மார்ச் 8 ‘மகளிர் தினமா’ அல்லது ‘உழைக்கும் பெண்கள் தினமா’, இதை எவ்வாறு குறிப்பிடுவது என்ற சர்ச்சைஇருந்து வருகிறது. மகளிர் என்றாலும் பெண்கள் என்றாலும் ஒன்றுதான். எனவே இதில் சிக்கல் இல்லை. ஆனால் ‘உழைக்கும்’ என்ற சொல்லைச் சேர்க்க வேண்டுமா இல்லையா என்பதுதான் கேள்வி.

வரலாறு என்ன சொல்கிறது?

H 1910 ம் ஆண்டில் நடந்த ‘உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாட்டில்தான் ‘‘உலக அளவில் மகளிர் தினம் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானம் முதன் முதலாக நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் ‘மகளிர் தினம்’ (Women’s Day) என்றுதான் குறிப்பிடப்பட்டது.

H 1920 ம் ஆண்டில் அலெக்சாண்ட்ரா கொலந்தாய் எழுதிய புகழ் பெற்ற கட்டுரையில் ‘‘மகளிர் தினம் அல்லது உழைக்கும் மகளிர் தினம்” (Women’s Day or Working Women’s Day) என்ற சொற்றொடர் இடம் பெற்றது.

H 1920 ம் ஆண்டில் லெனின் எழுதிய கட்டுரையில் ‘‘உலக மகளிர் தினம்” (International Women’s Day) என்று குறிப்பிடப்பட்டது.

H 1921 ம் ஆண்டில் லெனின் எழுதிய கட்டுரையில் ‘‘உலக உழைக்கும் மகளிர் தினம்” (International Working Women’s Day) என்று குறிப்பிடப்பட்டது.

H 1921 ம் ஆண்டில் கூடிய ‘கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலத்தின் மாநாட்டு’த் தீர்மானம்தான் ‘மார்ச் 8’ என்ற தேதியைத் தேர்வு செய்து நிரந்தரமாக்கியது. இது பற்றி இந்த அகிலத்தின் பத்திரிகையில் 1922 ம் ஆண்டில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தியின் தலைப்பில் ‘‘உலகக் கம்யூனிஸ்ட் மகளிர் தினம்” (International Communist Women’s Day) என்றும், அந்தச் செய்திக்குள் ‘‘உலக மகளிர் தினம்” (International Women’s Day) என்றும் குறிப்பிடப்பட்டது.

H 1925 ம் ஆண்டில் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் ‘‘உலக மகளிர் தினம்” (International Women’s Day) என்று குறிப்பிடப்பட்டது.

H 1926 ம் ஆண்டில் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் ‘‘உலகக் கம்யூனிஸ்ட் மகளிர் தினம்” (International Communist Women’s Day) என்று குறிப்பிடப்பட்டது.

H 1949 ம் ஆண்டில் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் மீண்டும் ‘‘உலக மகளிர் தினம்” (International Women’s Day) என்று குறிப்பிடப்பட்டது.

H 1968 ம் ஆண்டு முதல் பெண்ணிய அமைப்புகள் ‘‘உலக மகளிர் தினம்” (International Women’s Day) என்றே குறிப்பிட்டு வருகின்றன.

H 1977 ம் ஆண்டில் ஐ.நா.சபையின் பொதுச்சபை நிறைவேற்றிய தீர்மானத்தில் ‘‘பெண்களின் உரிமைகள் மற்றும் உலக சமாதானம் ஆகியவற்றுக்கான ஐ.நா.சபை தினம்” (United Nation’s Day for Women’s Rights and international peace) என்று குறிப்பிடப்பட்டது.

இவற்றின் போக்கில், எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமலே, ‘‘உலக மகளிர் தினம்” (International Women’s Day) என்ற பெயர் உலக அளவில் நிலைத்துவிட்டது. மேலும் முற்போக்கான மகளிர் அமைப்புகள் அனைத்துமே பெண் தொழிலாளர்களுக்கு, அதாவது உழைக்கும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த போதும், தொழிலாளி அல்லாத பெண்களின் பிரச்சனைகளுக்காகவும் போராடி வருகின்றன.

எனவே “உலக மகளிர் தினம்” என்றே நாம் குறிப்பிடலாம்.

BSNL Employees Union Nagercoil