தன்னுடைய பிரசித்தி பெற்ற பிராண்டுகளில் ஒன்றும், இன்று பெரும் இழப்பைக் கொடுப்பதுமான ‘ஏர்-இந்தியா’வை விற்க மீண்டும் அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்புகள் இம்முறை அரசின் விற்பனை முயற்சி ஈடேறலாம் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. அதேசமயம், பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்பான இந்த அரசின் கற்பனை வறுமையையும் அது பறைசாற்றுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய விற்பனை முயற்சிக்கு உற்சாக வரவேற்பு இல்லாத சூழலிலேயே வாங்க விரும்புகிறவர்களுக்கு நிதிச் சுமைகளைக் குறைத்து, மீண்டும் ஒருமுறை வாய்ப்பை வழங்குகிறது மத்திய அரசு. இதன்படி, ‘ஏர்-இந்தியா நிறுவனத்தின் 100% பங்குகளும் விற்கப்படும். அத்துடன் சர்வதேசத் தடங்களில் குறைந்த கட்டணத்தில் சேவை அளிக்கும் ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ என்ற துணை நிறுவனத்தின் 100% பங்குகளும் விற்கப்படும். கூடவே, விமான நிலையங்களில் ‘ஏர் இந்தியா’ விமானங்களைக் கையாளும் ‘ஐசாட்ஸ்’ என்ற துணை நிறுவனத்தில் 50% பங்குகளும் சேர்ந்து விற்கப்படும். மேலதிகம், விமான நிறுவனத்தின் கடன் சுமையில் ரூ.40,000 கோடியை அரசே தன் பொறுப்பில் ஏற்கும். ஆக, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் கடனில் ரூ.23,286 கோடியைப் புதிதாக வாங்குவோர் ஏற்றால் போதும்.

முந்தைய முறை அரசு விற்பதற்கு முன்வந்தபோது, வாங்குவதற்கு வந்து, பிறகு பின்வாங்கிய நிறுவனங்களிடம் திரட்டிய தகவல்களின் அடிப்படையில், புதிய ஏலத்துக்கான நிபந்தனைகளும் சலுகைகளும் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்பது நன்றாகத் தெரிகிறது. ‘ஏர் இந்தியா’ நிறுவனம் ஒரு வெள்ளை யானையாக அரசின் பணத்தைக் காலிசெய்துகொண்டிருப்பதே அரசு இந்த அளவுக்குக் கீழே வரக் காரணம். இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 2012-ல் ரூ.35,000 கோடி கொடுத்தும்கூடத் தொடர்ந்து இழப்பே ஏற்பட்டுவருகிறது. விற்றுவிடுவது என்று முடிவெடுத்துவிட்டால், இப்போதைய அறிவிப்பு சரியானதுதான். ஒரே விஷயம், ‘ஏர் இந்தியா’, ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ ஆகிய நிறுவனங்களில் மொத்தம் 17,984 பேர் பணியாற்றுகின்றனர்; நிறுவனம் விற்கப்பட்டுவிடும் நிலையில், இவர்களுடைய எதிர்காலம் எப்படியாக அமையும் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும். ஆனால், மூச்சுக்கு முந்நூறு முறை தேசியம் பேசும் ஒரு கட்சி, ஒரு தேசியமயமாக்கப்பட்ட நிறுவனத்தை விற்பதில் காட்டும் அக்கறை ஆச்சரியம் அளிக்கிறது.

பொதுத் துறை நிறுவனங்களில் இன்று மிச்சமுள்ள கண்ணியப் பணிச் சூழல் வெளியே உள்ள வேலைவாய்ப்புச் சந்தைக்கு முன்னுதாரணமாகத் திகழக்கூடியது; ஒரு லட்சியவாத காலகட்டத்தின், ஒரு மேம்பட்ட பணிக் கலாச்சார விழுமியங்களோடு பிணைக்கப்பட்டது அது. சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வெளியிலும் தாக்கத்தை உண்டாக்கும் வல்லமை கொண்டது. மோசமான நிர்வாகம்தான் ‘ஏர் இந்தியா’வின் தோல்விக்குக் காரணம் என்றால், அதை விற்பதன் மூலம் அந்தத் தோல்வி சீரமைக்கப்பட முடியாது என்ற இடத்தை நாம் சென்றடைந்துவிடுகிறோம். இது சரியா? செயல்பாடின்மைக்கு அல்ல; செயல்பட வேண்டும் என்று கருதித்தான் ஒரு அரசுக்கு மக்கள் ஓட்டுகளை அளிக்கிறார்கள்.

BSNL Employees Union Nagercoil