நடப்பு 2019-20ஆம் நிதியாண்டின் முதல் மாதத்திலேயே நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் 7.6 சதவிகிதமாக அதிகரித்து விட்டதாக மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. 

கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் இறுதிமாதமான மார்ச் மாதத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 6.71 சதவிகிதமாக இருந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் இது நிச்சயமாக குறைந்திருக்கும் என்று அனைவருமே எதிர்பார்த்திருந்தனர். நடப்பு நிதியாண்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடியும் ஏகமாக ஜம்பம் அடித்திருந்தார்.ஆனால், நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் மாதத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரித்து 7.6 சதவிகிதம் ஆகியிருப்பது, பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளதாக பாஜக தலைவர்களும், பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரமாக பிரச்சாரம் செய்துவரும் நிலையில், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக வெளியாகியிருக்கும் மத்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் புள்ளிவிவரம் பாஜக-வினரை கலக்கத்தில் தள்ளியுள்ளது.ஏற்கெனவே, பணவீக்கம், விலைவாசி உயர்வு, நாளுக்கு நாள் ஏறும் பெட்ரோல் டீசல் விலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பாஜக ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில், வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்ற தகவல், அவர்களின்

பிரச்சாரத்திற்கு வலுவூட்டி விடுமோ? என்ற அச்சத்திலும் ஆழ்ந்துள்ளது.

தேசிய புள்ளியியல் ஆணையம், பல்வேறு காரணிகள் குறித்த தகவல்களை திரட்டும் பொருட்டு ஆண்டுதோறும் ‘தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம்- National Sample Survey Office’s (NSSO’s)’ என்னும் தகவல் சேகரிப்பு அறிக்கையை தயாரிப்பது வழக்கம்.ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பான தகவல்கள், தேர்தலில் தங்களுக்கு எதிராகத் திரும்பிவிடும் என்று கருதி, அந்த அறிக்கையை வெளியிட விடாமல் மோடி அரசு தொடர்ந்து காலம் கடத்தி வந்தது. எதிர்க்கட்சிகள் கேட்டபோது, புள்ளிவிவரப் பட்டியலில் குளறுபடி உள்ளது என்றும் அதைச் சரிபார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று காரணம் கூறியது. 

எனினும், தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம், 2017-18ஆம் ஆண்டுக்காக தயாரித்த அறிக்கையை, ‘பிசினஸ் ஸ்டாண்டர்டு’ நாளிதழ் வெளியிட்டு விட்டது.“2017-18-ம் ஆண்டில் இந்தியாவில், வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவிகிதம் என அதிகரித்து விட்டது. இந்த அளவிற்கான வேலையில்லா திண்டாட்டம், இதற்கு முன்பு, 1972-73ஆம் ஆண்டில்தான் நாட்டில் இருந்தது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.மேலும், “இளைஞர்களிடையே வேலையின்மை 13 முதல் 27 சதவிகிதம் உயர்ந்து தற்போது 6.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே, நகர்ப்புறங்களில் 7.8 சதவிகிதமாகவும், கிராமப்புறங்களில் 5.3 சதவிகிதமாகவும் இருந்துள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதன் தொடர்ச்சியாக 2019 மார்ச்சில் 6.71 சதவிகிதமாக அதிகரித்த வேலையில்லாத் திண்டாட்டம், 2019 ஏப்ரலில் 7.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. “கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து மார்ச் மாதம் வரையிலுள்ள காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 6.71 சதவிகிதமே அதிகபட்சமாக இருந்த வேளையில் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 7.6 சதவிகிதத்தை எட்டியுள்ளது” என்று மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.கடந்த 2011-12 ஆண்டில், வேலையின்மையின் விகிதம் 2.2 சதவிகிதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

BSNL Employees Union Nagercoil