நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார தேக்கநிலை இருப்பதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

மிட்மைன் சம்மிட் 2019 என்ற தலைப்பில் ஹீரோ க்ரூப் நேற்று (வியாழக்கிழமை) நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். 
ஆட்டோமொபைல் துறையில் சரிவு, தனியார் நிறுவனங்களில் ஆட் குறைப்பு என இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ள நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ராஜீவ் குமார் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அவர் “கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவுகிறது. ஒட்டுமொத்த நிதித்துறையும் இதுபோன்றதொரு சுழலில் சிக்கியதில்லை. அரசாங்கம் இந்த சூழலில் தனியார் துறையின் தயக்கங்களைக் களைய ஏதாவது உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

பிரச்சினை நிதித்துறையில்தான் நிலவுகிறது என்பதை அரசாங்கம் சரியாகப் புரிந்திருக்கிறது என்றால் இதனை உடனே செய்ய வேண்டும். 
இப்போது நிலவும் பணப்புழக்க தேக்க நிலை கிட்டத்தட்ட நொடிந்த நிலையை நோக்கிச் செல்கிறது. அதனால் உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இங்கே யாருக்கும் யார் மீதும் நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. அரசாங்கத்தை விடுங்கள் தனியார் துறையே இப்போது யாருக்கும் கடனளிக்க முன்வருதில்லை. எல்லோரும் பணத்தை காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமல், ஐபிசி ஆகியனவற்றிற்குப் பின்னர் கடந்த 4 ஆண்டுகளாகவே ஒட்டுமொத்தமாக பொருளாதார நிலைமை மாறிவிட்டது. அதற்கு முன்னதாக 10,20,30 ஏன் 35 சதவீத பணமாவது ரொக்கமாக புழக்கத்தில் இருக்கும். இப்போது அது மிக மிக குறைந்துவிட்டது.
இதற்கு காரணமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, இந்த சூழலில் வழக்கமான நடவடிக்கைகளையும் தாண்டி சில அசாதாரண நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக இந்த அரசாங்கம் தனியார் நிறுவனங்கள் மத்தியில் நிலவும் தயக்கத்தைப் போக்க உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்” என்றார்.

அவரின் இந்தக் கருத்து விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் குறித்த நொமுரா (NOMURA) அறிக்கையில், நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 5.7 சதவீதமாகக் குறைய வாய்ப்பிருக்கிறது. இதற்குக் காரணம் நுகர்தல் குறைந்தமை, பலவீனமான முதலீடுகள் மற்றும் சர்வீஸ் செக்டாரின் மந்தநிலை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜூலை – செப்டம்பர் இடையேயான காலகட்டத்தில் பொருளாதாரம் சற்று மீண்டெழ வாய்ப்புள்ளது என்று நொமுரா அறிக்கை கூறியுள்ளது சற்றே ஆறுதல் அளிக்கும் விஷயம்.

-ஏஎன்ஐ

நிர்மலா சீதாராமன் மழுப்பல் பேட்டி

‘பொருளாதாரம் சிறப்பாக உள்ளது’

புதுதில்லி,ஆக.23-  மோட்டார் வாகனத்துறை, நுகர் பொருள் வணிகம் பெரும் சரிவை சந்தித் துள்ள நிலையிலும்  பெரிய தொழில் நிறுவனங்களிலிருந்து ஆயிரக் கணக்கானோர் வேலையைவிட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ள அபாய நிலையிலும் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாகவும் வரி மற்றும் தொழிலாளர் துறையில் சீர்திருத்தங் கள் தொடரும் என்றும் மத்திய பாஜக அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் தொழில் வர்த்தகர்கள், தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் அச்சநிலையில் உள்ளனர்.
 

ஜிஎஸ்டி வரிச் சுமையால் பல் வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மத்திய பாஜக அரசு பின்பற்றும் மோச மான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்வதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பொரு ளாதார நிலை குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமன் தில்லி யில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக அளவில் பொருளாதாரம் மந்தமாகவே உள்ளது. பிற நாடு களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார நிலவரம் சிறப்பாகவே உள்ளது.  அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள் கூட பொரு ளாதார சரிவை சந்திக்கின்றன. பொரு ளாதார மந்த நிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு. உலகில் வேகமாக வளரும் பொரு ளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீத அளவிலேயே உள்ளது. அமெரிக்கா, சீனாவை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.  பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நடவடிக்கை களை எடுத்து வருகிறோம். பொரு ளாதார சீர்திருத்தம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக் கிறது என்று தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

 • வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும்.
 • கீழ் மட்டத்தில் உள்ள அனைத்தையும் உணர்ந்தே அரசு செயல்படுகிறது. 
 • இந்திய பொருளாதார நிலை சீராக உள்ளது, சிறுசிறு குறைபாடுகள் களையப்படும். ஜிஎஸ்டி வரியில் உள்ள சிக்கல்கள் களையப்படும், எளிமைப்படுத்தப்படும். எளிதாக தொழில் தொடங்கும் சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது.
 • ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். நீண்ட கால  குறுகியகால மூலதன ஆதாயங்கள் மீது கூடுதல் வரி விதிப்பு இனி கிடையாது.
 • மூலதன சந்தையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, நிதி எண் 2 சட்டம் 2019- ஆல் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு முந்தைய நிலை மீட்டமைக்கப்படு கிறது.
 • வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை.
 • பங்குசந்தையில் முதலீடு செய்வ தற்கு ஊக்கம் தரப்படும்.
 • ஜி.எஸ்.டி கவுன்சிலோடு வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தா லோசித்து, பணம் திரும்ப செலுத்தும்  முறையில் உள்ள சிக்கல்கள் களையப்படும்.
 • கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு மீறல்கள் கிரிமினல் குற்றமாக  கருதப்படாது. அதற்கு பதிலாக சிவில் குற்றமாகவே  கருதப்படும்.
 • அக்டோபர் 1, 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு அனைத்து வருமான வரி உத்தரவுகள், அறிவிப்புகள், சம்மன், கடிதங்கள் போன்றவை மையப்படுத்தப்பட்ட கணினி அமைப்பு மூலம் வழங்கப்படும்.
 • ஸ்டார்ட் அப் நிறுவன முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்கப்படும். சிறு, குறு நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் தொடரும். மத்திய  பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு நிறைவேற்றும்.
 • பொதுத்துறை வங்கிகளுக்கு பட்  ஜெட்டில் அறிவித்த மூலதன உதவி தொடரும். வங்கிகளுக்காக மூலதன
 • உதவி மூலம் கடன் வளர்ச்சி அதி கரிக்கும்.
 • வங்கிகளின் மறுமூலதனத்துக்காக அரசு சார்பில் இருந்து ரூ.70, 000 கோடி உடனடியாக ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.