பொருளாதார மந்த நிலை!


மும்முரமான 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம், மிக முக்கியமான பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து கவலைப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. மே 23-ஆம் தேதிக்குப் பிறகு பதவியேற்க இருக்கும் அடுத்த அரசு, எதிர்கொள்ளப்போவது திணறிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தையும், நிதி நெருக்கடியையும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்த மத்திய அரசு பதவியேற்கும் ஒருசில வாரங்களில்,   நிதிநிலையறிக்கையைத் தாக்கல் செய்தாக வேண்டும்,  மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டாக வேண்டும். பொருளாதார இயக்கம் முற்றிலுமாக ஸ்தம்பித்துவிடவில்லை என்றாலும் வேகம் குறைந்திருக்கிறது. மோட்டார் வாகனங்களின் விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 8% குறைந்திருக்கிறது என்பது, நுகர்வோர்  தேவையில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதன் வெளிப்பாடு. மோட்டார் வாகனங்கள்  மட்டுமல்ல, நுகர்வோர் தேவைகள் அனைத்தின் விற்பனையுமே குறைந்திருக்கிறது.

கார்களின் விற்பனையை மட்டும் எடுத்துக் கொண்டால் 17% குறைந்திருக்கிறது. 2.48 லட்சம் கார்கள்தான் விற்பனையாகி இருக்கின்றன. இது கடந்த எட்டு ஆண்டுகளில் மிகக் குறைவான விற்பனை. ஓராண்டுக்கு முன்னர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாத விற்பனையான 2,98,504-வுடன் ஒப்பிடுவதாக இருந்தால், 20% குறைவு. இரு சக்கர வாகனங்களின் விற்பனை 16% குறைந்து 16 லட்சம் வாகனங்கள்தான் விற்பனையாகி இருக்கின்றன. இரு சக்கர வாகனங்கள் விற்பனையும்,  விமானப் பயணிகளின் எண்ணிக்கையும்கூடக் குறைந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

சரக்கு வாகனங்களின் விற்பனையும் மந்த நிலையில்தான் காணப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் 6% குறைந்து 68,680 வாகனங்கள்தான் விற்பனையாகி இருக்கின்றன. லாரிகள், “ட்ரக்’குகள், குறைந்த எடை சரக்கு வாகனங்கள் ஆகியவற்றின் விற்பனை குறைவது என்பது வணிகத் துறையும், உற்பத்தித் துறையும் மந்த கதியில் இயங்குவதன் அடையாளம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மோட்டார் வாகனங்களின் விற்பனையில் 
தேக்கம் ஏற்பட்டிருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.

முதலாவது காரணம், இந்தியாவின் பொருளாதாரம்  ஆரோக்கியமாக இல்லை என்பது. கடந்த 2018-19 நிதியாண்டின் கடைசிக் காலாண்டு நிலவரப்படி வளர்ச்சி விகிதம் வெறும் 6.6% மட்டுமே. கடந்த ஐந்து காலாண்டுகளில் இதுதான் மிகமிகக்  குறைந்த விகிதம்.  

இரண்டாவதாக, நிலையில்லாத கட்டுப்பாடுகளும், நடத்தை முறைகளும்கூட வாகன விற்பனைக் குறைவுக்குக் காரணிகள்.  வங்கிசாரா நிதி நிறுவனங்களில் காணப்படும் நிதிப் பற்றாக்குறையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக இரு சக்கர வாகனங்களின் காப்பீட்டுத் தொகை அதிகரித்திருப்பதும்கூட விற்பனையைப் பாதித்திருக்கின்றன. 

“ஊபர்’, “ஓலா’ போன்ற வாடகை கார் நிறுவனங்கள் நகர்ப்புறங்களில் செல்வாக்குப் பெற்று வருவதால், அதிகரித்த பெட்ரோல், டீசல் கட்டணத்தின் காரணமாகப் பலரும் வாகனங்கள் வாங்குவதைத் தவிர்க்க முற்படுவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பழைய மோட்டார் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதாலும், புதிய வாகன விற்பனையில் மந்த நிலைமை ஏற்பட்டிருக்கக்கூடும். 20 லட்சத்துக்கும் அதிகமாக மோட்டார் வாகன மறுவிற்பனை நடந்திருப்பதாகச் சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

உலகளாவிய அளவிலேயே 21-ஆம் நூற்றாண்டில் பிறந்த தலைமுறையினர், கடந்த தலைமுறையினர் போல, மோட்டார் வாகனங்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.  அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் இந்தப்  போக்கு இந்தியாவையும் தொற்றிக்கொண்டு விட்டதோ என்று மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள் அச்சப்படுகிறார்கள்.

மோட்டார் வாகன விற்பனைக் குறைவு குறித்து இந்த அளவுக்குப் பதற்றம் தேவைதானா என்று கேட்கலாம். அது வெறும் அடையாளம்தான். மோட்டார் வாகனம் என்பது  வெளிப்படையாகத் தெரியும் துறை. எல்லாத் துறைகளிலும் இதுபோல மந்த நிலையும், வீழ்ச்சியும் காணப்படுகிறது என்பதுதான்  கவலையை ஏற்படுத்துகிறது. 

கடந்த ஆண்டைவிட,  “கேபிட்டல் குட்ஸ்’ என்று சொல்லப்படும் மூலதனப் பொருள்கள் துறை 8.7%,  தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, “ஏ.சி.’ போன்ற நுகர்வோர் பொருள்கள் 5.1% , சோப்பு, ஷாம்பு, அழகு சாதனங்கள் உள்ளிட்ட நுகர்வோர் அன்றாட சாதனங்கள் 0.3% என்கிற அளவில் விற்பனைக் குறைவைச் சந்தித்திருக்கின்றன.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வணிக யுத்தமும் சரி, மேற்கு ஆசியாவில் காணப்படும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயரும் சூழலும் சரி, இந்தியப் பொருளாதாரத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும். எதிர்பார்ப்பதுபோல, பருவமழை பொய்க்காமல் இருந்தால், வேளாண் இடர் ஓரளவுக்குக் குறைந்து, அதனால் கிராமப்புறப் பொருளாதார நிலை சற்று சீர்படக்கூடும்.

இந்தப் பின்னணியில்தான், புதிய அரசு பதவியேற்க இருக்கிறது. உடனடியாகச் சில கொள்கை முடிவுகளை எடுத்து, பொருளாதார மந்த நிலையை மாற்ற முயற்சி எடுக்காமல் போனால்,  பின் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். தனிப்பெரும்பான்மை இல்லாத  கூட்டணி ஆட்சி  அமையுமானால், அந்த அரசால் பொருளாதார  நெருக்கடியை எதிர்கொள்ள முடியுமா என்கிற மிகப் பெரிய கேள்விக்குறியும் இந்தியாவை எதிர்நோக்குகிறது.

BSNL Employees Union Nagercoil