கடந்த 2019ம் ஆண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மிக மோசமான ஆண்டாகவே இருந்தது. ஏனெனில் அந்தளவுக்கு அடுக்கடுக்கான பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வந்தது என்றே கூறலாம். ஒரு புறம் வலுத்து வரும் போட்டி, மறுபுறம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு, இதற்கிடையில் அவ்வப்போது எட்டி பார்த்த ஐயூசி கட்டணம், கட்டண அதிகரிப்பு என பல பிரச்சனைகள் ருத்ர தாண்டவம் ஆடின.

ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசு உதவி கிடைத்தால், நிறுவனங்களை நடத்தலாம். இல்லையெனில் நிறுவனங்களை இழுத்து மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறும் அளவுக்கு போயின.

நிவாரணம் எதிர்பார்ப்பு

இந்த நிலையில் லண்டனை அடிப்படையாகக் கொண்ட வோடபோன் குழுமத்தின் தாய் நிறுவனமான வோடபோன் குருப் பிஎல்சி (Vodafone Group Plc), இந்தியாவில் ஆதித்யா பிர்லா குழுமத்துடன் உள்ள கூட்டு தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனம் மிக மோசமாக உள்ளது. மேலும் இந்த நிறுவனம் இந்திய அரசாங்கத்திடம் நிவாரணத்தினை எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அடுக்கடுக்கான பிரச்சனைகள் :

ஏற்கனவே அடுக்கடுக்கான பிரச்சனைகளில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட, வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு, உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பால் இந்த நிறுவனம் நிலை குலைந்து போனது. வாழ்வா? சாவா? என்ற போரட்டத்தில் துடித்துக் கொண்டிருந்த நிலையில், இந்த நிறுவனம் இந்திய அரசின் நிவாரணம் இல்லையெனில் நிறுவனத்தை மூட வேண்டியது தான் என்று முன்னரே கூறியது.

டிசம்பர் காலாண்டு வருவாய் எதிர்பார்ப்பு :

இத்தகைய மோசமான நிலைகளுக்கும் மத்தியில் இந்த நிறுவனம் தனது டிசம்பர் காலாண்டு  வருவாயினை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்திய அரசாங்கத்திடம் இருந்து பல்வேறு வகையான நிவாரணங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. 14 வருட போராட்டங்களுக்கு பிறகு கடந்த அக்டோபரில் தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை விடுவித்தது. இதற்கிடையில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சேர்த்து 1 டிரில்லியனுக்கும் மேல் நிலுவை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிலுவை தொகை :

இத்துறையில் நீடித்து வரும் பிரச்சனைகளை களைந்து, அரசு நிவாரணம் வழங்குவது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இத்துறை மீண்டு எழுவதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தாலும், ஏஜிஆர் நிலுவைத் தொகையானது இத்துறையினருக்கு ஒரு பெரும் அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்கள் ஜனவரி 24க்குள் நிலுவைத் தொகையை செலுத்துமாறும் கேட்டுக் கொண்டது மேலும் ஒரு அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது.

கடையை மூட வேண்டியிருக்கும்:

இந்த நிலுவை தொலையில் ஏர்டெல் நிறுவனம் 35,586 கோடி ரூபாயும், இதே வோடபோன் ஐடியா நிறுவனம் 50,000 கோடி ரூபாய்க்கு மேலும் நிலுவைத் தொகையை பாக்கி வைத்துள்ளன. ஏற்கனவே டிசம்பர் மாதத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு போதிய நிவாரணம் வழங்காவிட்டால் கடையை மூட வேண்டியிருக்கும் என்றும் கூறியிருந்தார்.

நிறுவனத்தை மூட வேண்டியிருக்கும்:

இந்த நிலையில் இவ்வளவு பெரிய தொகையை செலுத்தும் அளவுக்கு எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. எனவே பொருத்தமான கட்டண விதிமுறைகள் கிடைக்கவில்லை என்றால், இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழையான தொலைத் தொடர்பு நிறுவனங்களை மூடுவதற்கும் வழிவகுக்கும். இது 300 மில்லியன் சந்தாதாரர்களுக்கு இடையூறு விளைவிக்கும். லட்சக்கணக்கானோர் தங்களது வேலையை இழக்க நேரிடும் என்று வோடபோன் தெரிவித்துள்ளது.

 

BSNL Employees Union Nagercoil