எப்போதும் மாற்றிச் சிந்திப்பது லத்தீன் அமெரிக்காவின் வழக்கம். தென்அமெரிக்கா விலும், மத்திய அமெரிக்காவிலும்  கரீபியன் கடல் அருகே சிறிதும் பெரிதுமாக 33 நாடுகளும் அவற்றின் 63 கோடி மக்களும் எப்போதும் உலகத்துக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கியுள்ளனர். அரசியல் என்றாலும், இலக்கியம் என்றாலும் புதுவழிகள் திறந்தவர்களின் ஒரு பெரும் வரிசை இந்த நாடுகளிலிருந்து உலகத்தின்முன் பல சமயங்களில் தலை உயர்த்தி வந்துள்ளனர்.இன்று லத்தீன் அமெரிக்கா மீண்டும் கவனத்திற்குரிய மையமாகிறது. அங்கு பல நாடுகளும்இடது பாதைக்குச் செல்கின்றன. எப்போதும் இடதுசாரிகளின் முன்மாதிரியாக விளங்குகிற கியூபாவுடன் சேர்த்துச் சொல்ல வேண்டிய நாடுகளின் பட்டியல் நீள்கிறது. வெனிசுலா, நிகரகுவா, மெக்ஸிகோ, பொலிவியா ஆகிய நாடுகளுடன் இப்போது இதோ அர்ஜென்டினா விலும் இடதுசாரிகள் அதிகாரத்திற்கு வந்துவிட்டார்கள்.
நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அர்ஜென்டினாவில் இடதுசாரி அரசு அதிகாரத்திற்கு வந்துள்ளது. அக்டோபர் 27 அன்று நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதியாக பெரொனிஸ்ட் கட்சியின் ஆல்பெர்ட்டோ பெர்னாண்டசும், துணை ஜனாதிபதியாக  முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டீனா பெர்னாண்டசும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 97 சதவீத வாக்குகள் எண்ணி முடித்த போது இடதுசாரியான ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் 48. 1 சதவீத வாக்குகளும், தற்போதைய வலதுசாரி ஜனாதிபதி மௌரிசியோ மாக்ரி 40. 4 சதவீத வாக்குகளும் பெற்றனர்.நீண்டகாலம் இராணுவ சர்வாதிகாரத்தின் கீழும், தொடர்ந்து வலதுசாரி ஆட்சியின் கீழும் இருந்த அர்ஜென்டினாவில் 2004-ஆம்ஆண்டு கிறிஸ்டீனாவின் கணவர் நெஸ்ட்டர் கிரிர்ச்னர் மூலம் இடதுசாரிக் கட்சி அதிகாரத்திற்கு வந்திருந்தது. ஆனால் 2015-இல் அது அதிகாரத்திலிருந்து வெளியேறியது. அதற்குப்பிறகு நான்கு ஆண்டுகள் நாடு வலதுசாரிகளின் வசமானது.  கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. வறுமை பத்து சதவீதம்வரை அதிகரித்தது. கட்டுப்படுத்த முடியாத பணவீக்கம். மக்கள் போராட்டக் களத்தில் இறங்கினர்.மீண்டும் அவர்கள் இடதுசாரிக் கட்சிகள் மீதுநம்பிக்கை வைத்தனர். கடுமையான போராட்டங்களின் இறுதியில் அவர்கள் வெற்றிபெற்றனர்.
