இந்திய சுதந்திரத்திற்காகப் போராடி, அந்த லட்சியத்தில் வெற்றி பெற்ற மகாத்மா காந்தி, சுதந்திர தினவிழாவில் கலந்து கொள்ளவில்லை என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? மகாத்மாகாந்தி, நாடு விடுதலை பெற்ற தினமான 1947 ஆகஸ்ட் 15 அன்று, கல்கத்தா வீதிகளில் ஒரு எளியமனிதனாக நடமாடிக் கொண்டிருந்தார். அவர் தில்லியில்தங்காமல் கல்கத்தா சென்றதற்கு முக்கிய காரணம் இருந்தது.அந்த சமயம் தேசப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் வகுப்புக் கலவரங்கள் மூண்டன. குறிப்பாக, கல்கத்தாவில் கலவரம் மிகவும் பயங்கரமாக வெடித்தது. இதுவரை சுதந்திரத்திற்காகக் போராடிய காந்தியடிகள், இனி வகுப்புக் கலவரங்களுக்கு முடிவு கட்டி, அமைதியை நிலைநாட்டுவதே தனது முதற்பணி எனக் கருதினார். கலவரப் பகுதிகளில் அமைதி யாத்திரையை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் கல்கத்தாவுக்குச் செல்ல முடிவு செய்தார்.“சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளுங்கள். பின்னர் கல்கத்தாவுக்குச் செல்லலாம்” என்று காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் காந்தியடிகள் மறுத்துவிட்டார். “சுதந்திரச்செய்தி” கூட வெளியிடாமல் கல்கத்தாவுக்குச் சென்றார். கலவரப்பகுதிகளில் அச்சமின்றி நடந்து சென்றார். மக்களைப்பார்த்து அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

காந்தியின் உண்ணாவிரதம்

ஆகஸ்டு 15ந் தேதி நாடு முழுவதும் சுதந்திரத் திருநாள் மகிழ்ச்சிப் பெருக்குடன் கொண்டாடப்பட்டது. ஆனால், அன்று கல்கத்தாவில் காந்தி உண்ணாவிரதம் இருந்தார். நூல் நூற்றார். பிரார்த்தனை நடத்தியபின் கல்கத்தா நகரைச் சுற்றிப்பார்த்தார். அமைதி திரும்பிக்கொண்டிருப்பதையும், இந்துக்களும், முஸ்லிம்களும் நேசமாய்ப் பழகுவதையும் கண்டு காந்தி மகிழ்ச்சியடைந்தார்.

செங்கல் வீச்சு

கல்கத்தாவில் ஒரு முஸ்லிம் நண்பர் வீட்டில் காந்திதங்கியிருந்தார். ஆகஸ்டு 31ஆம் தேதி இரவு சில இளைஞர்கள் வந்து கதவைத்தட்டினர். காந்தி வெளியே வந்தார்.கோபத்துடன் நின்று கொண்டிருந்த இளைஞர்களைப் பார்த்து, வணக்கம் தெரிவித்தார். கூட்டத்திலிருந்து ஒருவன் காந்தியை நோக்கி ஒரு செங்கல்லை வீசினான்.ஆனால் அது குறிதவறி, அருகில் நின்றுகொண்டிருந்த காந்தியின் நண்பரைத் தாக்கியது.கூட்டத்திலிருந்த ஒரு இளைஞன் தன் கையிலிருந்த தடியை காந்தியை நோக்கி வீசினான். காந்தியின் தலையை நோக்கிப் பறந்த அந்தத்தடி, நூலிழையில் குறி தவறியது. இதற்கிடையே போலீசார் அங்குவந்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, கூட்டத்தைக் கலைத்தனர்.

