மத்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி நிதியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடியை வழங்க முடிவு செய்திருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.  மோடி அரசு கடந்த ஒரு வருடமாக மத்திய ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியை வழங்குமாறு நச்சரித்துக் கொண்டே இருந்தது. ரூ. 1லட்சம் கோடி அளவுக்கு உபரி நிதியை வழங்குமாறு கேட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு ரிசர்வ் வங்கி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தப் பிரச்சனையில்தான் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் பதவி விலகியதாகவும் கூறப்பட்டது.

முன்னதாக ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனும் மோடி அரசுடன் முரண்பட்டார். இந்தப் பின்னணியில்தான் மோடி அரசுக்கு மிகவும் இணக்கமான சக்தி காந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2018-19 ஆம் ஆண்டின் அரசின் வருவாய் ரூ. 17.3 லட்சம் கோடி என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் பொருளாதார அறிக்கையில் அரசின் வருவாய் ரூ.15.6லட்சம் கோடி என்றே குறிப்பிடப் பட்டிருந்தது. இந்நிலையில் 1.7லட்சம் கோடி எவ்வாறு மாயமானது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு நிர்மலா சீதாராமனிடம் பதில் இல்லை. இப்போது ரிசர்வ் வங்கி நிர்வாகத்தை நிர்ப்பந்தித்து பெறப்பட்டுள்ள தொகை மாய மான தொகையுடன் ஒத்துப்போவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கியின் உபரியை மோடி அரசு அபகரித்தது மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்ற பல்வேறு பொருளாதார நிபுணர் கள் எச்சரிக்கை செய்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் உபரி நிதி என்பது மிக மிக அவசரமான தேவைக ளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டியது. நாட்டின் பொருளாதாரம் மீள முடியாத நெருக்கடி நிலைக்கு சென்றாலோ அல்லது அரசின் கஜானா ஒரே நாளில் காலியாகிவிட்டது என்றாலோ மட்டுமே இந்த உபரிநிதியை கேட்க முடியும்.

அதேபோன்றதொருநிலை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது என மோடி அரசு ஒப்புக் கொள்கிறதா? இதைவிட மோசமான நெருக்கடி ஏற்படுமானால் அப்போது அதை சமாளிக்க என்ன வழி உள்ளது? உலகளாவிய நெருக்கடி ஏற்பட்டு இந்தியாவும் இதைவிட மோசமாக பாதிக்கப்பட்டால் என்னவாகும்? தங்களுடைய நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கியின் பணத்தை பெற்று செலவழித்த  பல நாடுகள் திவாலான அனுபவங்கள் உண்டு என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டு கின்றனர்.  முந்தைய காங்கிரஸ் அரசும், இப்போதைய மோடி அரசும் பின்பற்றிய நவீன தாராளமயமாக் கல் கொள்கை நாட்டின் பொருளாதாரத்தை நாசம் செய்துள்ளது. அதிலும் மோடி அரசு காட்டும் வேகமும் கார்ப்பரேட்டுகளுக்கு செய்யும் சேவக மும் இந்திய பொருளாதாரத்தை முட்டுச்சந்தில் நிறுத்தியுள்ளது. இதை சமாளிக்க மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கை விதை நெல்லை அவித்து தின்பதற்கு சமமாகும்.

BSNL Employees Union Nagercoil