விருப்ப ஓய்வில் செல்வோருக்கு, பென்ஷன் கம்யுடேஷன் மற்றும் 3-வது ஊதிய மாற்றம் குறித்த பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய, BSNL நிர்வாகமோ, DOT-யோ தயாராக இல்லை – ஊழியர்கள் சிந்தித்து சரியான முடிவை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கான WINDOW 3.12.2019 அன்று மூடப் படவுள்ளது.  அதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன.  VRS -2019 குறித்து சில முக்கியமான நிச்சயமற்ற அம்சங்களைத் தெளிவுபடுத்த BSNL நிர்வாகமோ, DOT –யோ இதுவரை முன்வரவில்லை. எனவே, தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வரும் பின்வரும் பாதுகாப்பு அம்சங்களை  BSNL நிர்வாகமோ, DOT –யோ உறுதிப்படுத்தப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

VRS- இல் செல்ல விரும்பும் ஊழியருக்கான் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்துவதற்காக, 1981 – ஓய்வூதிய கம்யுடேஷன் விதியில் திருத்தம் செய்வது வலியுறுத்தப் படுகிறது.  ஏனெனில், இந்த விதியின்படி, ஓய்வூதிய கம்யுடேஷனுக்கு, பணி ஓய்வு தினத்திலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஊழியர் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆனால், VRS- 2019- இன்படி, VRS-இல் செல்ல விரும்புவோருக்கு பென்ஷன் கம்யுடேஷன் அவர்களுக்கு 60 வயது ஆகும்போதுதான் அளிக்கப் படும்.

தற்போதைய விதிகளின்படி, VRS-க்கு ஓராண்டிற்குப் பிறகு, பென்ஷன் கம்யுடேஷனுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக வேண்டும். அது பெரும்பாலான ஊழியர்களுக்கு தேவையற்ற சிக்கல்களையும், பிரச்னைகளையும் உருவாக்கும்.

மேலும், 60 வயது ஆகும் முன்பே VRS- இல் செல்லும் ஊழியர் இறந்து விட்டால், பென்ஷன் கம்யுடேஷன் சலுகையை அவரது குடும்பம் பெற முடியாது. அது அந்தக் குடும்பத்திற்கு மிகப் பெரிய இழப்பாகும்.  இது தற்போதைய விதியில் உள்ள அம்சமாகும்.  இந்த அம்சத்திலிருந்து VRS-இல் செல்ல விரும்புவோருக்கு விலக்கு அளிக்குமாறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

பென்ஷன் மற்றும் பென்ஷனர்கள் நலத் துறையானது, 1981 பென்ஷன் கம்யுடேஷன் விதிகளில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே, மேற்காணும் இரண்டு விதிதளர்வுகளும் அளிக்கப் பட முடியும்.

3- வது ஊதிய மாற்றத்திற்கு தகுதி :

VRS -இல் செல்லும் ஓர் ஊழியருக்கு, அதற்குப் பின்னர், முன் தேதியிட்டு அமுலாக்கப் படும் ஊதிய மாற்றம் அளிக்கப் படாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெரிவிக்கிறது,

VRS- 2019 –இல் உள்ள அம்சத்தின்படியும், VRS- இல் செல்லும் ஊழியர்களுக்கு 3- வது ஊதிய மாற்றம் அளிக்கப் படாது. VRS -2019 விதியின் பாரா 8 (viii) பின்வருமாறு கூறுகிறது :

” இத்திட்டத்தின்படி வழங்கப்படும் பலன்கள்,  இத்திட்டத்தின்படியும், வேறு விதமாகவும் அளிக்கப் பட வேண்டிய அனைத்து பலன்களையும் முழுமையாகவும் இறுதியான பட்டுவாடாவாகவும் அளிப்பதாக இருக்கும். “

VRS -இல் செல்வோருக்கு அளிக்கப் படும் EXGRATIA தொகையே, முழுமையான இறுதியான பட்டுவாடாவாக இருக்கும்; அதற்குப் பிறகு 3-வது ஊதிய மாற்றம் அவர்களுக்குப் பொருந்தாது என்பதே இதன் பொருளாகும்.

 

VRS – இல் செல்வோருக்கு 3-வது ஊதிய மாற்றம் அளிக்கப் படுவதற்கான உறுதிமொழியை BSNL நிர்வாகம் அளிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.  எனினும், BSNL நிர்வாகம் இந்த உறுதிமொழியை அளிக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. VRS-இல் செல்வோர் 3-வது ஊதிய மாற்றத்தைப் பெற மாட்டார்கள் என்பதையே இது தெளிவாகக் காட்டுகிறது.

மேற்காணும் சூழ்நிலைமைகளின் காரணமாக, VRS- இல் செல்ல ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ள ஊழியர்கள், ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து, 3.12.2019 அன்று WINDOW மூடப் படும் முன்பு சரியான முடிவை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.