மத்திய ரிசர்வ் வங்கி தனது 2018-19-ம் ஆண்டுக்கான அறிக்கையில் உள்நாட்டு நுகர்வு சரிவடைந்திருப்பதையும் தேவைக்குறைபாட்டினால் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனாலும் இது ஒரு சுழற்சி முறை சரிவுதானே தவிர ஆழமான கட்டமைப்புரீதியான மந்தநிலையல்ல என்று தன் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொள்கை கவன ஈர்ப்பு முழுதும் நாட்டில் எளிதாக வர்த்தகம் செய்ய முடியக்கூடிய சூழலை உருவாக்குவதிலும் உற்பத்தித் துறையில் சீர்த்திருத்தங்கள், மூலதனச் செலவீடுகளை விரைவில் அமல்படுத்துதல் உள்ளிட்டவைகளில் கவனம் இருக்க வேண்டும் என்று ஆர்பிஐ அறிக்கை தெரிவிக்கிறது.

“ஆனாலும், கட்டமைப்புரீதியிலான விவகாரங்களான நிலம், உழைப்புச் சக்தி, வேளாண் விற்பனை உத்தி ஆகியவற்றிலும் கவனம் தேவைப்படுகிறது. இது தொடர்பான கூறுபாட்டு பகுப்பாய்வு (The disaggregated analysis) தெரிவிப்பது என்னவெனில், உற்பத்தி, வாணிபம், ஹோட்டல்கள், போக்குவரத்து, கம்யூனிகேஷன் மற்றும் ஒலிபரப்புத் துறை, கட்டுமானம், வேளாண்மை ஆகிய துறைகளில் ஒரு பரந்துபட்ட சுழற்சிரீதியிலான சரிவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கை கூறுகிறது.

நுகர்வுத் தேவைப்பாட்டை அதிகரித்தல் தனியார் முதலீட்டை அதிகரித்தல் ஆகியவை 2019-20-ல் அதி முன்னுரிமை பெறுகிறது. இதில் வங்கி மற்றும் வங்கியல்லாத துறைகளை வலுப்படுத்துவது முக்கிய அங்கமாக விளங்குகிறது. உள்கட்டமைப்புச் செலவீடுகளை அதிகரித்தல், தொழிலாளர்ச் சட்டங்கள், வரிவிதிப்பு மற்றும் சட்டத்துறைகளில் கட்டமைப்பு சீர்த்திருத்தங்கள் அதிகம் தேவைப்படுகிறது, என்கிறது அறிக்கை.

இந்த அனைத்து அளவுகோல்களையும் கடைபிடித்து அமலாக்கம் செய்தால் வர்த்தகம் செய்வதை எளிதாக்கினால் 2024-25-ல் 5 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாகும் தொலைநோக்கை அடைவதற்கு உதவும்.

சிறப்புச் செய்தியாளர் (தி இந்து ஆங்கிலம்)