24 மணி நேர செய்திச் சேனல்கள், நெறியாள்கைக்கு எவரும் இல்லாத – முழுக்க முழுக்க செய்திகளை மட்டுமே தரப்போகிறோம் என்று களத்தில் இறங்கும் புதிய புதிய ஊடகங்கள்… தமிழகத்தில் எது நடந்தாலும் உடனுக்குடன் சுடச் சுட தருகிறோம் என மார் தட்டிக் கொள்ளும் பத்திரிகைகள், டிவிக்கள்… என எவர் கண்ணுக்கும் படவில்லை போலும் – வன்முறையில்லா, போதையில்லா தமிழகம் மற்றும் புதுவையை உருவாக்குவோம் என முழங்கி, சென்னை கோட்டையை நோக்கி போர்ப்  பரணி பாடிச் செல்லும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் எழுச்சிமிக்க நடைபயணம். திருவண்ணாமலையிலும் வடலூரிலும் இரண்டு குழுக்களாகப் புறப்பட்டு, தலா 200 கிலோ மீட்டர் என 400 கிலோமீட்டர் தூரம் நடை பயணமாக – கடந்த ஏழு நாட்களாக கடும் வெயிலிலும், கனமழையிலும் சென்னையை நெருங்கியிருக்கிறார்கள் சிவப்புச் சகோதரிகள். இந்தப் பயணம் நடந்து கொண்டிருக்கும் போதே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் மீதான கொடிய பாலியல் வன்குற்றங் கள் நடந்த பல சம்பவங்கள்; தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரே பாலியல் வல்லுற வுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து படுகொலை செய்யப்பட்ட கொடிய சம்பவம்; இவை மட்டு மல்ல, பாஜக எம்எல்ஏ உட்பட பாலியல் வன்குற்றங்களில் சிக்கியுள்ள செய்திகள் என – பெண்கள் மீதான கொடிய தாக்குதல்கள் அதி கரிக்கும் நிலையும், அதை ஒரு பொருட்டாகக் கூட கண்டுகொள்ளாத மத்திய – மாநில ஆட்சி யாளர்களும்; இப்படி ஒரு பயணம் மட்டுமல்ல நாடெங்கும் பெண்கள் பேரெழுச்சியுடன் வீதியில் இறங்க வேண்டியதன் அவசியத்தை கோடிட்டு காட்டுகின்றன.  காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங் களைத் தாண்டி சென்னையை நெருங்கும் நிலையில், தாம்பரத்தை தாண்டி நீங்கள் நடந்து போகக்கூடாது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து ஒருவார காலமாக தொலைபேசி மூலம் தொட ர்ந்து எச்சரிக்கை விடப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. “நீங்கள் போடும் தடைகளை உடைத்து கோட்டையை முற்றுகை யிடுவோம்” என மாதர் சங்கம் அறிவித்துள்ளது.  தமிழக அரசைப்  பொறுத்தவரை, எஸ்.வி. சேகர் முதல் பாக்கியராஜ் வரை எவர் வேண்டு மானாலும் பெண்களை இழிவுபடுத்தலாம்; எப்படி  வேண்டுமானாலும் பெண்கள் மீது, பெண் குழந்தை கள் மீது கொடிய வன்குற்றங்கள் இழைக்கப்பட லாம்; அவர்களுக்கெல்லாம் தாராள அனுமதி உண்டு; பல நேரங்களில் காவல்துறையின் பக்கத்  துணையும் உண்டு. ஆனால் அதை எதிர்த்து, பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின்  குரலாக, டாஸ்மாக் கடைகளால் வாழ்வு பறிக்கப்பட்ட பெண்களின் குரலாக, ஒட்டுமொத்த தமிழக பெண்களின் குரலாக – வீதியில் நடந்து செல்லும் மாதர் சங்கத்தின் பயணம் தமிழக அரசை அச்சுறுத்துகிறது.  தடைகளை உடைத்து முன்னேறட்டும் பெண்ணுரிமைப் போராளிகள். கோரிக்கை களுக்கு செவி சாய்க்கட்டும் தமிழக அரசு!