தனியார் மயமாக்கலின் பகுதியாக திருவனந்தபுரம் விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப் பட்டதற்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம், மத்திய அரசுக்கும் அதானி குழுமத்திற்கும் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே மாநிலத்திற்கு அளித்த உத்தரவாதத்தை மீறி தனியார்மயமாக்கப்பட்டுள்ளதாகவும், டெண்டர் நடவடிக்கைகள் உள்ளிட்டவை கெட்ட நோக்கத்துடன் உள்ளதாகவும் சுட்டிக்காட்டி போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் கே.ஆர்.ஜோதிலால் இந்த வழக்கை தொடுத்துள்ளார். இந்தமனு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெண்டரில் மாநிலஅரசு சார்பில் பங்கேற்ற கேஎஸ்ஐடிசி தாக்கல் செய்துள்ள மனுவும் வியாழனன்று விசாரணைக்கு வந்தது.1932இல் திருவிதாங்கூர் சமஸ்தானம் வழங்கிய 258.06 ஏக்கர் நிலத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. இந்த நிலம் இப்போதும் அரசின் உடமையாகவே உள்ளதென மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 2003இல் 27 ஏக்கர் நிலம் பணம் கொடுத்து கையகப்படுத்தி இலவசமாக வழங்கப்பட்டது. மொத்தமுள்ள நிலத்தில் 0.5756 எக்டேர் மட்டுமே விமான நிலைய கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு (ஏஏஐ)சொந்தமானது. விமான நிலையத்தின் வளர்ச்சிக்கான நோக்கத்துடன் தனியாக நிறுவனம் (எஸ்பிவி) துவங்கலாம் எனவும், விமான நிலைய நிலத்தின் விலை அரசின் பங்காக கணக்கில்கொள்ளவும் மத்திய அரசு உறுதியளித்திருந்தது. இதை புறக்கணித்தே தனியார்மயத்துக்கான நகர்வு.தன்னிச்சையான இந்த நடவடிக்கை தெரியவந்ததும் முதல்வர்மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.அரசின் நிலம் விமான நிலையத்துக் காக வழங்கப்பட்டுள்ளது. கண்ணூர், கொச்சி விமான நிலையங்களின் முன்மாதிரியாக கொண்டுவளர்ச்சிப்பணிகளும், மேலாண்மையும் திருவனந்தபுரத்தில் சாத்தியமாகும். இந்தநிலையில் தனியார் மயத்திலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தை விலக்க வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார். ஆனால், இதை பரிசீலனை செய்யாமலே விமான நிலையம் தனியார்மயத்தை மத்திய அரசு தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது.

விமான நிலையம் நிர்வகிப்பதில் மாநில அரசுக்கு முன் அனுபவம் உள்ளது என முதல்வர் மத்திய அரசுக்குதெரிவித்திருந்தார். முன் அனுபவம்இல்லாதவர்களை இதில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனாலும், அரசுக்கு முன்னுரிமை வழங்கவில்லை. மட்டுமல்ல, முன் அனுபவம் வேண்டும் என்கிறமுந்தைய நிபந்தனை வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளது. தில்லி, மும்பை விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும்போது முன்அனுபவம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அதோடு முன் அனுபவம்உள்ள ஒரு நிறுவனம் விலக்கப் பட்டது. அதானி குழுமம் வாக்குறுதி அளித்த தொகையை வழங்கவும் மாநில அரசு முன்வந்தது. ஆனாலும் அதானி குழுமத்தை தேர்வு செய்த ஏஏஐ நடவடிக்கை பொதுநலனுக்கு எதிரானதும் விதிமீறலும் ஆகும். இது மாநிலத்திற்கு நிலத்தின் மீதானஉரிமையை பாதிக்கும் செயலுமாகும்.கேரள மக்களின் நலனே அரசின் நோக்கம். எனவே, விமான நிலைய நிர்வாகத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பதை மத்திய அரசுஉறுதி செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதே அரசியல் சாசன விதிகள். மாநில அரசுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதியை மீறியுள்ள ஒப்பந்தம் சட்டப்படியானதல்ல என்பதால் ரத்து செய்ய வேண்டும் என வழக்கின் மனுவில் கோரப்பட்டுள்ளது. கேஎஸ்ஐடிசி மூலம் அரசு அளித்துள்ள டெண்டரை ஏற்க ஐஐஏ கடமைப் பட்டுள்ளதாக அறிவிக்க வேண்டும். டெண்டர் நடவடிக்கைகள் உட்பட ஆவணங்களை வரவழைத்து அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் கூறப்பட்டுள்ளன.இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், அதானி குழுமத்திற்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.