தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வெளிவந்த 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 1687 அரசுப் பள்ளிகளும், இந்தாண்டு 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 2634 அரசுப் பள்ளிகளும், 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 1281 அரசுப் பள்ளிகளும் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு தேர்வுகளில் திருப்பூர், ஈரோடு, பெரம்பலூர், நாமக்கல், இராமநாதபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் சாதனை பெற அரசுப் பள்ளிகளின் மிகச்சிறந்த பங்களிப்பு முக்கிய காரணமாக இருந்துள்ளது.ஒன்பது ஆண்டுகள் தங்கள் பள்ளியில் படித்த மாணவர்களை வெளியேற்றிவிட்டு, தேர்ச்சியடையும் மாணவர்களை மட்டுமே தேர்வுக்கு அனுமதித்து 100 சதம் தேர்ச்சியை பெற்றதாக விளம்பரப்படுத்தும் தனியார் பள்ளிகளுக்கு மத்தியில், அரசு பள்ளிகள் தங்கள் பள்ளியில் படிக்கும் எந்தவொரு மாணவரையும் வெளியேற்றாமல் அனைத்து மாணவர்களையும் பொதுத்தேர்வை எழுத அனுமதிக்கக்கிறது. மேலும் கற்றல் திறன் குறைவான மாணவர்களுக்கு தனி கவனிப்பு, கூடுதல் சிறப்பு வகுப்புகள் மூலம் அவர்களைதேர்ச்சி பெறச் செய்கிறது. தன்னம்பிக்கை, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை, சகமனிதனை நேசிப்பது, பிரச்சனைகளை எதிர் கொள்ளும் திறன் போன்ற அம்சங்கள் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கூடுதலாக உள்ளது.தனியார் பள்ளியில் (தொழிற்சாலைகளில்) செய்யப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கை போல் அரசுப் பள்ளிகளில் கிடையாது. ஆசிரியர் பணியிடங்கள் உறுதிசெய்யப்படும், ஊதியம் தீர்மானிக்கப்படும்.

ஆசிரியர் கற்றல் கற்பித்தலில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். ஆனால் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் நிலை உத்தரவாதமற்றது. உற்பத்தியைப் பெருக்குவது போல் பாடங்களை கடுமையாக மாணவர்களிடம் திணிப்பதற்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும். நிச்சயமற்ற வேலையும்,நிலையற்ற ஊதியமும் இயல்பாகவே தனியார் பள்ளிகளின் கற்றல், கற்பித்தல் திறனை பின்தங்கியே இருக்கச் செய்யும் முக்கிய காரணியாகும்.அரசு பள்ளிகளிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் தலா 4 சீருடைகள், பஸ்பாஸ், சத்துணவு, மிதிவண்டி, கல்வி உதவிதொகைகள், மடிக்கணினி மற்றும் 16 வகையான கல்வி உபகரணங்கள் உள்ளிட்டு மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அரசினால் மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கல்வித் திட்டத்திலும் பல மாற்றங்கள் அரசுப் பள்ளிகளில் நடந்துள்ளது. பாடநூல்கள்மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலவழிக்கல்வி, ஆசிரியர் தேர்வு முறை, பயிற்சி என பல வகைகளில் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளைவிட சிறந்து விளங்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.என்.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களிலும் ஜே.என்.யு போன்ற பல்கலைக்கழகங்களிலும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் இன்றும் கூடுதல் எண்ணிக்கையில் படித்து வருகிறார்கள். பெண்கள், தலித், சிறுபான்மை மாணவர்கள், முதல் தலைமுறை மாணவர்கள் என பல மாணவர்களின் கல்வியை இன்றும் அரசு பள்ளிகளே உறுதி செய்து வருகிறது. மத்திய – மாநில அரசுகள் அரசு பள்ளிகளை பொதுக்கல்வியை பாதுகாக்க மேம்படுத்த சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். கோத்தாரி கல்விக்குழு, இராமமூர்த்தி கல்விக்குழு, யஷ்பால் கல்விக்குழு என எத்தனையோ பரிந்துரைகள்; கல்வியாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், மாணவர், ஆசிரியர் அமைப்புகளின் நியாயமானகோரிக்கைகள்; கல்வியுரிமை சட்டம், சமச்சீர்கல்வி, நீதிமன்ற தீர்ப்புகளின் வழிகாட்டுதல்களில் சொல்லபட்ட அம்சங்கள் என அனைத்தையும் பரிசீலித்து அமல்படுத்த முன் வரவேண்டும்.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். மாநில உரிமையைப் பறிக்கும் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யவேண்டும். இடைநிற்றல் பிரச்சனைகள் போன்ற பல இன்னலை ஏற்படுத்தும் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் மத்திய அரசின் மதியற்ற முடிவை கைவிட வேண்டும். அந்தந்த மாநிலத்தில் படித்த மாணவர்களுக்கும், தாய்மொழியில் பயின்ற மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பாடத்திட்டதில் இந்துத்துவா கருத்தை புகுத்துவது, ஒற்றை கலாச்சாரம், இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, குலக்கல்வி, காவி-கார்பரேட் திட்டங்களை கொண்ட புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். ஆசிரியர், மாணவர், கல்வியாளர்கள், சமூகஆர்வலர்களைக் கொண்டு கால சூழல் மாற்றத்திற்கேற்ப நவீன முற்போக்கான கல்விக் கொள்கையை கொண்டு வரவேண்டும். பாலியல் சார்ந்த கல்விகள், விளையாட்டு, கலை-பண்பாடு, தனித்திறன், நவீன தொழிற்நுட்பம் என அனைத்து வகையான கல்வியையும் மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். மாணவர்களையும், பொதுமக்களையும் ஈர்க்கும் வண்ணம் நவீன வசதியுடன் கூடிய  வகுப்பறைகள் கட்டமைக்கப்பட வேண்டும். இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறியுள்ளபடி ஆசிரியர் மாணவர் விகிதம் பின்பற்ற வேண்டும். மாணவர், பொதுமக்கள், சமூக ஆர்வலர் பங்களிப்போடு பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைக்க வேண்டும். தாய்மொழி வழிக் கல்வி, அருகாமைப் பள்ளிகள், பொதுப் பள்ளிகளை உறுதி செய்ய வேண்டும்.

