பிஎஸ்என்எல் பொதுத்துறையை பாதுகாப்போம் என்கிற முழக்கத்துடன் பிப்ரவரி 18ல் துவங்கி மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பிஎஸ்என்எல் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டுக்கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் கோவை பிஎஸ்என்எல் தலைமையகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இதனையடுத்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.பாபு ராதா கிருஷ்ணன், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.நடராஜ் ஆகியோர் கூறியதிலிருந்து…

முட்டுக்கட்டையை மீறி லாபம்

பிஎஸ்என்எல் நிறுவனம் மொபைல் சேவையைக் கொடுக்க ஆரம்பிக்கும் வரை தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல அதிகப்படியான கட்டணத்தில் சேவை வழங்கின. 2002ஆம் ஆண்டு பிஎஸ்என்எல்  நிறுவனம் சேவை கொடுக்க ஆரம்பித்த பின்னர் தான் மொபைல் சேவையை சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த முடிந்தது. ஆனால் இந்த பொதுத்துறை நிறுவனத்தை சீரழிக்க வேண்டும் என மத்திய ஆட்சியாளர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இதன் விரிவாக்கத்திற்கு தேவையான கருவிகளை வாங்குவதற்கு அரசாங்கம் பல முட்டுக் கட்டைகள் காரணமாக நஷ்டத்தை சந்தித்தது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும், அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து பல கட்ட போராட்டங்களையும், முன் முயற்சிகளையும் மேற்கொண்டதன் காரணமாக நஷ்டத்தில் இருந்த நிறுவனம், செயல்பாட்டு லாபத்தை அடைய துவங்கியது.

சர்வத்தையும் நாசப்படுத்த வந்த ஜியோ

இந்த சமயத்தில் தான், பாரத பிரதமர் மோடியின் புகைப்படத்தை விளம்பரத்தில் பயன்படுத்தி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது மொபைல் சேவையை துவங்கியதோடு, மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை சீரழிக்கும் வகையில் தனது கட்டணத்தை இலவசம் என்றும், மிக குறைவாகவும் கொடுத்தது. இதன் காரணமாகஅனைத்து நிறுவனங்களும் தங்களின் வருவாயை இழந்தன.  ஏர்செல், டெலினார்உள்ளிட்ட நிறுவனங்கள் இழுத்து மூடிவிட்டன. தற்போது சந்தையில் இருக்கும் ஏர்டெல் மற்றும் ஐடியா மற்றும் வோடோ போன் நிறுவனங்கள் கடுமையான நிதிச்சுமையை சந்தித்து வருகின்றன. ஆனால் ஜியோவின் இலக்கு, பிஎஸ் என்எல் நிறுவனத்தை நிர்மூலமாக்குவதுதான். இந்திய அரசுக்கு முழுமையாக சொந்த மான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு, எந்த ஒரு நிதியுதவியையும் செய்யாமல் இருப்ப தோடு, அதன் வளர்ச்சியையும் தடை செய்ய மத்திய அரசாங்கம் கடுமையான முயற்சி களை மேற்கொள்கிறது.இன்றைக்கு நாட்டில் உள்ள இதர மூன்று நிறுவனங்களும், 4ஜி சேவையை கொடுக்க ஆரம்பித்து இரண்டாண்டுகள் ஆகியுள்ளது. ஆனால் பிஎஸ்என்எல்  நிறுவனத்திற்கு மட்டும் அதற்கான அலைக்கற்றையை வழங்க அரசு மறுத்து வருகிறது.  2018,பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் 4ஜி அலைக் கற்றை வழங்கப்படும் என மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் மனோஜ்சின்கா, பிஎஸ்என்எல் கூட்டமைப்பிடம் உறுதி கூறினார்.  ஆனால் இன்று வரை வழங்க வில்லை. இதன் காரணமாக சந்தாதாரர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கவில்லை.

ஊழியர்கள் பெயரிலும் கொள்ளை

பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்குவதற்கான பங்களிப்பை அரசாங்கம் பெற்று வருகிறது.  அதனை ஊழியர்கள் வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிட வேண்டும் என அரசு விதிகள் உள்ள போதும், அரசாங்கம்  பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து அதிகமானபணத்தை பெற்று வருகிறது.  இதன் காரணமாக வருடத்திற்கு 500 கோடி ரூபாய்களுக்கு மேல்  பணத்தை அரசாங்கம் அதிகமாக பெற்றுக் கொள்கிறது.  அதனை சரி செய்து திருப்பித் தரவேண்டும் என மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கொடுத்த வாக்குறுதி இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை.

ரூ.1லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்

பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாகி 18 வருடங்கள் கடந்து போன பின்பும், அதன் சொத்துக்களை அந்நிறுவனத்தின் பெயரில் அரசாங்கம் மாற்றித் தரவில்லை.  அவற்றிற்கான வரி, பராமரிப்பு உள்ளிட்டவைகளை பிஎஸ்என்எல் தான் இன்று வரை செய்து வருகிறது.  சட்டப்பூர்வமாக மாற்றித்தருவதை தொலைத் தொடர்பு துறை மறுத்து வருகிறது. நிறுவனத்திற்கு இன்று வருவாய்குறைந்து வரும் வேளையில் நாடு முழுவதும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக நிலங்கள் அதிகப்படியாக உள்ளது. அவற்றின் மதிப்புஒரு லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல்.  அந்த நிலங்களை வாடகைக்குவிடுவதன் மூலமோ, அல்லது குத்தகைக்கு விடுவதன் மூலமோ, ஆண்டிற்கு 7,000 முதல் 10,000 கோடி ரூபாய்வரை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வருமானம் கிடைக்கும்.  தொலைத் தொடர்புத் துறைக்கு ஒரு முன்மொழிவை அனுப்பி பல மாதங்களான பின்பும், அதற்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

4 மாதமாக சம்பளம் வழங்கவில்லை, ஏன்?

