில் வரி போன்றவற்றாலும் அரசு ஊழியர்சமுதாயம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது.இந்நிலையில் தில்லியில் கூடிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் வரும் ஜனவரி8, 9 தேதிகளில் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப் பட்டுள்ளது. அகில இந்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் செயற்குழு கூட்டத்தில் மாநிலஅரசு ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களும் அந்த இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த தினக் கூலி முறையை கைவிட்டு அவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும், மத்திய -மாநில அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சஊதியம் 18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும்,பொதுத் துறை பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யக் கூடாது, வருமான வரி, போனஸ் உச்சவரம்பை நீக்க வேண்டும், எழுத்துரிமை – பேச்சுரிமையை கடந்த நான்கரை ஆண்டுகளாக நசுக்கி வருவதைக் கண்டித்தும், மத்திய- மாநில அரசுகளின் புதிய பொருளாதாரக் கொள்கையை கண்டித்து வரும் 8, 9 தேதிகளில்நடைபெறும் வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 2 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள். இதற்கான வேலை நிறுத்த நோட்டீசை திங்களன்று (டிச. 24) தலைமைச் செயலாளரிடம் வழங்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.