ஆகஸ்ட் 31இல் முடியும் 100 நாள் செயல்திட்டத்தில் இந்திய ரயில்வேக்கு தேவையானரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள், உதிரி பாகங்கள் ஆகியவற்றைத் தயாரித்து வரும் ஐ.சி.எப் உள்ளிட்ட
7 ரயில்வே உற்பத்தி தொழிற்சாலைகளையும், பெரம்பூர் கேரேஜ். லோகோ போன்ற 57 ரிப்பேர் ஓர்க் ஷாப்புகளையும் சேர்த்து “இந்தியன் ரயில்வே ரோலிங் ஸ்டாக் கம்பெனி லிமிடெட்” என்ற கார்ப்பரேட் கம்பெனியாக மாற்றப்படும். கார்ப்பரேட்மயம் என்பது தனியார்மயத்தின் முதல் படியாகும்.

சென்னை, ஜூலை 5- உலகப்புகழ்பெற்ற ரயில் பெட்டி தொழிற்சாலையான ஐசிஎப் ஆலையை தனியார் மயமாக்கும் மத்திய மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்து தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ரயில்வேயின் 7 உற்பத்தி தொழிற்சாலைகளை. ரயில்வே பராமரிப்பு தொழிற்சாலைகளை இந்தியன் ரயில்வே ரோலிங் ஸ்டாக் கம்பெனி லிமிடெட் என்று கார்ப்பரேட்மயமாக்கி தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், 55 வயது பூர்த்தி அடைந்தவர்கள், 30 வருட பணி முடித்தவர்களை கட்டாய ஓய்வில் அனுப்பும் முடிவை கைவிட வேண்டும், ரயில் பயணிகளுக்கான மானியத்தை கைவிடச் செய்து, லாபம் ஈட்டும் தடங்களில் மட்டும் எக்ஸ்பிரஸ் ரயில்களை அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் இயக்க அனுமதிக்கும் முடிவை கைவிட வேண்டும் – போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தபோராட்டம் நடைபெற்றது. ஐ.சி.எப். யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு), எல்.பி.எப், பாஜகவின் தொழிற்சங்கமான கார்மிக் சங்கம், ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து சங்க போராட்டக் குழு சார்பில் சென்னையில் உள்ள ஐ.சி.எப். பொது மேலாளர் அலுவகம் அருகே வெள்ளியன்று (ஜூலை 5) இந்த  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகுமார், பா.ராஜாராமன், எஸ்.ராமலிங்கம், சுரேஷ், மோகன் (சிஐடியு), வ.முரளிதரன், ரமேஷ் (எல்பிஎப்), ராஜேந்திரன் (ஏஐடியுசி), மகேஷ்பாபு (ஐசிஎப் எம்ளாயிஸ் யூனியன்), சுந்தர் (கார்மிக் சங்கம்), சுகுமார் (என்.எப்.ஐ.ஆர்), மோகன்தாஸ் (ஏஐஆர்எப்), மங்காராம் (எஸ்.சி. எஸ்டி), சண்முகம், கோபிநாத் (எஸ்.ஆர்.டி.எஸ்), ராமமூர்த்தி, சாந்தகுமார், சுரேஷ்பாபு உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

பேரணியாக வந்த தொழிலாளர்கள்
முன்னதாக ஐசிஎப் பர்னிஷிங் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நியூ ஆவடி சாலையில் இருந்து மேலாளர் அலுவலகம் வரை பேரணியாக வந்தனர். இப்போராட்டம் குறித்து ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யுனியன் பொதுச்செயலாளர் பா.ராஜாராம் கூறியதாவது: ரயில்வேத் துறையில் தனியார் நிறுவனங்கள் நுழையவும் அவர்களுக்கு அனைத்து சேவைகளிலும் சமவாய்ப்பளிக்கவும் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவெடுக்கப்பட்டது. இதன் அர்த்தம் என்னவென்றால் ஓடுகிற வண்டிகளில் பாதியளவு பிரதான வழித்தடங்கள் தனியாருக்கு திறந்து விடப்படும். இதற்கு பொருத்தமான தனியார் நிறுவனங்களை அடையாளம் காணும் பணியை மண்டல ரயில்வே பொது மேலாளரிடம் ரயில்வே வாரியம் ஒப்படைத்துள்ளது. 
ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயரும்
எரிவாயு மானியம் போல் ரயில் மானியத்தையும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரயில்வே தனியார்மயம் எனும் மத்திய அரசின் திட்டம் அமலானால் சாமானியர்கள் ரயில்களில் பயணம் செய்ய ஆம்னி பேருந்து கட்டணத்தை விட கூடுதலாக கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க நடத்தப்பட்ட பிரச்சாரம் போல், ரயில் கட்டணத்தில் உள்ள 47 விழுக்காடு மானியத்தை விட்டுக் கொடுக்கும்படி பயணிகளிடம் கருத்து கேட்கப் போவதாகவும் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மானியம் ரத்து செய்யப்பட்டால் 5- ரூபாய் டிக்கெட் 100 ரூபாயாக உயரும்.
ஆகஸ்ட் 31இல் முடியும் 100 நாள் செயல்திட்டத்தில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள், உதிரி பாகங்கள் ஆகியவற்றைத் தயாரித்து வரும் ஐ.சி.எப் உள்ளிட்ட 7 ரயில்வே உற்பத்தி தொழிற்சாலைகளையும், பெரம்பூர் கேரேஜ். லோகோ போன்ற 57 ரிப்பேர் ஓர்க் ஷாப்புகளையும் சேர்த்து “இந்தியன் ரயில்வே ரோலிங் ஸ்டாக் கம்பெனி லிமிடெட்” என்ற கார்ப்பரேட் கம்பெனியாக மாற்றப்படும். கார்ப்பரேட்மயம் என்பது தனியார்மயத்தின் முதல் படியாகும்.

ஒருவாரமாக போராடி வரும் தொழிலாளர்கள்
100 நாள் திட்டத்தின் முதல் நடவடிக்கையாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரேபரேலியில் உள்ள மாடர்ன் கோச் பேக்டரியை (எம்.சி.எப்) ரயில்பெட்டி தொழிற்சாலையாக மாற்றுவது என்று கேபினட் அமைச்சரவைக் கூட்ட குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முடிவை எதிர்த்து அங்கு கடந்த 1 வார காலமாக மாடர்ன் கோச் பேக்டரி தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இம்முடிவுக்கு எதிராக உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள டி.எல்.எப், மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் தொழிற்சாலை, பஞ்சாபில் உள்ள ரயில் கோச் பேக்டரி (ஆர்.சி.எப்), தமிழகத்தில் உள்ள ஐ.சி.எப். உள்ளிட்ட அனைத்து ரயில்வே உற்பத்தி தொழிற்சாலைகளிலும், ரயில்வே ஒர்க் ஷாப்புகளிலும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக இங்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு மூலம் ஆர்ப்பாட்டத்தை துவக்கியுள்ளோம். அரசு தனியார்மய முடிவை கைவிடவில்லையென்றால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

BSNL Employees Union Nagercoil