முக்கடலும் சந்திக்கும் குமரி முனையில் நீலக்கடலின் ஓரத்தில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. காந்தி நினைவு மண்டபம். மகாத்மா காந்தியின் அஸ்திகடலில் கரைக்கப்படுவதற்குமுன் வைக்கப்பட்ட பீடத்தைச் சுற்றி அழகிய கட்டிடக்  கலைநுட்பத்துடன் இம்மண்டபம் கட்டப்பட் டுள்ளது. தினந்தோறும் தேசம் முழுவது மிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் குமரி முனைக்கு வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முதலில் பார்வையிடுவது காந்தி நினைவு மண்டபத்தைத் தான்.

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்தன்று மட்டும் அவரின் அஸ்திவைக்கப்பட்ட இடத்தில் சூரியஒளிவிழும் வகையில் நுட்பமாக வடி வமைத்து இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அன்று இந்நிகழ்வைக் காண ஏராளமான மக்கள் இவ்விடத்தில் கூடுவார்கள். இந்த அழகிய மண்ட பத்தினுள்  மகாத்மா காந்தி, தேச விடுதலைப் போராட்டம் பற்றிய ஏராளமான புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன.

2019 அக்டோபர் 2 என்பது காந்தி ஜெயந்தி யின் 150வது ஆண்டாகச் சிறப்புப் பெறுகிறது. “அவரவர் மதங்களில் உள்ள நல்ல கருத்துக் களை கிரகித்து வாழ்வதே உயர்ந்த பண்பாகும். மதத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொள்வது அறிவீனமாகும்” என்று அவர் கூறியது எக்காலத்திற்கும் பொருந்துவதாகும். அதைப்போலவே “மக்களாட்சி தூய்மை நிறைந்ததாய் அமைய வேண்டும். பதவி ஏற்கும் தலைவர்களுக்கு எளிமை, அன்பு, சகிப்புத்தன்மை, சுயநலமில்லா சேவை மிகமிக இன்றியமையாதது. மக்கள் ஆட்சி அதிகாரம் ஒரு இடத்தில் குவியக் கூடாது. பரவல் முறை யில் குக்கிராமம் வரை இருக்க வேண்டும். அதுவே உண்மையான கிராம ராஜ்ஜியம்” என்று கூறினார். அத்துடன் “பண்பாட்டையும், அன்பை யும் பிறருக்கு சேவை செய்யும் மனப்பான்மை யையும், அறச் சிந்தனைகளைப் போதிக்கும் கல்வியே உண்மையான கல்வி. ஒவ்வொரு வரும் தாய்மொழி மூலம் கல்வி கற்று சிறந்த அறிவாற்றல் பெற வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார். இது போன்ற அவரின் சமூகக் கருத்துக்கள் இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. 

மகாத்மா எவ்வாறு இன்று புறக் கணிக்கப்படுகிறாரோ அதைப்போலவே அவரது நினைவுமண்டபமும் இன்று கேட்பார ற்றுப் போய்க் கிடக்கிறது. இந்த அழகிய மண்ட பம் பராமரிப்பின்றி எப்போது இடிந்து விழுமோ  என்ற அச்சத்தில் நிற்கிறது. இந்த நிலையிலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இம்மண்டபத்தைப் பார்வையிட்டுச் செல்கிறார்கள் என்பது மனதுக்குள் பீதியைக் கிளப்புகிறது. ஆங்காங்கே காங்கிரீட்டுகள் உடைந்து உள்ளிருக்கும் துருப்பிடித்த கம்பி கள் வெளியே தெரிகின்றன. குமரிமுனையின் அழகை ரசிக்கும் வண்ணம் மேல் மாடங் களுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்லும் சுற்றுப் படிக்கட்டுகளின் அடியில் பலமான கீறல்கள் விழுந்துள்ளன. சுற்றுச்சுவர்களில் ஆங்காங்கே பெரிய வெடிப்புகள். கூரையில் நீர்க்கசிவு ஏற்பட்டு பாழாகத் துவங்கியுள்ளது.

 (புகைப்படங்கள் எடுத்தது 21.9.2019)

குமரிமுனைக்கு பெருமை தருகிற கடலுக்குள் உள்ள விவேகானந்தர் மண்டப மும், அதன் அருகே கலைஞர் கருணாநிதி அவர்களின் முற்போக்குச் சிந்தனையால் அமைக்கப் பெற்ற 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும், காந்தி மண்டபம் கட்டப்பட்டதற்கு வெகு காலத்திற்கு பிந்தியவை. உப்புக் காற்றால் பாதிக்கப்படாதவாறு விவேகான ந்தர் மண்டபமும், திருவள்ளுவர் சிலையும் பராமரிக்கப்படும் போது வரலாற்றுப்புகழ் பெற்ற காந்தி மண்டபம் புறக்கணிக்கப்படுவதேன்? கோட்சேக்களின் புகழ் பாடும் காலமாக இப்போது இருப்பதால் வேண்டுமென்றே காந்தி புறக்கணிக்கப்படலாம். ஆனால் காந்திய வாதிகள் அதிகம் உள்ள குமரி மாவட்டத்தில், அவர்களால் கூட இது கவனிக்கப்படவில்லையா என்ற ஆதங்கம் எழுகிறது. 150வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியவாதிகளின் “150வது காந்தி ஜெயந்தி ரதம்” குமரிமுனை காந்தி மண்டபத்திலிருந்து வரும் நாட்களில் துவங்கி தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்ல இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெறுமனே தேசப்பிதாவின் புகழ் பேசுவதை விட அவரது நினைவைப் போற்றும் விதமாக எழுப்பப்பட்டுள்ள நினைவு மண்டபங்களைப் பாதுகாப்பதும் கடமையாகிறது என்பதை 150வது காந்தி ஜெயந்தி தினத்தில் உறுதியேற்பதே மகாத்மாவுக்குச் செய்யும் மிகப்பெரிய அஞ்சலி. வரலாற்றுப் பெருமை மிக்க கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் இடிந்து விழுவதி லிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்.

– கே.சண்முகம், மாநிலக்குழு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் –
கலைஞர்கள் சங்கம்

BSNL Employees Union Nagercoil