இந்தியாவின் 50 சதவிகித சொத்துக்கள், விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய வகையில், வெறும் ஒன்பது பேரிடம் குவிந்திருப்பதாக, ‘ஆக்ஸ்பாம்’ அமைப்பு அறிக்கை அளித்துள்ளது.சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ள உலகப்பொருளாதார மாநாட்டையொட்டி, இந்த அறிக்கையை, சர்வதேச நலஅமைப்பான ‘ஆக்ஸ்பாம்’ வெளியிட்டுள்ளது. அறிக்கையில், மேலும் கூறப் பட்டிருப்பதாவது:“இந்தியாவில் 119 கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 18 புதிய கோடீஸ்வரர்களை இந்தியா உருவாக்கியுள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு ரூ.28 லட்சம் கோடியாகும்.அத்துடன், 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் இந்தியா 70புதிய கோடீஸ்வரர்களை புதிதாக உருவாக்கப் போகிறது.இந்தியாவில் உள்ள 10 சதவிகித கோடீஸ்வரர்கள் நாட்டின் 77.4 சதவிகித சொத்துகளை வைத்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக ஒருசதவிகித கோடீஸ்வரர்கள் மட்டும்நாட்டின் 51.53 சதவிகிதச் சொத்துகளை வைத்துள்ளனர்.அடிமட்டத்தில் உள்ள 60 சதவிகித மக்களிடம் வெறும் 4.8 சதவிகித சொத்துகள் மட்டுமே உள்ளன. நாட்டில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறது ஏழைகள் கையில் கூட 2000 ரூபாய் புழங்குகிறது என்று அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால் நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. 13 கோடியே 60 லட்சம் மக்கள்தொடர்ந்து வறுமையிலும், ஏழ்மை நிலையிலும் இருந்து வருகின்றனர். பல கோடி ஏழைகள் உணவுக்கே கஷ்டப்படும் நிலையில்கோடீஸ்வரர்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆரோக்கியமான கல்வி, தரமான சுகாதார வசதிகள் ஆகியவற்றைப் பணக்காரர் கள் மட்டுமே உயர் தரத்தில் பெற்று வருகின்றனர்.

பணக்கார வீடுகளின் குழந்தைகள் முதல் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு உள்ளாகவே, ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் மூன்று மடங்கு அளவிற்கு இறந்துபோகின்றன.மத்திய, மாநில அரசுகளின் மருத்துவம், பொதுச் சுகாதாரம், குடிநீர் ஆகியவற்றின் வருவாய் மற்றும் செலவுகள் ரூ. 2 லட்சத்து 8 ஆயிரத்து 166 கோடியாகும். இது முகேஷ் அம்பானியின் சொத்தான ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் கோடியைக் காட்டிலும் குறைவுதான்.இந்தியாவில் உள்ள கோடீஸ் வரர்களில் ஒரு சதவிகிதம் பேரின்சொத்துகள் மீது 0.5 சதவிகிதம் வரி விதித்தாலே நாட்டு மக்களின் சுகாதாரத் திட்டங்களுக்கு கூடுதலாக 50 சதவிகிதம் நிதி கிடைக்கும்.”இவ்வாறு ஆக்ஸ்பாம் கூறியுள்ளது.மேலும், “இந்தியாவில் உள்ள ஒரு சதவிகித கோடீஸ்வரர்களுக்கும், மீதமுள்ள இந்திய மக்களுக்கும் இடையிலான வெறுப்பூட்டும் வகையிலான இடைவெளி அதிகரித்தால், நாட்டின் சமூக, ஜனநாயகக் கட்டமைப்பு முழுமையாக சிதைந்து விடும்” என்றும் ஆக்ஸ்பாம் எச்சரித்துள்ளது.