சென்னை, டிச. 23.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்,பொதுத்துறை, கூட்டுறவு நிறுவனங்களை தனியார்மயமாக்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 8, 9 தேதிகளில் நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தையொட்டி டி.ஆர்.இ.யூ, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயீஸ் யூனியன், மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனம் உள்ளிட்ட 13 சங்கங்களின் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு தலைமையில் சென்னை கேரள சமாஜத்தில் ஞாயிறன்று (டிச. 23)நடைபெற்றது.இதுகுறித்து சிங்காரவேலு கூறியதாவது:மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதகொள்கையை எதிர்த்து நாடுமுழுவதிலும் பலகட்ட போராட்டங்கள், இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தொழிலாளர்களின் உரிமைகளை அப்பட்டமாக நசுக்குவதற்கு மத்திய மோடி அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்களைமுடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரையறுக்கப்பட்ட காலப்பணி மூலமாக தொழிலாளர்கள் கடுமையாக சுரண்டப்படுகின்றனர்.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் தீர்மானங்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்குமான தொடர் முயற்சியில் மத்திய மோடி அரசுஈடுபட்டு வருகிறது. வங்கி, இன்சூரன்ஸ், பி.எஸ்.என்.எல்., ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தனியார்மயத்தை ஊக்குவிக்கவும், அந்நிய நேரடி முதலீடுகளை அதிகரிக்கவும் மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நவீன தாராளமயக்கொள்கை துவங்கிய 1991ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகளில் நடைபெற்ற பங்கு விற்பனையைப் போல் 137 விழுக்காடு இந்த 4 ஆண்டு காலத்தில் நடைபெற்றுள்ளது. 2017ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் 73விழுக்காட்டில், ஒருவிழுக்காட்டை பெரும் பணக்காரர்கள் அபகரித்துள்ளனர். கடுமையான ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது.எனவே வரும் 8, 9 தேதிகளில்மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை, தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து அகில இந்திய அளவில்வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இதில் வங்கி, ரயில்வே, போஸ்டல் உள்ளிட்டஅனைத்துத்துறை ஊழியர்களும், தொழிலாளர்களும் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்தரங்கில் ஆர்.இளங்கோவன் (டி.ஆர்.இ.யூ), எம்.ஞானத்தம்பி (அரசு ஊழியர் சங்கம்), டி.செந்தில்குமார் (அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்), டி.தமிழரசு (வங்கி), எம்.மாறன் (பி.எஸ்.என்.எல்), ஆர்.பி.சுரேஷ் (போஸ்டல்), சி.பி.கிருஷ்ணன் (வங்கி ஊழியர் சம்மேளனம்), டி.நரேந்திரன் (இந்திய நீர்வழி போக்குவரத்து ஊழியர் சம்மேளனம்), எஸ்.எஸ்.பெருமாள் (மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம்), சி.கே.நரசிம்மன் (என்.சி.சி.பி.ஏ) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

BSNL Employees Union Nagercoil