ராணுவத் தளவாட தொழிற்சாலைகளை தனியாருக்கு தர திட்டமா?

அம்பத்தூர், ஆக. 20- நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் விதமாக படைத்துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து பாதுகாப்புத்துறையை சேர்ந்த  அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஒரு மாத வேலைநிறுத்தம் நாடு முழுவதும் செவ்வாயன்று (ஆக. 20) தொடங்கியது. இதையொட்டி அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனம், சிஐடியு, ஐஎன்டியுசி, பி.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆவடி கனரக தொழிற்சாலை முன்பு அகில இந்திய பாது காப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முரளி (சிஐடியு), ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் சீனிவாசன், வேலுச்சாமி (தொமுச) மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம்  ஸ்ரீகுமார் கூறியதாவது: நாடு முழுவதும் இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் 41 பாதுகாப்புத் துறை  நிறுவனங்கள் உள்ளன. அரவங்காடு, ஆவடி, திருச்சி, புனே, மும்பை, கொல்கத்தா, ஜபல்பூர்,  கான்பூர், டோராடூன் ஆகிய முக்கிய நகரங்களில் இந்த தொழிற்சாலைகள் உள்ளன. மீதமுள்ள தொழிற்சாலைகள் பாதுகாப்பு கருதி பல்வேறு கிராமப் புறங்களில் உள்ளன. இந்த நிறுவன த்திற்கு சொந்தமாக 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.

1979ஆம் ஆண்டு 30 தொழிற்சாலைகள்தான் இருந்தன. அவற்றில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் வேலை செய்து வந்தனர். ஆனால் 2019இல் 41 தொழிற்சாலைகளாக மாறிய பின்னரும் வெறும் 82 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள், 40 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். ஆவடியில் 1979 காலகட்டங்களில் 19 ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். ஆனால் தற்போது வெறும் 9,500 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். பயிற்சி முடித்தவர் களை பணிக்கு எடுப்பதில்லை. நாட்டின் நிதிஅமைச்சர், இந்திய பொருளா தார கொள்கை அறிக்கையில், “இனி இந்திய அரசு நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக நிதி முதலீடு செய்யாது” என்று அறிவித்துள்ளார். இன்றைய தேவைக்கேற்ப தொழிற்சாலைகளை நவீனப் படுத்துவதற்கு அதிக நிதி தேவைப்படுகிறது என பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறி வரு கிறது. பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்த 18  விழுக்காடு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2011 – 12 ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டை விட 8 விழுக்காடு குறைவாகும்.

நிதியைக் குறைத்துவிட்டு, பாதுகாப்பு நிறு வனங்களின் நிலங்களுக்குக் குறி வைத்திருக் கிறார்கள். அரசுத் துறை என்பதால் இந்த  நிறுவனங்களை விற்க முடியாது. அரசு நிறு வனம் என்பதால்தான் அன்று பல்வேறு விவ சாயிகளும், பொதுமக்களும் இந்த நிறுவனங் களுக்கு நிலம் அளித்தனர். இப்போது இந்த நிலங்களை  கபளீகரம் செய்து கார்ப்பரேட்டு களின் வசம் கைமாற்றுவதற்காக, அரசு துறை என்பதை கார்ப்பரேஷனாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. கார்ப்பரேஷனாக மாற்றப்பட்டால் இந்த நிறுவன பங்குகளை தனியாரிடம் விற்பனை செய்ய முடியும். நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளிடம் விற்பனை செய்ய  முடியும். பின்னர் இந்த நிறுவனங்கள் தனியாரி டம் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும். காலப் போக்கில் இந்த நிறுவனங்கள் முற்றிலுமாக சீரழியும் நிலை ஏற்படும்.   இவ்வாறு அவர் கூறினார்.

BSNL Employees Union Nagercoil