தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியர், கொடூரமான முறையில் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் சமத்துவபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் திருமேனி. இவரது மகன் சோலைராஜ் (வயது 26). சூரங்குடி பல்லாகுளத்தை சேர்ந்தவர் அழகர் மகள் பேச்சியம்மாள் என்ற ஜோதி (வயது 22). இருவரும் அங்குள்ள உப்பளத்தில் வேலை பார்த்து வந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாயினும், வெவ்வேறு உட்பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு பெண்ணின் குடும்பத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.பின்னர்  இருவரும்  கடந்த 3 மாதங்களுக்குமுன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். சோலை ராஜின் குடும்பத்தினர் இளம் தம்பதியினரை ஏற்றுக் கொண்ட நிலையில், அவர்களது வீட்டிற்குஅருகிலேயே வாடகைக்கு வீடு பார்த்து தனிக்குடித்தனம் வைத்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட ஜோதி கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.திருமணத்திற்கு பின்பு பெரியார் நகரில் சோலைராஜ் – ஜோதி தம்பதியர் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் புதன் இரவு கணவன்- மனைவி இருவரும் வீட்டுக்கு வெளியே முற்றத்தில் படுத்து தூங்கி உள்ளனர்.

வியாழனன்று காலை வெகுநேரமாகியும் சோலைராஜ், ஜோதி ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு இருவரும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி யடைந்து, குளத்தூர் காவல்நிலையத்திற்கு  தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு  வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆவேசப் போராட்டம்
இந்நிலையில் சாதி ஆணவ படுகொலை மேற்கொண்ட கொலை குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில்  கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்,கொலை செய்யப்பட்ட சோலைராஜ் தங்கைக்கு அரசு வேலை வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ,சிபிஎம்,விசிக  மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் பி.சம்பத், மாநில செயலாளர் மு.கந்தசாமி, மாவட்ட தலைவர் பொன்ராஜ், மாவட்ட செயலாளர் தி.சீனிவாசன், சிபிஎம் விளாத்திகுளம் தாலுகா செய  லாளர்புவிராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்ரவீந்திரன், மாநகர் செயலாளர் தா.ராஜா, புறநகர் செயலாளர் பா.ராஜா, உடன்குடி ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், விதொச மாவட்டச் செயலாளர் சண்முகராஜ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முத்து, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.பூமயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பி.சம்பத் பேட்டி
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் பி.சம்பத் கூறியதாவது :-

தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலை தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய- மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முன்வரவில்லை. இத்தகைய சூழல் சாதி வெறியர்களுக்கு தைரியம் அளித்து, சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக கொடூரமாகச் செயல்பட வும், அவ்வாறு திருமணம் செய்பவர்களை படுகொலை செய்யவும் தூண்டுகிறது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியை பொறுத்தவரை இத்தகைய படுகொலைகளை தடுப்பதற்கும், குற்றவாளி களை கடுமையாக தண்டிப்பதற்கும் இதற்கென தனிச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், இதற்கென தனி நீதிமன்றம் மூலம் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு காலதாமதமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட  குடும்பத்திற்கு உடனடி நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும், சாதிவெறி நடவடிக்கைக்கு எதிராக மக்களிடையே நல்லிணக்கப் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற வேண்டும்.குளத்தூரில் தற்போது நடந்துள்ள படுகொலை மிகக்கொடூரமானதாகும் இத்தகைய படுகொலைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும்,மனிதநேய அமைப்பு களும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

BSNL Employees Union Nagercoil