பொதுத்துறை இடிஎப் பங்குகள் மூலம் 10,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பங்கு விற்பனை வரும் 18ம் தேதி துவங்குகிறது.  சிறிய முதலீட்டாளர்கள் பொதுத்துறை இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஏற்ப, பொதுத்துறை இடிஎப் (சிபிஎஸ் இடிஎப்) திட்டத்தை 2014ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதில் வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட 22 நிறுவன பங்குகள் உள்ளன. முதன் முதலாக 2014 மார்ச்சில் வெளியிடப்பட்ட பங்குகள் மூலம் 3,000 கோடி திரட்டப்பட்டது.  பின்னர் 2017 ஜனவரியில் 6,000 கோடி, 2017 மார்ச் மாதம் 2,500 கோடி, 2018 நவம்பரில் 17,000 கோடி, கடந்த மார்ச் மாதம் ₹10,000 கோடி என இதுவரை 5 வெளியிடுகள் மூலம் 38,500 கோடி திரட்டப்பட்டுள்ளது.

 தற்போது 6வது பங்கு வெளியீடு வரும் 18ம் தேதி வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் ஓஎன்ஜிசி, என்டிபிசி, கோல் இந்தியா, ஐஓசி, பவர் பைனான்ஸ் கார்ப்பொரேஷன், பாரத் எலக்ட்ரானிக்ஸ், என்எல்சி இந்தியா உட்பட 11 பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனைக்கு வருகின்றன.  பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் கடந்த நிதியாண்டில் ₹85,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இது நடப்பு நிதியாண்டில் 1.05 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.