பங்குச்சந்தைகள் தொடர்ந்து நேற்றும் சரிவை சந்தித்தன. தொடர்ந்து 5வது நாளாக ஏற்பட்ட சரிவால், முதலீட்டாளர்கள் ₹5.86 லட்சம் கோடி இழந்தனர்.  மத்திய அரசு பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிப்பு அறிவிப்பை தொடர்ந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து பங்குகளை விலக்கி வருகின்றனர். அதோடு, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளும் முதலீட்டாளர்களுக்கு கவலை அளித்துள்ளன. ஆசிய வளர்ச்சி வங்கி நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என்று கணித்ததும் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. நேற்று தொடர்ந்து 5வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் நேற்று 135.09 புள்ளிகள் சரிந்து 37,847.65 ஆக இருந்தது. தொடர்ந்து 5 நாட்களில் சென்செக்ஸ் 1,367.99 புள்ளிகள் சரிந்துள்ளது. இதனால் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு ₹5,86,008.88 கோடி சரிந்து, ₹1,43,27,797.54 கோடி ஆகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நேற்று 59.75 புள்ளிகள் சரிந்து 11,271.30 ஆக இருந்தது.

BSNL Employees Union Nagercoil