எல்ஐசி பங்கு விற்பனையை கண்டித்து செவ்வாயன்று  (பிப்.4) நாடு முழுவதும் ஒரு மணிநேர வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தென் மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்ட மைப்பு துணைத்தலைவர் கே.சுவாமி நாதன் கூறினார். எல்ஐசி நிறுவனத்தின் பங்கு களை தனியாருக்கு விற்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டுள்ளது. எல்ஐசி ஊழியர்கள் மட்டு மல்ல எல்ஐசி முகவர்கள், எல்ஐசி யில் காப்பீடு எடுத்துள்ள நுகர்வோர் என பலர் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எல்ஐசி ஊழியர்கள் திங்களன்று (பிப்.3)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்மண்டல தலைமை அலுவலகத்தில் அனைத்து சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கே.சுவாமிநாதன் பேசியதாவது: 1956ல் 5 கோடி ரூபாய் மூல தனத்துடன் தொடங்கப்பட்ட எல்ஐசி நிறுவனத்தின் இன்றைய சொத்து மதிப்பு 32 லட்சம் கோடி ரூபாய். கடந்தாண்டு மத்திய அரசுக்கு எல்ஐசி ஈவுத் தொகையாக 2 ஆயிரத்து 611 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 12வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கி உள்ளது.

தனியாருக்கு கொடுப்பது ஏன்?

ஜிஎஸ்டி வசூல், மறைமுக வரிவசூலில் போன்றவற்றில் நிர்ணயித்த இலக்கை மத்திய அரசு எட்ட முடியாத நிலையில், அரசு நிர்ணயிக்கும் இலக்கையும் தாண்டி அனைத்து சேவைகளையும் எல்ஐசி வழங்கி வருகிறது. அத்தகைய நிறு வனத்தை தனியாருக்கு கொடுப்பது ஏன்?

98.4விழுக்காடு முதிர்வுத்தொகை

முகவர்களுக்கு சேர வேண்டிய முதிர்வுத்தொகையை 98.4 விழுக்காடு எல்ஐசி கொடுக்கிறது. 100 நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர், இதுபோன்ற இலக்கை எட்டிய ஒரு காப்பீட்டு நிறுவனத்தை காட்ட முடி யுமா? அமெரிக்காவின் ஏஐஜி,  ஆஸ்திரேலியாவின் ஏஎம்பி போன்ற நிறுவனங்கள் இந்தியா வில் 10 ஆண்டுகள் கூட நிலைக்க முடியவில்லை. ஆனால், 63 வரு டங்களாக ஆலமரம் போல் வளர்ந்து மக்களுக்கும், தேச வளர்ச்சிக்கும் எல்ஐசி சேவையாற்றுகிறது.

லாபகரமான நிறுவனத்தை கூறுபோடுவதா?

இந்தியாவில் 23 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இருந்தா லும் 72 விழுக்காடு வணிகத்தை எல்ஐசி மட்டுமே செய்து வரு கிறது. இத்தகைய லாபகரமான நிறுவனத்தின் பங்குகள் விற்பனை என்ற பெயரில் தனியார்மயத்தை நோக்கி செல்கின்றனர். இதனை எதிர்த்து செவ்வாயன்று  (பிப்.4) மதியம் 12 மணி முதல் 1 மணி வரை  நாடு முழுவதும் வெளிநடப்பு வேலை நிறுத்தம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். சென்னை பகுதி-1ன் பொதுச்  செயலாளர் எஸ்.ரமேஷ்குமார் தலை மையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் டி.செந்தில் குமார், எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சங்க தென்மண்டல பொதுச் செயலாளர் ரகு, எல்ஐசி வளர்ச்சி அதிகாரிகள் சங்க தென்மண்டல பொதுச் செயலாளர் ஆனந்த், எல்ஐசி ஊழியர் சம்மேளன தென்மண்டல பொதுச் செயலாளர் விஜயகுமார், ஐஎன்டியுசி தலை வர் ராஜபாண்டியன் உள்ளிட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

BSNL Employees Union Nagercoil