சாகும்வரை உண்ணாவிரதம்

இச்சம்பவம் நடந்த மறுநாள், செப்டம்பர் 1அன்று காந்தி ஓர் அறிக்கை வெளியிட்டார். “கலகக்காரர்களுடன் நேருக்கு நேர் சந்தித்துப் பேசினால், பலன் கிடைக்கும்என்று நினைத்தேன். நடக்கவில்லை. எனவே, இன்றுமுதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்.கலவரம் அடங்கினாலொழிய உண்ணாவிரதத்தை நிறுத்தமாட்டேன்” என்று அறிவித்துவிட்டு உண்ணாவிரதம் தொடங்கினார்.காந்தியின் இந்த உண்ணாவிரதம், அனைவரையும் உலுக்கியது. முஸ்லிம்களும் மற்றும் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் காந்தியிடம் சென்று, இனி அமைதிக்குப் பாடுபடுவதாகத் தெரிவித்தனர். கலவரங்களுக்குக் காரணமானவர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று இனி வன்முறையில் ஈடுபடமாட்டோம் என காந்தி முன்னிலையில் சபதம் ஏற்றனர். உண்ணாவிரதம் தொடங்கிய6வது நாள் அதிகாரிகள் காந்தியைச் சந்தித்து “கல்கத்தாவில் அமைதி திரும்பியிருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை” எனத் தெரிவித்தனர். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் பிரதிநிதிகள் காந்தியைச் சந்தித்து “அமைதி காப்போம்” என்று உறுதிமொழி எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளத் தீர்மானித்தார் காந்தி. அன்றைய வங்காள முதலமைச்சர் எச்.எஸ்.சக்ரவர்த்தி கொடுத்த ஆரஞ்சுப்பழச்சாற்றை அருந்தி, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் காந்தி. அதன்பிறகு கல்கத்தா நகரில் வன்முறை ஏதும்நிகழவில்லை. அமைதியை நிலைநாட்ட காந்தி ஆற்றியஅரும்பணியை, கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபு வானொலியில் பேசியபோது பாராட்டினார். “50 ஆயிரம் படை வீரர்களாலும் அடக்க முடியாத கலவரத்தை காந்தி தன்னந்தியாய் அடக்கி அமைதிப்படுத்தினார்” என்று புகழாரம் சூட்டினார்.

தில்லி திரும்பினார் காந்தி

கல்கத்தாவிலிருந்து செப்டம்பர் 7ஆம் தேதி காந்திதில்லிக்குத் திரும்பினார். காந்தி தில்லியிலிருக்கும்போது பஞ்சாப் மாநிலத்தில் கலவரம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. பஞ்சாப் செல்லத் திட்டமிட்டார் காந்தி.ஆனால் தில்லியிலும் கலவரம் நடக்கவே கவலைஅடைந்த காந்தி, மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்தார். ஆனால், காந்தி உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்னால் டாக்டர்களையோ, நேரு,படேல் போன்ற தலைவர்களையோ கலந்து ஆலோசிக்கவில்லை. 