“பெண் என்பவள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாள்’’ என்றார் பிரெஞ்சு பெண்ணியவாதி சைமன் டி. பௌவாயர். “பெண் இல்லாத வானிலோ அல்லது பூமியிலோ சொர்க்கம் இல்லை: பெண் இல்லாமல் சூரியனில்லை; சந்திரனில்லை, விவசாயமில்லை, நெருப்புமில்லை’’ என்பது அரேபிய பழமொழி.“பெண்களே வரலாறு… அவர்கள் அவர்களாகவே வரலாறு படைக்கின்றனர்’’ என மேரி ரிட்டர் பியோர்ட் கூறுகிறார். 1789 ஜூன் 14 ம் நாள் சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோசனைக்குழுவில்) என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சு புரட்சியின் போது பாரீசில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். ஆணுக்கு நிகராக பெண்கள் சமுதாயஉரிமைகளைப் பெற வேண்டும்; வேலைக்கேற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெண் சமூகத்தின் சரிபாதியானவள். எண்ணிக்கையில் ஆற்றலில் உழைப்பில் பங்களிப்பில் என்று அனைத்திலும் ஆணுக்கு நிகராக இருப்பவள். பெண்களின் உரிமைகள், வாய்ப்புகள், சமத்துவம் உறுதி செய்யப்படவும் இந்திய அரசியல் சட்டம், சர்வதேச உடன்படிக்கைகள், பிரகடனங்கள், இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட பெண்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் பாதுகாப்புச் சட்டங்கள் என எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன.

புரட்சியின் முன்னோட்டம் சர்வதேச பெண்கள் தினம்

1908 நியூயார்க்கில் பணிச்சூழலுக்கு எதிராக பெண் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்திய நாளை முன்னிறுத்தி அமெரிக்க சோசலிசக் கட்சி முதன்முதலில் பெண்கள் தினத்தை கொண்டாடியது.1910 ல் பெண்கள் உரிமைக்காகவும் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என வலியுறுத்தியும் டென்மார்க்கில் கோபன்ஹேகன் நகரில் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது; 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக பின்லாந்து நாடாளுமன்றத்திற்கு புதிதாகதேர்ந்தெடுக்கப்பட்ட 3 பெண்களும் இதில் அடக்கம்.இம்மாநாட்டில் தான் சர்வதேச பெண்கள் தினம்கொண்டாட வேண்டும் என தேதி தேர்வு செய்யப்படாமல் முடிவு செய்யப்பட்டது.உலக மகளிர் தினம் 1911 மார்ச் 19 அன்று முதன்முதலாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. அப்போது நடைபெற்ற பேரணியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர்; சமீபத்தில் கேரளாவில் ஒன்றுபட்ட கொள்கையுடன் 55 லட்சம் பெண்களை திரட்டி வனிதா மதில் அமைத்தார்களே அதே போல். அக்கூட்டத்தில் வாக்குரிமை, பணிபுரிவதற்கான உரிமை,வேலையில் பாகுபாடு காட்டக்கூடாது என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.1914ல் முதலாவது உலகப்போர் நடைபெற்ற போது அமைதி நடவடிக்கையாக ரஷ்யப் பெண்கள் பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் தினத்தை கொண்டாடினர். போருக்கு எதிராகவும் ரஷ்ய பெண்களுக்கு ஆதரவாகவும் ஐரோப்பிய பெண்கள் மார்ச் 8ல் பேரணி நடத்தினர்.1917ல் நடைபெற்ற ரஷ்யப்புரட்சிக்கு, பெண்கள் பெருமளவில் தொடர்ந்து போராட்டக்களத்தில் அணிதிரண்டதும் மிக முக்கிய உந்து சக்தியாகத் திகழ்ந்தது.பெண்கள் போராட்டக் களத்தில் ஈடுபட்டால் தான்ஆளும் வர்க்கங்களின் அட்டகாசங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதற்கு ரஷ்யப் பெண்களின் புரட்சிகரமான போராட்டங்கள் நம் கண் முன்னால் உள்ள சான்று.1975ல் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்கப்பட்டது.இப்படி வரலாறு நெடுகிலும் போராளிகளாய் இருந்தபோதும், அடிப்படையில் ஆணாதிக்க சிந்தனை கொண்ட நிலப்பிரபுத்துவ- முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பைத் தகர்க்காததன் விளைவாக இன்றும் பெண்ணின் நிலை மோசமாகவே உள்ளது.

V உலகம் முழுவதும் 63 நாடுகள் மட்டுமே மகப்பேறு விடுமுறை அளித்துள்ளன. 28 சதவீதம் பெண்கள் மட்டுமே சம்பளத்தோடு கூடிய விடுமுறை அனுபவிக்கின்றனர்.

V ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளை ஆண்க

ளை காட்டிலும் பெண்களே இரண்டரை மடங்கு அதிகமாக செய்கின்றனர்.