லத்தீன் அமெரிக்காவில் வலதுசாரிகளின் முன்னேற்றம் என்று உலக முதலாளித்துவ ஊடகங்களால் ஊதப்பட்ட ஆட்சி மாற்றங்களுக்கு முடிவுகட்டும் விதத்தில் தற்போது லத்தீன்அமெரிக்க நாடுகள் ஒவ்வொன்றாக இடது பக்கம் சாய்கின்றன. 2012-இல் பராகுவேயில் பெர்ணாடோ லுகோய் அதிகாரத்தை இழந்ததுடன் அது வலதுசாரிகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கான நிகழ்வின் துவக்கமாக அமைந்தது. 2015-இல் அர்ஜென்டினாவுக்குப் பிறகுவெனிசுலாவில் நடைபெற்ற தேசிய நாடாளு மன்றத் தேர்தலில் மதுரோவின் கட்சியைவிட அதிக தொகுதிகள் வலதுசாரி கட்சிக்குக் கிடைத்தன. இடதுசாரித் தலைவரான ஜனாதிபதி டில்மா ரூஸெப்பை, நாடாளுமன்ற கண்டனத் தீர்மானம் மூலம், வலதுசாரிகள் 2016-இல் பிரேசிலில் வெளியேற்றினர். கொலம்பியாவில் இடதுசாரி ஃபார்க் கொரில்லாக்களுக்கும் சான்ட்ரோஸ் அரசுக்குமிடையே கையெழுத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கை க்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். ஹைட்டி யிலும் பெருவிலும் வலதுசாரி அரசுகள் அமெரிக்காவின் ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்தன. இடதுசாரி சக்திகளின் தொடர்ச்சியான இந்தத் தோல்விகள் இயல்பாகவே கார்ப்பரேட் ஊடகங்களுக்கு உற்சாகமளித்தன. அவர்கள் லத்தீன் அமெரிக்காவில் ‘இடதுசாரிகளின் மரணம்’ என்றே அறிவித்தனர். கடந்த ஆண்டு அக்டோபரில் பிரேசிலில் தீவிர வலதுசாரியான ஜெயிர் பொல்சானாரோ அதிகாரத்திற்கு வந்ததுடன் அங்கு இடதுசாரி இயக்கம் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக முதலாளித்துவ ஊது குழல்கள் எல்லோரும் உறுதிசெய்தனர்.
ஆனால், இதற்கிடையேதான் 2018 ஜூலை யில் ஆன்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரதோர் மெக்ஸிகோ ஜனாதிபதியாகவும், மே மாதம் சோசலிஸ்ட் தலைவர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெனிசுலா ஜனாதிபதியாகவும் இடதுசாரி முன்னேற்றங்களுக்கு வலுசேர்த்தனர். மத்திய அமெரிக்காவின் இடதுசாரியாகிய லொரேன்டினோ நிட்டோ கோர்ட்டிஸோ 2019 மேமாதம் பனமா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 2019 அக்டோபரில் சோசலிஸ்ட் இயக்கத்தின் தலைவர் ஈவோ மொரேல்ஸ் பொலிவியா ஜனாதிபதியாகவும் மீண்டும் வெற்றிபெற்றனர். இப்போது அர்ஜென்டினா தேர்தல் முடிவுகளும் வெளிவந்துள்ளன.அதுமட்டுமல்லாமல் 2014-ஆம் ஆண்டு உருகுவேயில் அதிகாரத்திற்கு வந்த  இடதுசாரி அரசு மீண்டும் மக்கள் தீர்ப்பைப் பெறுவதற்குத் தயாராகிறது. வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் இருதரப்பும் சமமாக இருந்தாலும் இடதுசாரிகளின் வெற்றியை மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலியில் மக்கள் எழுச்சி எழுச்சி