ஜியோ நிறுவனம் உருவானதன் காரணமாக இதர நிறுவனங்களைப் போலவே பிஎஸ்என்எல் நிறுவனமும் வருவாய் இழப்பை சந்திப்பதால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது.   இந்த நெருக்கடி காரணமாக இந்த நிறுவனத்தில்மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தஊழியர்களுக்கு நான்கு மாத காலமாக ஊதியம் வழங்கவில்லை.  நிரந்தர ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்துக் கட்ட வேண்டிய பிஎப், இன்சூரன்ஸ், வங்கிக் கடன் தவணை உள்ளிட்ட எதையும் செலுத்தாமல் உள்ளது.  இந்த நெருக்கடிகளிலிருந்து மீள வேண்டுமென்றால், வங்கிகளிடம் இருந்து கடன் பெற வேண்டும்.  ஆனால் அதற்கு தேவையான ஒப்புகைக் கடிதத்தைக்கூட அரசு பிஎஸ்என்எல்லுக்கு தர மறுத்து வருகிறது.  இந்த நிதிப் பற்றாக்குறை காரணமாக வளர்ச்சிப் பணிகளும், பராமரிப்பு பணிகளும் தேக்கமடைந்து வருகின்றன.

தனியார் கொள்ளையடிக்கலாம்; பொதுத்துறைக்கு கடன் கூட கிடையாதா?

இந்திய நாட்டின் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து தனியார் நிறுவனமான ஏர்டெல் 1,13,000 கோடி ரூபாய்களுக்கு மேல் கடன் பெற்றுள்ளது.  ஐடியா-வொடோபோன் நிறுவனம் 1,20,000 கோடி ரூபாய்களுக்கு மேல் கடன் பெற்றுள்ளது.  ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் தான் கடன் இருக்கும்.  எனினும் இந்தப் பொதுத்துறை நிறுவனத்தின் நிதி நெருக்கடியை தற்காலிகமாக சமாளிக்க தேவையான கடன் உதவியைக்கூட பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெறுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள் ளது. இப்படியெல்லாம் ஆட்சியாளர்கள்,  நிறுவனத்தை நிதி நெருக்கடிக்குள் தள்ளி விடுகின்றனர்.  ஆனால் இங்கு பணியாற்றும் ஊழியர்களும் அதிகாரிகளும் ஒற்றுமைஎன்கின்ற ஒரே குடைக்குள் நின்று பிஎஸ்என்எல்ஐ பலப்படுத்தும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அப்படி கடுமையாக உழைத்து வருகின்ற ஊழியர்கள் மற்றும்அதிகாரிகளின் முன் முயற்சிகளை முடக்கக் கூடிய வகையில் அவர்களுக்கு 01.01.2017 முதல் மாற்றியமைக்க வேண்டிய ஊதிய மாற்றத்தை அமல்படுத்தாமல் கால தாமதப்படுகின்றனர்.  அதேபோலஇந்த நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தையும் மாற்றி தர மறுக்கின்றனர்.

ஊழியர்கள் – அதிகாரிகள் கொந்தளிப்பு

இந்திய நாட்டு மக்களுக்கு சிறப்பான சேவை கொடுப்பதற்காக வும், பிஎஸ்என்எல் எனும் இந்த பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்கவும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின்கூட்டு நடவடிக்கைக் குழு 18.02.2019 முதல் மூன்று நாட்கள் நாடுமுழுவதும் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.பிஎஸ்என்எல் ஊழியர்கள் நடத்தும் இந்த போராட்டம் குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்யும் வகையில் 15 ஆம்தேதிவரை விளக்க கூட்டங்களும், தெருமுனை பிரச்சாரங்களும் நடைபெற உள்ளது. பிப்.15 ஆம்தேதி நாடு முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்களில் குடும்பத்துடன் பேரணி நடைபெறும். இந்த தேசபக்த போராட்டத்திற்கு, பொதுமக்களும், சந்தாதாரர்களும், பொதுத்துறை ஆர்வலர்களும் ஆதரவை தரவேண்டும்.பேட்டியின்போது அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சிவசண்முகம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.ராஜேந்திரன், பிரசன்னா, ஓய்வூதியர் சங்கத்தின் வெங்கட்ராஜூ மற்றும் ராபர்ட் உள்ளிட்ட பிஎஸ்என்எல் தொழிற்சங்க கூட்டமைப்பினர் பங்கேற்றனர்.

இந்திய நாட்டு மக்களுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனம் பொதுமக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. நாட்டின் எந்த பகுதியில் புயல், சூறாவளி, பெருவெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு என எந்த ஒரு இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும், தனியார் நிறுவனங்கள், தங்களின் சேவையை நிறுத்தி வைத்துக் கொள்கின்றன. அத்தகைய நிலையில் மக்களின் துயரில் பங்கேற்று சேவையளிப்பது இந்திய நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே என்பதை கண்கூடாகப் பார்த்து வருகிறோ