V சர்வதேச அளவில் 66 சதவீதம் பணியை பெண்கள்

மேற்கொள்கின்றனர். ஆனால் உலக வருமானத்தில் 10 சதவீதம் மட்டுமே பெறும் நிலையில் உள்ளனர்.

V பணிபுரியும் வயது விகிதம் கூட ஆண்களுக்கு 76 சதவீதமாகவும் பெண்களுக்கு 49.6 சதவீதமாகவும் இருக்கிறது.

V சர்வதேச அளவில் 13.9 சதவீதம் இளம் பெண்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

V தொழிற்சாலைகளில் 13.5 சதவீதம், விவசாயத்தில் 25 சதவீதம், நாடாளுமன்ற பங்களிப்பில் 23 சதவீதம், தலைமை அதிகாரிகளாக 4 சதவீதம் மட்டுமே பெண்கள்

பணிபுரிகின்றனர்.

V முறைசாரா வேலை வாய்ப்பின் கீழ் அதாவது வீட்டுவேலை செய்பவர்கள், தெருவோர வியாபாரிகள், பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள், கிடைக்கும் வேலையைச் செய்பவர்கள், பூ கட்டும் பெண்கள் என

தெற்காசியாவில் மட்டும் 95 சதவீதம் பெண்கள் அன்றாடம் கடும் உழைப்பைச் செலுத்தி சிறிதளவு வருமானம் ஈட்டுகின்றனர்.

V பாலின பாகுபாட்டுக்கு எதிராக 67 நாடுகளில் மட்டுமே சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 18 நாடுகளில் மனைவி பணிபுரிவதை கணவர் சட்டப்பூர்வ

மாக எதிர்க்க முடியும். பணி ஓய்வுக்கு பின்னால் கூட 35.5 சதவீத பெண்களுக்கு மட்டும் தான் ஓய்வூதியம் கிடைக்கிறது.

மோடியின் பட்டியலிலேயே நாம் இல்லை

தற்போது மக்களவையில் 542 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 64 பேர் (11.8 சதவீதம்), மாநிலங்களவையில் 245 ல் 27 பேர் ( 11சதவீதம்), 4118 சட்டசபை உறுப்பினர்களில் 9 சதவீதம் மட்டுமே பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 33 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்காக தொடர்ந்து போராடும் நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.நமது நாட்டில் பெண்கள் ஜனாதிபதியாக, பிரதமராக, சபாநாயகராக, முதலமைச்சர்களாக, விளையாட்டுவீரர்களாக, விண்வெளி வீராங்கனையாக இருக்கிறார்கள் என பெருமை கொள்ளும் அதே நேரத்தில் பெண்களின் பாதுகாப்பு சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை.சில நாட்களுக்கு முன்னதாக 67 வயது முதிய பெண்மணியை 17 வயது சிறுவர்கள் 3 பேர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது எத்தனை கொடுமை?ஆகவே தான் மகத்தான பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்த சர்வதேச பெண்கள் தினத்தில்- அனைத்து இடங்களிலும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; பெண்களுக்கு எதிரான குற்றங்களில் புகாரைப் பெறும் காவல் அதிகாரி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து துறை சார்ந்தவர்களும், துரிதமாக புகாரை கையாளத் தவறும் பட்சத்தில் துறைவாரியான நடவடிக்கை மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.கடந்த சில வருடங்களில் தமிழகத்தில் எத்தனையோ ஆணவக்கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு, காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியை கழுத்தறுத்து கொலைஎன ஏராளமான சம்பவங்கள் நம் காதுகளில் அனலைக்கொட்டுகின்றன. இப்படி பரபரப்பாக பேசப்படும் செய்திகள்ஓரிரு நாட்களில் கண்டு கொள்ளப்படாமல் போகத்தான் செய்கின்றன. சமூகத்திற்கு இவையெல்லாம் வெறும் சம்பவங்கள்; சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டிய அரசுகளுக்கும் காவல்துறையினருக்கும் இவை வெறும் சம்பவங்கள் தானா?பெண்ணின் வாக்குகளை அதிகமாகப் பெற்று ஆட்சிக்கு வந்த தமிழக அதிமுக அரசுக்கு, இவையெல்லாம் பெண்ணினத்தின் மீதான கொடிய குற்றங்களாகப் படவில்லை. இப்படி ஒரு பிரச்சனையே அரசின்கவனத்தில் இல்லை. மறுபுறம் மத்திய மோடி அரசோ பெண்களையும், குழந்தைகளையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.2019 மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தின் ஓர் அரசியல்பூர்வமான சூளுரை இருக்குமென்றால், அது, பெண்விரோதிகளான இவர்களை அதிகாரத்தைப் பறித்து விரட்டியடிப்பதுதான்!

கட்டுரையாளர் : திண்டுக்கல் மாவட்டச் செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்