ஏர்டெல் நிறுவனம் மகாராஷ்டிரா, கொல்கத்தா, கோவா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தனது 3ஜி சேவையை நிறுத்தியதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏர்டெல் நிறுவனம் முதன்முதலாக கொல்கத்தாவில் தனது 3ஜி சேவையை நிறுத்தியது. இனி படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் 3ஜி சேவை நிறுத்தப்பட்டு 4ஜி சேவை மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கொல்கத்தாவை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா, கொல்கத்தா, கோவா, மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, சத்திஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும் தனது 3ஜி சேவையை நிறுத்தியுள்ளது ஏர்டெல். இதனால் 3ஜி வாடிக்கையாளர்கள் அனைவரும் 4ஜி மொபைலுக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏர்டெல்லின் இந்த நடவடிக்கை 3ஜி வாடிக்கையாளர்களை கடும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.

வரும் மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் 3ஜி சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு 4ஜி சேவை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச கட்டாய ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.23 லிருந்து ரூ.45 ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.