பிஎஸ்என்எல் நிலங்களை கைமாற்ற மெகா ஊழல்

சென்னை, ஆக. 8- பி.எஸ்.என்.எல். நிறுவன நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்க முயற்சி நடைபெறுவதாக, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.அபிமன்யு குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொலைபேசித் துறை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மீட்பதற்காக ஒரு குறிப்பினை மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப உள்ளது. பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தை கடனில் இருந்து மீட்கும்  ஒருபகுதியாக, பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெற்றுள்ள வங்கிக் கடன்கள் அனைத்தும் சிறப்பு நோக்க நிறுவனம் என்ற அமைப்பிற்கு மாற்றுவது அதன் யோசனையாகும். கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் பட்டியலிடப்பட்டு, அவற்றை சிறப்பு நோக்க நிறுவனம் விற்றுக் கொள்ளலாம். அவ்வாறு பெரு நகரங்களில் 63 நிலங்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. இதற்கென இந்நிலங்க ளுக்கான மதிப்பினையும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த நிலங்களின் மதிப்பு மிகமிக மோசமாக குறைத்து மதிப்பிடப் பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். நிறு வனத்தின் கடனை அடைக்க வேண்டும் என்று சொல்லி அதன் நிலங்கள் அடி மாட்டு விலைக்கு சிறப்பு நோக்க நிறு வனத்திற்கு மாற்றப்படுகிறது. இந்தியாவின் பெரு நகரங்களிலும், பெருநகர மாநகராட்சிகளிலும் முக்கியமான பகுதிகளிலும்தான் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்த மான காலி மனைகள் உள்ளன. இந்த  நிலங்களின் இன்றைய சந்தை மதிப்பு  மிகமிக அதிகம். ஆனாலும் ‘புத்தக மதிப்பு’ என்ற பெயரில் இந்த நிலங் களை அடிமாட்டு விலைக்கு சிறப்பு நோக்க நிறுவனத்திற்கு மாற்ற விருக்கிறார்கள். சென்னை பெருநகரத்தில் உள்ள 8 இடங்களில் உள்ள காலி நிலங்களை சிறப்பு நோக்க நிறுவனத்திற்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் மாற்ற இருக்கிறது. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு 2753.67 கோடி ரூபாய் என பி.எஸ்.என்.எல். நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த 8 நிலங்களின் சந்தை மதிப்பு 3867.89 கோடி ரூபாயாகும். இதில் இருந்து சென்னை மாநகரில் மட்டும் பி.எஸ்.என்.எல். நிலங்களின் விலை 1114.22 கோடி ரூபாய் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

3 மடங்கு குறைவாக

திருவனந்தபுரம் கைமனம் மண்டல தொலைபேசி பயிற்சி மையத்திற்கு சொந்தமான 10 ஏக்கர் நிலமும் இந்த பட்டியலில் உள்ளது. ஒரு செண்ட் 10 லட்ச ரூபாய் என பி.எஸ்.என்.எல். நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஆனால் அங்கு ஒரு செண்ட் நிலத்தின் மதிப்பு 30 லட்ச ரூபாயாகும். 2013ஆம் ஆண்டே கேரள அரசு சாலை விரிவாக்கத்திற்காக இந்த நிலத்தை ஒரு செண்ட் 15 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. எனினும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மிகக் குறைந்த விலைக்கு இந்த நிலத்தை விற்க முடிவு செய்துள்ளது.  சிறப்பு நோக்க நிறுவனத்திற்கு இந்தியா முழுவதிலும் உள்ள 63 நிலங்களை இவ்வாறு மாற்றித்தர முன்வந்துள்ளன. பி.எஸ்.என்.எல். நிறுவனம் இவற்றின் சந்தை மதிப்பு 20.210 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளது. ஆனால் உண்மையில் இந்த நிலங்களின் சந்தை மதிப்பு பலமடங்கு அதிகமாக இருக்கும். நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களிலும் மாநகரங்களின் முக்கியமான மையங்களிலும் பி.எஸ்.என்.எல். நிலம் இருப்பதால் இந்த நிலங்களுக்கு கிராக்கி அதிகம் உள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவன நிலங் களை விற்பதற்காக உருவாக்கப் பட்டுள்ள சிறப்பு நோக்க நிறுவனம் இந்த நிலங்களை கார்ப்ரேட் நிறுவனங் களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும். இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாக்கப்படும் என அஞ்சுகிறோம். பி.எஸ்.என்.எல். நிறுவன நிலங்களை பணமாக்குகிறோம் என்ற பெயரில் மிகப்பெரிய மோசடி நடைபெற உள்ளது. இதை தடுக்குமாறு தொலைபேசித் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளோம். தொலைபேசித் துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பி.எஸ்.என்.எல். நிலம் பறிபோவதற்கு எதிராக சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெறும். ஊடகத்தினரும் இந்த பட்டியலை ஆய்வு செய்வதோடு எந்த அளவுக்கு  மிகப்பெரிய முறைகேடு இதில் அடங்கியுள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.