ஏற்கெனவே இடதுசாரிகளின் ஆட்சிகள் மலர்ந்துள்ள நாடுகளுடன், இப்போது இன்னுமொரு லத்தீன் அமெரிக்க நாடாகிய சிலியில், தீவிர வலதுசாரி அரசுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. தலைநகர் சாண்டியாகோவில் அரசுக்கு எதிராக நடைபெற்ற  பிரம்மாண்டப் பேரணியில் பத்து லட்சம்மக்கள் பங்கேற்றனர். மெட்ரோ ரயில் கட்டணஉயர்வுக்கு எதிரான போராட்டமாகத் துவங்கியதென்றாலும் அந்தப் போராட்டம் வலதுசாரி ஆட்சியைத் தூக்கியெறிவதற்கான வலிமையைப் பெற்றுள்ளது. லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளிலும் இத்தகைய பிரச்சனைகள் மூலம் தான் ஆட்சியின் மீதான அதிருப்தி வெளிப்படு கிறது. அது மக்கள் போராட்டமாக வளருவதும், பிறகு அது தேர்தலில் பிரதிபலிப்பதும் வழக்கமான நிகழ்வாக உள்ளது.லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி இயக்கங்களுக்கு ஆதரவான ஆட்சி மாற்றங்கள் பெரும்பாலானவையும் மகத்தான போராட்டப் பாரம்பரியத்தின் மூலம் மக்கள் வென்று பெற்றவையாகும். 1959-இல் பிடல் காஸ்ட்ரோவின், சே குவேராவின் தலைமையில் நடைபெற்ற கியூபப்புரட்சிதான் லத்தீன் அமெரிக்க அரசியலில் இடதுசாரி முன்னேற்றத்திற்கு ஒரு பாய்ச்சலை வழங்கியது. ஆனால், மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் சாத்தியமானது கியூபாவின் முன்மாதிரியில் நீண்டு நடைபெற்ற ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலமாக அல்ல. அவர்கள் போராட்டங்களின் மூலம் மக்களின் செல்வாக்கைப் பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். 1998-இல் வெனிசுலாவில் ஆட்சிப்பீடம் ஏறிய ஹியூகோ சாவேஸ், இந்த மாற்றத்தின் இயக்குச் சக்தியாக விளங்கினார்.
எப்போதும் – எல்லா அர்த்தத்திலும் அமெரிக்காவின் கொல்லைப்புறமாக இருந்த லத்தீன் அமெரிக்கா இன்று அமெரிக்காவுக்கு எதிராக எழுந்து நின்று விரல்சுண்டுகிற ஒரேவரிசை நாடுகளின் கூட்டமாக உள்ளது. அமெரிக்காவை அங்கீகரிக்காத எந்தவொரு ஆட்சித் தலைவரும் முன்பு லத்தீன் அமெரிக்காவில் வாழமுடியாத நிலை இருந்தது. அமெரிக்காவுக்குச் சவால் விடுகிறவர்களையெல்லாம் அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மூலமாகவும், நிதி கொடுத்து கலகங்களை உருவாக்கியும் அவர்
களை ஆட்சியிலிருந்து வெளியேற்றியது. இன்றும் அதே தந்திரங்களை அமெரிக்கா பிரயோகிக்கிறது. ஆனால் முன்னைப் போல் அது எதுவும் வெற்றி பெறுவது இல்லை.இன்று லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்கஎதிர்ப்பு நாடுகள் பரஸ்பரம் கைகோர்த்துச் செயல்படுகின்றன. இராணுவ, பொருளாதார ஒத்துழைப்புக்காக அமைப்புகளை உருவாக்கி அந்நாடுகள் ஒன்றுசேர்ந்து நிற்கின்றன. அமெரிக்காவின் தலையீடுக்கு வழிதராமல் இருப்பதற்கு இந்தக் கூட்டமைப்புகள் உதவியாக உள்ளன. என்றாலும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் உள்ளிட்டவற்றிலிருந்து தப்பித்துத் தாக்குப்பிடிப்பது சிரமம்தான். இடதுசாரி என்கிற முத்திரையில் அதிகாரத்திற்கு வருகிற கட்சிகள் எல்லாமே முழுமையானவை அல்லதான். ஆனாலும் நிகழ்வுப் போக்கில் மாற்றம் வெளிப்படுகிறது. லத்தீன் அமெரிக்கா இடதுசாரிப் பாதையில்தான் பயணப்படுகிறது. மேலும் பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் போராட்டங்களையும் ஆட்சி மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம். 

நன்றி: மலையாள நாளிதழ் தேசாபிமானி (31.10.2019)
தமிழில்: தி.வரதராசன்

BSNL Employees Union Nagercoil