இந்தியப் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்திருப்பதற்கு, உலகப் பொருளாதார காரணிகளை விட, உள்நாட்டு காரணிகளே அதிகம் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ்கூறியுள்ளது.முதலீடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் ‘மூடிஸ்’ முக்கியமானதாகும். முதலீட்டாளர்கள் சேவை அமைப்பான மூடிஸ், குறிப்பிட்ட கால அளவில், தனது ஆய் வறிக்கைகளை வெளியிடுவது வழக்கமாகும்.அந்த வகையில், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) குறித்த, புதிய ஆய்வை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி நடப்பு 2019-20 நிதியாண்டில் 6.2 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று பெருமளவில் மதிப்பீட்டைக் குறைத்துள்ளது.
2019 – 20 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.8 சதவிகிதமாக இருக்கும், 2020- 21 நிதியாண்டில் 7.3 சதவிகிதமாக இருக்கும் என்றே இதற்குமுன்பு மூடிஸ் கணித்திருந்தது. தற்போதோ அதனை2019 – 20 நிதியாண்டில் 6.2 சதவிகிதம், 2020 – 21 நிதியாண்டில் 6.7 சதவிகிதம் என்று குறைத்துள்ளது.

இந்தியாவில் புதிதாக வேலை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சுணக்கம், அதிகரித்து வரும் வேலையின்மை, கிராமப் புறங்களில் இருக்கும் பொருளாதார அழுத்த நிலை, ஒட்டு மொத்தமாக இந்தியாவில் நிலவும் நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து தேக்க நிலையை அடைந்திருப்பதாகவும், அதனடிப்படையிலேயே கணிப்பைக் குறைத்துள்ளதாகவும் மூடிஸ் குறிப்பிட்டுள்ளது.மேலும், இந்திய பொருளாதாரம், உலக பொருளாதார காரணிகளால் பாதிக்கப்படுவதை விட, உள்நாட்டுப் பொருளாதார காரணிகளாலேயே பெருமளவில் சிக்கலில் மாட்டித் தவித்துக் கொண்டு இருப்பதாகவும், இந்தியாவில் தொழில் நடத்துவதற்கான நம்பிக்கை குறைந்து போயிருப்பதன் காரணமாக, தனியார் முதலீடுகள் போதுமான அளவுக்கு வரவில்லை எனவும் குறிப்பிட்டு உள்ளது.