நம்மால் ஜீவா என்றழைக்கப்பட்ட ப.ஜீவானந்தம் பூதப்பாண்டியில் பிறந்தவர். தீவிர காங்கிரஸ்காரரான ஜீவா சேரன்மாதேவி குருகுலத்தில் பணியாற்றினார். அதன் செயல்பாடு பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறி சிராவயலில் தனியாக காந்தி பெயரில் ஆசிரமம் நடத்தினார். அங்கு வந்த காந்திஜி ஜீவாவை, நீங்கள் தான் இந்தியாவின் சொத்து என்று பாராட்டினார். அப்போது காங்கிரஸ்காரராக இருந்த பெரியார் ஜீவாவை தன்னுடன் அழைத்துக் கொண்டார். சோவியத் ரஷ்யா சென்று திரும்பிய பெரியார் தீவிரமாக பொதுவுடமை பிரச்சாரம் செய்தார். அந்த காலத்தில்தான் ‘ஈரோட்டுப் பாதை’ என்கிற சமதர்ம பிரகடனம் வெளியிடப்பட்டது. இதற்கு சிந்தனை சிற்பி சிங்காரவேலர், ஜீவா முக்கியக் காரணம். பின்னர் அதிலிருந்து பெரியார் பின்வாங்கியதால் ஜீவா தனி இயக்கம் கண்டார். ஆனால் காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்களாக இருந்த பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ் போன்றவர்களின் தொடர்பால் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின்னர் கம்யூனிஸ்ட் ஆனார். சிறந்த பேச்சாளரான ஜீவா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரச்சார முகமாக திகழ்ந்தார். ‘‘காலுக்குச் செருப்புமில்லை’’ போன்ற போராட்டப் பாடல்களை எழுதினார். வண்ணாரப் பேட்டை தொகுதி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றினார். ஜனசக்தி நாளிதழ், தாமரை மாத இதழ் ஆசிரியராக செயல்பட்டார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் அவரால் துவங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் பலமுறை சிறைப்பட்டார். வாழ்நாளெல்லாம் உழைப்பாளி மக்களுக்காய் உழைத்த ஜீவா 1963 ஜனவரி 18இல் காலமானார். ஆயினும் தமிழக மக்கள் மனதில் இன்றும் வாழ்கிறார்.