இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருப்பதாக இந்திய பொருளாதாரக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.குறிப்பாக, கடந்த 27 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலையின்மை, தற்போது 8.46 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.‘இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை’ என்ற தலைப்பில், தொழில்துறை அமைச்சகம் மற்றும் இந்தியப் பொருளாதார கண்காணிப்பகம் சார்பில் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதில், கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த வகையில் வேலைவாய்ப்பின்மையின் சதவிகிதம் 7.38 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே 2018 நவம்பர் மாதத்தில் 6.62 சதவிகிதமாகவும், 2017 டிசம்பர் மாதத்தில் 4.78 சதவிகிதமாகவும் வேலைவாய்ப்பின்மை இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.குறிப்பாக, வேலைவாய்ப்பின்மை, வேலையிழப்பு ஆகியவற்றால், கிராமப்புறங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பதும் புள்ளிவிரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் 2018-ஆம் ஆண்டில் மட்டும் தினக்கூலித் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், கல்வி கற்காதவர்கள், சிறு வணிகர்கள் என சுமார் 1 கோடியே 30 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். இவர்களில் பெண்கள் மட்டும் 1 கோடியே 09 லட்சம் பேர் என்று கூறப்படுகிறது.புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பில் இதுவே 83 சதவிகிதம் ஆகும்.வேலை அளிக்கும் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பும் குறைந்து கொண்டே வருகிறது. நகர்ப்புறங்களில் 13.84 என்ற அளவில் இருந்த வேலைவாய்ப்புகள், தற்போது 13.66 ஆக சரிந்துள்ளது என்பதையும் புள்ளி விவரங்கள் காட்டியுள்ளன.

BSNL Employees Union Nagercoil