தமிழக அரசு ஏற்கனவே மூடப்போவதாக சொன்ன 3000 பள்ளிகள் மீது கைவைக்கக்கூடாது; தற்போது 890 அரசு பள்ளிகளை மூட உத்தேசித்துள்ளதையும் கைவிட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ரூ.14 ஆயிரம் கோடி கல்வி உதவித்தொகையை உடனே வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திலுள்ள பள்ளிகளை இணைக்கும் நடவடிக்கைக்கு பதிலாக இருக்கும் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். துவக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாகவோ, உயர் நிலை, மேல்நிலை பள்ளியாகவோ தரம் உயர்த்த வேண்டும். இரண்டு பள்ளிகளை ஒருங்கிணைத்து ஒரு பள்ளியாக மாற்றுவதை கைவிட வேண்டும். கேரளாவில் தற்போது இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தனியார் பள்ளிகளைவிட்டு அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ளார்கள். காரணம் அங்குள்ள அரசாங்கம் பொதுமக்களோடு இணைந்து பல கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தது மட்டுமல்லாமல் தெருத்தெருவாக இறங்கி வீடுவீடாக பிரச்சாரம் செய்ததே காரணம். அதை ஏன் தமிழக அரசு செய்ய கூடாது? இந்தாண்டு கல்விக்காக கிட்டத்தட்ட ரூ.28 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்லும் தமிழக அரசு, செலவுக் கணக்குகள் குறித்து முறையான புள்ளி விவரத்தைவெளியிட வேண்டும். அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்க அனுமதிக்கும் மிக மோசமான முடிவைதிரும்பப் பெற வேண்டும். நிரப்பப்படாமல் உள்ள ஐம்பதாயிரத்திற்க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியரல்லா, அலுவலகஊழியர்கள், துப்புரவாளர், காவலாளி மற்றும் அரசுபள்ளி விடுதி காப்பாளர் என அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். விடுதிகளை மேம்படுத்த வேண்டும். சிறப்பு பள்ளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

சென்னையில் உள்ள அரசு பள்ளிகளிலேயே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்ற ஒரே பள்ளி எழும்பூர் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி. அப்பள்ளியை போல் எத்தனையோ பள்ளிகள் ஆசிரியர்களாலும் பொதுமக்களின் பங்களிப்பாலும் சாதனை படைத்து வருகிறது. அரசும், பொதுமக்களும், பெற்றோர்களும், மாணவர்களும் இணைந்தால் அனைத்து அரசு பள்ளியும் சாதனைப் பள்ளிகளாக மாற்ற முடியும். எனவே அரசு பள்ளியின் தேவையை முன்வைத்து (இன்று) மே25 முதல் மே 31 வரை அரசுப் பள்ளிகளை பாதுகாத்து பலப்படுத்திடக் கோரி தமிழகம் முழுவதும் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், கன்னியாகுமரியிலிருந்து திருச்சி நோக்கி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் 1500கி.மீ சைக்கிள் பிரச்சாரம் நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளை இஸ்ரோவின் முன்னாள் இயக்குநரும் சந்திரயான் விண்வெளித் திட்ட இயக்குனருமான விஞ்ஞானி மயில்சாமி அண்ணதுரை, சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி.ஷானு, பாலபிரஜாபதி அடிகளார், கல்வியாளர் வே.வசந்தி தேவி, இயக்குநர் பா.இரஞ்சித், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, விவசாயத் தொழிலாளர் சங்கமாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிஙகம், எழுத்தாளர் இமையம் உள்ளிட்டோர் இப்பிரச்சார பயணத்தை துவக்கி வைக்கிறார்கள்.

BSNL Employees Union Nagercoil