1948 ஜனவரி 14 அன்று தில்லியில் காந்தி உண்ணாவிரதம் தொடங்கினார். வாழ்நாளில் மகாத்மா காந்தி கடைசியாக மேற்கொண்ட உண்ணாவிரதம் இதுதான். அப்போது காந்திக்கு வயது 78. உண்ணாவிரதம் தொடங்கிய மூன்றாம் நாள் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் “உண்ணாவிரதத்துக்குப்பிறகு காந்தி பிழைத்தாலும் அவர் உடல்நலம் நிரந்தரமாகப் பாதிக்கப்படலாம்’’ என்று எச்சரித்தனர்.ஆனாலும் காந்தி எதற்கும் கலங்காமல் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதத்தின் 4வது நாள் ஒரு கட்டிலில் சாய்ந்தபடி ஒலிபெருக்கி மூலம் மக்களிடையே பேசினார். “என் மரணம் குறித்தோ அல்லது உண்ணாவிரதத்துக்குப்பிறகு எனக்குஏற்படக்கூடிய உடல் ஊனம் பற்றியோ நான் அஞ்சவில்லை. டாக்டர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையாவது மக்களை ஒன்றுபடுத்தி அமைதியை நிலைநாட்ட உதவும்என்று நம்புகிறேன்” என்றார்.உண்ணாவிரதத்தின் ஐந்தாம்நாள், காந்தியைச்சென்று பார்த்தார் நேரு. காந்தியின் உடல்நிலை மிகவும்மோசமாகியிருந்தது. நேருவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான தந்திகள் குவிந்தன. பாகிஸ்தானிலிருந்தும் ஏராளமான முஸ்லிம் மக்கள் தந்திகள் அனுப்பியிருந்தனர்.அமைதி காப்பதாக எல்லா மதத்தினரும் காந்தியிடம்சென்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜேந்திரபிரசாத் அறிக்கை விடுத்தார். அதன்படி ஜனவரி 10ஆம்தேதி ராஜேந்திர பிரசாத்தின் இல்லத்திலிருந்து அனைத்து மதங்களையும் சேர்ந்த 100 தலைவர்கள் காந்தி தங்கியிருந்த பிர்லா மாளிகைக்குச் சென்றனர். நேருவும் அபுல்கலாம் ஆசாத்தும் முன்னதாகவே அங்குவந்திருந்தனர். மத நல்லிணக்கத்தைக் காப்பதாக, காந்திஜி முன்னிலையில் அனைத்து மதத் தலைவர்களும் உறுதிகூறி, கையெழுத்திட்டனர். அங்கு வந்திருந்த பாகிஸ்தான் தூதரும் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக காந்தி அறிவித்தார். அபுல் கலாம் ஆசாத் கொடுத்தஆரஞ்சுப் பழச்சாற்றைப் பருகி, காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அமைதி திரும்பும் எனஅனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்த சம்பவமோ வேறு!

