டெல்லி: தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65 சதவிகிதம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டி அதிகரிப்பு இந்த நிதியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய நிர்வாக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இத்திட்டத்தின் வட்டி விகிதத்தின் அளவு 8.55 சதவிகிதமாக இருக்கும் நிலையில் மத்திய அரசு இதன் அளவை 0.10 சதவீதம் உயர்த்தி 8.65 சதவிகிமாக அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இபிஎஃப்ஓ அமைப்பின் கூட்டத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் இன்று வெளியிட்டார்.   மாதச் சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களும் தங்களின் 60 வயதுக்கு பின்பு, முதுமைக் காலத்தை எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொள்வதற்காகவே இபிஎஃப் என்னும் வருங்கால வைப்பு நிதியில் பணத்தை சேமித்து வைக்க விரும்புகின்றனர். இபிஎஃப் திட்டத்தில் சேமித்து வைத்தால் வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்ற உறுதியில் பெரும்பாலானவர்கள் தங்களின் பணத்தை சேமித்து வைக்கின்றனர். சம்பளத்தில் பிடித்தம் ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 6 சதவிகிதமும் (Employee’s Contribution) நிறுவனத்தின் பங்காக (Employer’s Contribution)6சதவிகிதமும் பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதியில் சேமித்து வைக்கப்படுகிறது. இதில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட 6சதவிகிதமுடன் நிறுவனத்தின் பங்காக செலுத்தப்பட்ட 6சதவிகிதத்தில் இருந்து 3.67 சதவிகிதமும் சேர்ந்து 15.67 சதவிகிதம் இபிஎஃப் என்னும் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் சேமித்து வைக்கப்படும். 58 வயதை கடந்த பின் நிறுவனத்தின் பங்களிப்பாக அளிக்கப்பட்ட 12 சதவிகிதத்தில் மீதம் உள்ள 8.33 சதவிகிதம் ஊழியர்களின் வருங்கால ஓய்வூதியத் திட்டத்தில் சேமித்து வைக்கப்படும். இந்தத் தொகையை 58 வயதைக் கடந்த பின்பே ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ஊழியர்களுக்கு கிடைக்கும்.   வட்டி விகிதம் 12% ஊழியர்களிடம் இருந்தும் நிறுவன பங்களிப்பாக அளிக்கப்பட்ட 3.67 சதவிகிதமும் சேர்ந்த 15.67 சதவிகித இபிஎஃப் தொகைக்கே ஆண்டுதோறும் வட்டி கணக்கிடப்படுகிறது. இபிஎஃப் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 1952-53ம் நிதியாண்டில் (மார்ச் முதல் பிப்ரவரி வரை) இபிஎஃப் திட்டத்திற்கு வட்டி விகிதமானது 3 சதவிகிமாக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக 1989-90ம் நிதியாண்டிலிருந்து 1999-2000 ஆண்டு வரையிலும் 12 சதவிகிதம் வட்டி அளிக்கப்பட்டு வந்தது. குறைக்கப்பட்ட வட்டி இபிஎஃப் திட்டத்தில் சேமிக்கப்படும் வைப்புத் தொகைக்கு அளிக்கப்படும் வட்டிவிகிமானது பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2013-14, 2014-15 ஆம் நிதியாண்டுகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.75 சதவிகித வட்டி வழங்கப்பட்டது. 2015-16ஆம் நிதியாண்டில் 8.8 சதவிகிதமாக உயர்ந்தது. கடந்த 2016-17 நிதியாண்டில் 8.65 சதவிகிதமாகவும், 2017-18ஆம் நிதியாண்டில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த பட்ச அளவாக இபிஎஃப்ஓவிற்கு 8.55 சதவிகிதம் நிர்ணயிக்கப்பட்டது.     ஓய்விற்குப் பின்னர் பணம் இபிஎஃப்ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 1952ம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தொடங்கப்பட்டது, இபிஎப்ஓ ஆணையத்தில் இதுவரையிலும் சுமார் 19 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் ஐந்து கோடி சந்தாதாரர்கள் தற்போது இபிஎப்ஓ வில் உறுப்பினர்களாக உள்ளனர். இபிஎஃப்ஓ ஆணையத்தில் இருந்து இதுவரையிலும் சுமார் பத்து கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் ஏற்கனவே வேலையில் இருந்து ஓய்வு பெற்று தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துச் சென்றுவிட்டனர். பங்கு பரிவர்த்தனை கடந்த 2015ம் ஆண்டிலிருந்து இபிஎப்ஓ அமைப்பு , தனது முதலீட்டில் ஒரு பகுதியை ஈடிஎப்பில் முதலீடு செய்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட ரூ.44,000 கோடி முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இபிஎப் அமைப்பு கடந்த ஆண்டு பங்கு பரிவர்த்தனை நிதியின் ஒரு பகுதியை விற்றது. இதன்மூலம் ரூ.1,054 கோடி கிடைத்தது. கடந்த நிதியாண்டில் வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில் 2018-19 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதங்களில் மாற்றமிருக்காது எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோடிக்கணக்கான சந்தாரர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.