புதுதில்லி, பிப். 27 -இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ (கூநடநஉடிஅ சுநபரடயவடிசல ஹரவாடிசவைல டிக ஐனேயை), ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும், ரிலையன்சின் ‘ஜியோ’ நிறுவனத்திற்கு மட்டும் சலுகைகளை அள்ளி வீசுவதாகவும் வோடாபோன் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாபோன் , நீண்டகாலமாக இந்திய தொலைத்தொடர்புத் துறையில் இருந்து வருகிறது. ஆனால், 2016-இல் ரிலையன்ஸ் ஜியோ வந்தபின், வோடாபோன் வர்த்தக ரீதியாக பாதிப்பைச் சந்தித்தது. இழப்பைச் சமாளிக்க ஐடியா நிறுவனத்துடனும் இணைந்து பார்த்தது. ஆயினும் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இதற்கு டிராய் அமைப்பும், ஜியோ நிறுவனமுமே காரணம் என்றும் வோடாபோன் தற்போது புலம்பித் தவிக்கிறது.“இந்தியாவில் வோடபோன் நிறுவனம் கடும் நஷ்டத்தைச் சந்தித்ததால், நாங்கள் ஐடியா நிறுவனத்துடன் இணைந்தோம்.

ஆனால், எங்களுக்கு இன்னும் நஷ்டம் தொடர்கிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’, நாங்கள் கேட்கும் எந்த சலுகையையும் அளிக்காமல் வஞ்சிக்கிறது. அதேநேரம் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு மட்டும் சலுகைகளை அள்ளித் தருகிறது. டிராய் அளிக்கும் சலுகைகளால், ஜியோ நிறுவனம் மட்டுமே பலனடைந்து வருகிறது” என்று வோடபோன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ரீட் குற்றம் சாட்டியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியே, ‘ஜியோ’ விளம்பரத் தூதுவரான கொடுமை 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தங்களுக்கு எந்த அளவிற்கு ஆட்சியாளர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் இதைச் செய்தது. தனியார் நிறுவனமான ஜியோவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே, நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-லின் 4ஜி சேவைக்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருக்கிறது. இதை எதிர்த்து, பிஎஸ்என்எல் ஊழியர்கள் கடந்த வாரம் மாபெரும் போராட்டங்களையும் நடத்தினர். தற்போது, தனியார் நிறுவனமான ‘வோடாபோன்’ நிறுவனமும் ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது.இதனிடையே, வோடாபோன் குற்றச்சாட்டுக்கு டிராய் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் ஜியோவுக்கு சலுகை அளிப்பது உண்மைதான் என்று மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது, நாட்டில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகள் அளிக்கத் தீர்மானித்துள்ளோம்; அந்த அடிப்படையிலேயே 3ஜி, 4ஜி சேவைகள் அளிக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகளை நிறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.