மதவெறியனின் தோட்டா!

தில்லி பிர்லா மாளிகையில் தங்கியிருந்த காந்தி தினமும் மாலை, அங்குள்ள மைதானத்திற்குச் சென்று பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசுவது வழக்கம். கடைசியாக உண்ணாவிரதம் இருந்த பின், காந்தியின் உடல் மிகவும் சோர்வடைந்திருந்தது. என்றாலும், மாலையில் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்லத் தவறுவதில்லை. 1948, ஜனவரி 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை, வழக்கம்போல் அதிகாலை 3.30 மணிக்குத் தூக்கம் கலைந்து எழுந்தார் காந்தி. சிறிது நேரம் பிரார்த்தனை செய்தபின், வழக்கமான எலுமிச்சை ரசமும் தேனும் கலந்த வெந்நீர் பருகினார். பின்னர் தன் அறைக்குள் சிறிது நேரம் உலவிய காந்தியடிகள், தன் உதவியாளர் பியாரிலாலை அழைத்து அன்றைய வேலைகள் குறித்துத் திட்டமிட்டார். அன்றைய தினம்சுதந்திர தினச்செய்தி வாங்கிச் செல்வதற்காக இலங்கையிலிருந்து டாக்டர் டி.சில்வா வந்திருந்தார். அவருடன் வந்திருந்த அவரது மகள் காந்தியிடம் கையெழுத்து வாங்கினாள். மகாத்மாகாந்தி போட்ட கடைசிக் கையெழுத்து அதுதான்.தன்னைப் பார்க்க வந்திருந்த சர்தார் வல்லபாய் பட்டேலுடன் தனியாகச் சிறிது நேரம் காந்தி பேசிக் கொண்டிருந்தார். நேருவுக்கும் படேலுக்கும் தொடர்ந்துகருத்து வேற்றுமை இருந்து வந்தது. அவ்வப்போது காந்திதலையிட்டு சமாதானம் செய்து வந்தார். அன்று படேல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என்கிறமுடிவை காந்தியிடம் தெரிவிக்க வந்திருந்தார். காந்தி அவரை சமாதானப்படுத்திப் பேசிக் கொண்டிருந்ததால் வழக்கமாக ஐந்து மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும்காந்தி 10 நிமிடம் தாமதமாக வந்தார். தனது பேத்திகள்ஆபா காந்தியுடனும், மனு காந்தியுடனும் நகைச்சுவையாகப் பேசியபடியே காந்தி நடந்து சென்றார்.பத்து நிமிடம் காலதாமதமாகிவிட்டதால், காந்தி சற்றுவேகமாக நடந்தார். பிரார்த்தனைக்கூடத்தில் கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று காந்திக்கு வழிவிட்டு வணங்கினர். காந்தியும் பதிலுக்கு கைக்கூப்பி வணங்கினார்.திடீரென்று ஒரு இளைஞன் இடது பக்கத்திலிருந்து கூட்டத்தை விலக்கியபடி ஓடிவந்தான். அவன் காந்தியின் பாதங்களைத் தொட்டு வணங்குவதற்கு வருவதாக மனுகாந்தி நினைத்தார். யாரும் தன் காலில் விழுவதை காந்தி எப்போதும் விரும்புவதில்லை. எனவே, மனுகாந்தி, “வேண்டாம், பாபு விரும்பமாட்டார்” என்று தடுத்தார்.அந்த இளைஞன் மனுகாந்தியைப் பிடித்து அப்பால்தள்ளிவிட்டான். மனுவின் கையிலிருந்த காந்தியடிகளின் நோட்டுப்புத்தகம், ஜெபமாலை ஆகியவை கீழே விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக மனுகாந்தி கீழேகுனிந்தார். கண்மூடித்திறப்பதற்குள் அந்த இளைஞன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, காந்திஜிக்கு எதிரே இரண்டடி தூரத்திலிருந்து மூன்றுமுறை சுட்டான். மூன்று குண்டுகளும் காந்தியின் மார்பில்பாய்ந்தன.முதல் குண்டு பாய்ந்ததும் காந்தியின் கால் தடுமாறியது. வணங்கியபடியே இருந்த கைகள் கீழேசரிந்தன. இரண்டாவது குண்டு பாய்ந்ததும் ரத்தம் கொப்பளித்து அவரது உடையை நனைத்தது.‘‘ஹேராம், ஹேராம்” என காந்தி இரண்டுமுறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும் தரையில் ஈரமண்ணிலும், புல் தரையிலும் விழுந்தார். சுட்டுக் கொன்றவனை போலீசார் கைது செய்தனர். அவன்தப்பிஓடஎவ்வித முயற்சியும் செய்யவில்லை. துப்பாக்கியுடன் நின்ற அவனைக் கூட்டத்தினர் ஆவேசத்துடன் தாக்கினர். அந்தத்தாக்குதல் நீடிக்கப்பட்டிருந்ததால் கொலையாளி மக்களால் கொல்லப்பட்டிருக்கலாம். போலீசார் தலையிட்டு அவனை மீட்டுத் துப்பாக்கியைக் கைப்பற்றினர். கொலையாளி பலத்த பாதுகாப்புடன் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டான். அவன்தான் காந்தியை படுகொலை செய்ய ஆர்.எஸ்.எஸ்.அமைப்பால் நியமிக்கப்பட்ட 37 வயதான, புனே நகரைச்சேர்ந்த நாதும் ராம் வினாயக் கோட்சே என்னும் இந்துத்துவா மதவெறியன்.

மகாத்மாவின் இறுதி ஊர்வலம்

காந்தி சுடப்பட்டார் என்ற செய்தி பிரதமர் நேருவுக்குஉடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. பிர்லா மாளிகைக்கு விரைந்த நேரு காந்தியின் உடல் அருகே மண்டியிட்டு அமர்ந்து, காந்தியின் ரத்தக்கறை படிந்த உடையில் தனது முகத்தைப் புதைத்துக்கொண்டு குழந்தைபோலக் கண்ணீர்விட்டு அழுதார். சற்றுநேரத்திற்குப் பின் கூடியபெருங்கூட்டமும், காந்தியின் மகன் தேவதாஸ் காந்தியும்காந்தியின் உடலைப்பார்த்துக் கதறினார்கள். காந்தியின்உடலைச்சுற்றி மக்கள் அமர்ந்து காந்திக்குப்பிடித்தமான பிரார்த்தனை செய்தனர். “காந்தியின் உடலைத் தைலமிட்டு மாமேதை லெனின் உடல்போல் நிரந்தரமாக வைக்கலாம்” என்று சிலர் யோசனை தெரிவித்தனர். காந்தியின் மகன் இதை மறுத்துவிட்டார். அதிகாலையிலிருந்தே வெளிநாட்டுத் தலைவர்களும், தூதுவர்களும், பிரமுகர்களும் வந்து அஞ்சலி செலுத்திக் கொண்டேயிருந்தனர்.காந்தியின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. முப்படைகளைச் சேர்ந்த 200 வீரர்கள் ராணுவ வண்டியை இழுத்துச் சென்றனர். இரண்டு மைல் ஊர்வலத்தில் சுமார் 15 லட்சம் மக்கள் நடந்து சென்றனர். “மகாத்மா அமரர் ஆனார்” என்று கூட்டத்தினர் குரல் எழுப்பினர். இடையிடையே பலர் காந்திக்குப் பிடித்தமான பிரார்த்தனையை செய்து கொண்டே வந்தனர். ஊர்வலத்துக்கு மேலேமூன்று விமானங்கள் பறந்து ரோஜா இதழ்களைத் தூவிக் கொண்டே வந்தன. பீரங்கி வண்டியின் முன்னும்பின்னும் நாலாயிரம் ராணுவ வீரர்களும், ஆயிரம் விமானப்படையினரும், ஆயிரம் போலீசாரும், நூறு கடற்படையினரும் நடந்து வந்தனர். ஐந்தரை மைல்தூரம் இறுதிஊர்வலம் சென்று யமுனை நதிக்கரையில் உள்ள ராஜ கட்டத்தை அடைந்து, பல லட்சம் மக்கள் கதறி அழ, காந்தி சிதைக்கு காந்தியின் மகன் ராம்தாஸ் காந்தி தீ மூட்டினார்.

ஒளிவிளக்கு அணைந்தது

காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அன்று நேரு குரல் தழுதழுக்க ரேடியோவில் பேசினார். “நமது வாழ்வின் ஒளிவிளக்கு அணைந்துவிட்டது. தேசத்தந்தை மறைந்துவிட்டார். ஆறுதல் பெறுவதற்கோ, ஆலோசனைகள் பெறுவதற்கோ இனி அவரிடம் போக முடியாது. இந்த நாட்டின்கோடானு கோடி மக்களுக்குப் பேரிடி”.‘‘புத்தருக்குப்பின் இந்தியாவில் தோன்றிய மாமனிதர்மறைந்துவிட்டார்’’ என்று உலகத் தலைவர்கள் கண்ணீர்சிந்தினர். ‘‘அளவுக்கு மீறி நல்லவராக இருப்பதுகூடக் கொடியது போலும்’’ என்றார் பெர்னார்ட்ஷா. ‘‘இந்தியாவின் பெயரையே காந்தி நாடு என்று மாற்றலாம்” என்றார்தந்தை பெரியார். காந்தியின் மரணச்செய்தியை அறிந்ததும் ஐ.நா.சபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. உலக நாடுகள் அனைத்திலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன.

தீர்க்கதரிசி

‘‘நோய்வாய்ப்பட்டோ, விபத்தினாலோ நான் மரணம் அடையமாட்டேன். ஒரு கொலையாளியின் கையினால், கொள்கைக்காக உயிர் துறக்கும் தியாகியாக நான்உயிர் துறப்பேன்’’ காங்கிரஸ்தலைவர்களிடம் காந்தி கூறியது இது. ஆம்! ஒரு இந்துத்துவ மதவெறியனின் குண்டுக்கு காந்திஇரையானார். காந்தியைத் துளைத்த மதவெறித் தோட்டாக்கள் மீண்டும் உயிர்த்தெழத் துடிக்கின்றன. இந்த மண்ணில்மார்க்சிஸ்ட்டுகள்- கம்யூனிஸ்ட்டுகள் இருக்கும் வரைஅதை ஒருபோதும் அனுமதியோம்.